COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

கரூர் தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்று

கரூர் கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினிதா 23.06.2014 அன்று வீடு திரும்பும் வழியில் மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என்று கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் புதிதாக முதல் தகவல் அறிக்கை மீண்டும் பதிவு செய்யப்பட்டது. அந்த ஊர் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இன்னும் பலரும் பள்ளி செல்லவில்லை.

இகக(மாலெ) கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.இராமச்சந்திரன் தலைமையிலான குழு  அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தது. விசாரணையில் குற்றம் நடந்த இடத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு ஒரு காரணியாக இருப்பதும் தெரிகிறது.

குற்றத்தின் கடுமை, குற்றவாளிகளை கைது செய்வதில் ஏற்படும் கால தாமதம், காவல் துறை விசாரணை பற்றி மக்களிடம் ஏற்பட்டிருக்கிற அதிருப்தி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப் படவும், தண்டிக்கப்படவும் வேண்டும், மாணவி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், டாஸ்மாக் சாராய கடைகளை மூட வேண்டும், தலித் மாணவர் அச்சமின்றி பள்ளிக்குச் செல்வதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இகக(மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இகக(மாலெ) கட்சியினருடன் தமிழ்நாடு மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். தோழர் இராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், தமிழ்நாடு மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க மாநில நிர்வாகி தோழர் பால்ராஜ் கண்டன உரையாற்றினர். ஏஅய்சிசிடியு திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Search