COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 16, 2014

அடுத்து வருவது... அம்மா சுடுகாடுகள்

விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராயநத்தம் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அப்புறப்படுத்தக்கோரி 23.06.2014 அன்று அவ்வூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதையும் இவர்களுள் 50 பேர் கணவனை இழந்த பெண்கள் என்பதையும் அதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று கணவனை இழந்த பெண்களை சந்தித்து உதவிகள் செய்வதாக அறிவித்ததையும் செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்து 04.07.2014 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழு அக்கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், ஊராட்சித் தலைவர், மூத்த குடிமக்கள், பள்ளி ஆசிரியர்கள், படிக்கும் சிறுவர்கள், ஊர் மக்கள், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிப் பிரமுகர்கள் என பலதரப்பட்ட பிரிவினரையும் சந்தித்தது.

     சுமார் 4000 மக்கள் தொகை உள்ள கச்சிராயநத்தம் ஊராட்சியில் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் 50க்கும் மேல் இருப்பது பேரதிர்ச்சி தரும் கொடூரமான உண்மை! பெரும்பாலும் முந்திரி விவசாயத்தையே நம்பி இருக்கும் சிறு, குறு ஏழை விவசாயிகளைக் கொண்ட இக்கிராமத்தில் 2003ல் துவங்கப்பட்ட சாராயக் கடை கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.20 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. விவசாயிகளின் நிலம், அரைகுறை முந்திரி வருமானம், பெண்களின் நகைகள், பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்கள் ஆகியவையே இந்த சாராயக் கடையின் வருமானமாக மாறியுள்ளது! இதனால் கச்சிராயநத்தம் கிராமத்தின் பொருளாதாரம் சிதைந்து சீரழிந்து போயுள்ளது. கிராமத்தின் அமைதியும் நிம்மதியும் உருக்குலைந்து கிராமமே சோக பூமியாகக் காட்சியளிக்கிறது. ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சி’ என்ற பாடலுக்கு மிகப் பொருத்தமான கிராமமாக இருக்கிறது கச்சிராயநத்தம்.

     வருமானம் தொலைந்து, வாழ்க்கை கெட்டு, பிள்ளைகள் படிப்பு நாசமாகி, குரூரமான அவலங்களை உருவாக்கியிருப்பது தான் ‘நல்ல சாராயத்தின்’  சாதனை! இந்த கிராமத்தில் போதுமான பஸ் போக்குவரத்து கிடையாது. அரசாங்கப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. ஆனால் சாராயக் கடை மட்டும் இருக்கிறது. இங்குள்ள ஊராட்சி உதவி பெறும் துவக்கப் பள்ளியில் குழு சென்றபோது 73 பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களுள் 30க்கும் மேற்பட்டவர்கள் அப்பா இல்லாத பிள்ளைகள் என்பது நெஞ்சை உலுக்குவதாகும். இதில் அம்மா இல்லாத பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டால் பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும்! இந்த ஒரு உண்மையே போதும் நல்ல சாராயத்தின் சாதனையைத் தெரிந்து கொள்ள.

  இந்த ஊரில் குடிக்கும் தண்ணீருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. 136 ஏக்கரில் வந்துள்ள ஆரூரான் சர்க்கரை ஆலையின் எரிசாராய ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மாசடைந்து விட்டது. ஜ÷ன் 28 அன்று ஜெயசூர்யா மருத்துவமனையால் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 110 பேர்களுக்கு சிறுநீரகக் கோளாறும் 100 பேர்களுக்கு சர்க்கரை நோயும் உள்ளது. கிராமத்திலுள்ள நிலத்தடி நீரை குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது சாராய ஆலையால் ஏற்பட்ட விளைவு. வன்னியர் சமூகத்தை மட்டுமே கொண்டிருக்கும் இக்கிராமம் தானே புயல் ஏற்படுத்திய துயரத்தையும் தாண்டிய துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

     இரண்டாண்டுக்கு முன்பாகவே ஊராட்சி மன்றம் சார்பாக சாராயக் கடையை எடுக்கச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி மூன்றுமுறை அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதை அடுத்தே பெண்கள் முன்னின்று மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தை ஜெயந்தி உள்ளிட்ட கணவனை இழந்த 50 பெண்களும் முன்னின்று நடத்தியுள்ளனர். அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சரி செய்யும் நோக்கில் மாவட்ட அதிகாரிகள் கச்சிராயநத்தம் சென்று விசாரித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. பல வாக்குறுதிகளும் அளித்துள்ளனர். ஆனால், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதியளிக்கப்பட்ட பின்னரும் தேவநாதன் மனைவி தமயந்திக்கு (55) இன்னும் கணவனை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை பத்திரிகை செய்தி அம்பலப்படுத்துகிறது. இதற்காக ரூ.5000 லஞ்சம் கொடுத்துள்ளார்.

1. கச்சிராயநத்தம் கொடும் சோகத்துக்கு தமிழக அரசாங்கமே பொறுப்பு. உடனடியாக அந்த கிராமத்திலுள்ள சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு, தொழில் செய்ய வட்டியில்லா கடன், பிள்ளைகளின் கல்வி, மருத்துவ வசதி, உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளையும், அரசு உயர்நிலைப்பள்ளி, 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

3. தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ.300 கூலி தர வேண்டும்.

4. ஆரூரான் சர்க்கரை ஆலை நடத்தும் எரிசாராய ஆலையை இவ்வூரிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

5. கச்சிராயநத்தம் சோகத்தை அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.

     இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 15 அன்று மாநிலம் முழுவதும் அனைத்திந்திய விவசாயத்   தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

     அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு எல்லாம் நடத்தும் ஜெயலலிதா அரசாங்கம், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால், சாராயத்தால் விளையும் சாவுகளைத் தடுக்காவிட்டால், தமிழ் நாட்டில் அம்மா சுடுகாடுகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

(கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் சி.அம்மையப்பன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.வெங்கடேசன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக விழுப்புரம் மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி, புரட்சிகர இளைஞர் கழக கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.ராஜசங்கர், ராமநாதன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர்)

Search