COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 16, 2014

மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி இகக மாலெ

முந்தைய அய்முகூ - 2 ஆட்சியின் அடையாளங்களான, சாமான்ய மக்கள் மீது தாக்குதல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் என்பதையே, மோடி அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கை, தொடர்கிறது; கடுமையாக தீவிரப்படுத்துகிறது.

ரூ.43,000 கோடி அளவுக்கு பொதுத்துறை முதலீடு அகற்றுதலுக்கு நிதிநிலை அறிக்கை கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. பாதுகாப்பு துறை, காப்பீடு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றில் 49% அந்நிய நேரடி முதலீடு அறிவித்துள்ளது.

வறிய மக்கள் பிரிவினரை நேரடியாக பாதிக்கும், நூறு நாள் வேலைத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பற்றியும், பணவீக்கத்தைக் குறைக்க முன்பேர வர்த்தகத்தில் வர்த்தகம் செய்யப்படுகிற பொருட்களின் பட்டியலில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை நீக்குவது போன்ற ஸ்தூலமான நடவடிக்கைகள் பற்றியும் நிதிநிலை அறிக்கை மவுனம் சாதிக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு இப்போதுள்ள ஒதுக்கீடு தொடரும் என்று அது பற்றி கேட்ட போது நிதியமைச்சர் சொன்னார். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. கடுமையான பணவீக்கம் இருக்கிறபோதும் மோடி அரசாங்கம் அதே கொள்கையைத் தொடர்கிறது.

சமூகத் துறைக்கான மொத்த செலவினம் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 2013 - 2014ல் 10.8% என்பதில் இருந்து 2014 - 2015 நிதிநிலை அறிக்கையில் 4.42%ஆகக் குறைந்துவிட்டது. மொத்த திட்டச் செலவினத்தில் 2013 - 2014ல் 26.7% என்பதில் இருந்து 2014 - 2015 நிதிநிலை அறிக்கையில் 16.72%ஆகக் குறைந்துவிட்டது.

ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கான உள்கட்டுமானத் திட்டம் அரசு - தனியார் பங்கேற்பு திட்ட வரையறைக்குள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு - தனியார் பங்கேற்பு முறை, பெரும் ஊழல் மலிந்ததாக, பொது மக்கள் பணத்தில் தனியார் லாபத்தை உறுதி செய்வதாக இருப்பதை அனுபவம் காட்டுகிறது. இந்த விசயத்தில் மிகப் பெரும் அளவிலான ஒதுக்கீடு, அரசு - தனியார் பங்கேற்பு முறையை லாபம் ஈட்ட பயன்படுத்தும் நிலவர்த்தக திமிங்கலங்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும்.

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவு; நாட்டின் இளைஞர்கள் பற்றி மோடி அரசாங்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இது பிரதிபலிக்கிறது. 5 புதிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெறும் ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இப்போது கையில் எடுத்துக்கொண்டுள்ள மோடியின் குஜராத் அரசாங்கத்தின் பிரிய திட்டமான, ஒரே ஒரு சர்தார் படேல் சிலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்மயத்தின் ஆட்கொல்லி விருப்பத்தின் தயவில் கல்வி விடப்படும், நாட்டில் உள்ள பெரும்பான்மை மாணவர்களுக்கு எட்டாத உயரத்துக்குச் சென்றுவிடும் என்று நிதிநிலை அறிக்கை சொல்கிறது.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை கூட, ணை ஆசிரியர்கள், ஆஷா, அங்கன்வாடி, பிற கிராமப்புற சுகாதார மற்றும் கல்வி ஊழியர்களின் பெரும்படையை கணக்கில் கொள்ள நிதிநிலை அறிக்கை தவறிவிட்டது. இளைஞர்களை, பெண்களை சுரண்டலுக்கு உள்ளாக்கும், கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதிக்கும், பாதுகாப்பற்ற, தற்காலிகமயமாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்ற முன்மாதிரியையே மோடி அரசாங்கம் தொடர்கிறது.

அதேபோல், 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் அமைக்க வெறும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையும் ஒரே ஒரு சிலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.200 கோடியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சரியாக நோக்குநிலையாக இருக்கும். நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்டுள்ள சில முடிவுகள் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடனடியாக பலன் தருவதாக உள்ளன.

இணையதள வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது; தொழில் கொள்கை மற்றும் முன்னேற்ற துறை முன்வைத்துள்ள வெள்ளை அறிக்கை, இணையதள வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது, பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் உணர்வுக்கு எதிராகச் செயல்படும் என்று சொல்லியுள்ளபோதும், இது நடந்துள்ளது. பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தை எதிர்ப்பது என்பது பாஜகவின் தோற்றமாக இருக்கிறது; ஆயினும் பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம், அதை பின்கதவு வழியாக அனுமதிக்கிறது.

ஒமிதியார் நெட்வொர்க் இந்தியாவின் தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா பணியாற்றியிருக்கிறார்; இணையதள வர்த்தக பகாசுர நிறுவனமான ஈபேயின் தலைமை நிர்வாக அதிகாரி பியரி ஒமிதியாருடன் மோடியின் குழுவுக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகத் தெரிகிறது. 2012ல் வோடாபோனுக்கு சாதகமான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட பின்னோக்கிய வரிவிதிப்பு சட்டத்தை நிதியமைச்சர் கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுள்ளார். இந்தியாவில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக வெளிநாடுகளில் நடக்கும் பரிமாற்றங்கள், பின்னோக்கிய வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.

இப்போது, இந்தச் சட்டத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு விசயத்திலும் அதை பரிசீலிக்க ஓர் உயரதிகார குழு அமைத்துள்ளார். ரூ.20,000 கோடி அளவிலான வோடாபோன் வரிப் பிரச்சனையில் இருந்து தான் விலகிக் கொண்டு அது தொடர்பான முடிவுகளை அவருக்கு அடுத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுப்பார் என்று சமீபத்தில் அவர் சொல்லியுள்ளதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வழக்கறிஞராக அவருக்கு அந்த நிறுவனத்துடன் இருந்த தொடர்பால், அதிகார துஷ்பிரயோகம் ஏற்படும் சாத்தியப்பாடு காரணமாக அவர் ஒதுங்கியிருக்கலாம். வோடாபோன் மற்றும் அதுபோன்ற வழக்குகளுக்கு நேரடி தொடர்புடைய பின்னோக்கிய வரிவிதிப்பு சட்டம், தற்போதைய நிதியமைச்சரால்  பலவீனப்படுத்தப்பட்டாலும், நிச்சயம் அதிகார துஷ்பிரயோகம் இருப்பதை அது காட்டும்.

நிதிநிலை அறிக்கை, மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு 10 ஆண்டு கால வரிவிலக்கு அளிக்கிறது. சுரங்கத் தொழிலில் இருக்கிற ‘தடைகள்’ நீக்கப்படும் என்றும் சுரங்கத் தொழில் ஊக்கம் பெறும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் பிழைத்திருப்பதற்காகவும், வனம் மற்றும் நிலம் மீதான தங்கள் உரிமைகளுக்காகவும் போராடும் பழங்குடியினர்தான் அந்தத் தடைகள். நமது விலைமதிப்பற்ற கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளையடிக்க திறந்துவிட்டு, பெரும் ஊழல்களுக்கு இட்டுச் செல்வதற்கு முடிவு கட்ட, சுரங்கத் தொழிலை தேசியமயமாக்குவதுதான் இப்போதைய தேவை. மாறாக, இந்தக் கொள்ளையின் பாதையில் தடையாக இருப்பவற்றை மேலும் அகற்றிவிடுவதாக நிதிநிலை அறிக்கை உரை குறிப்பிடுகிறது.

நேரடி மானியம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை அரித்துப் போகச் செய்து பலவீனப்படுத்தி விடும் ஒரு முறை நோக்கி நகர்வது பற்றியும் நிதிநிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

மொத்தத்தில், மோடி அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கை, அதன் திசைவழியில் அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, வறியவர் விரோத நிதிநிலை அறிக்கை; விலை உயர்வைக் கட்டுப்படுத்தவோ, மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு தந்த வாக்குறுதிப்படியான நிவாரணத்துக்கோ, அது ஏதும் செய்யவில்லை.

இகக மாலெ மத்திய கமிட்டி

Search