COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா ? - பகுதி 4

அரசு பற்றிய மார்க்சிய தத்துவத்தை, புரட்சியில் பாட்டாளிவர்க்கத்தின் கடமைகளை விளக்குவதற்காக, தோழர் லெனின் ‘அரசும் புரட்சியும்’ நூலை எழுதினார். 1917 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அந்த நூல் எழுதப்படும்போது அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் குறிப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது. அரசு என்ற தலைப்பில் மார்க்ஸ் உண்மையிலேயே என்ன சொல்லித் தந்தார் என்பதை மீண்டும் நிலை நாட்டுவது தமது முதன்மையான கடமையாக இருந்தது என்றார் தோழர் லெனின்.

அரசு பற்றிய மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் தத்துவத்தைப் பரிசீலிப்பதும் சந்தர்ப்பவாதிகள் அந்த தத்துவத்தில் எந்த அம்சங்களை புறக்கணித்தார்களோ அல்லது சிதைத்தார்களோ அந்த அம்சங்களின் குறிப்பான விவரங்களைக் கவனமாகக் காண வேண்டி இருந்தது என்று குறிப்பிட்டார் தோழர் லெனின். நூல் நெடுக மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் நீண்ட மேற்கோள்கள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. நம் மாபெரும் ஆசானே, அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் சொன்ன விசயங்களை, அவர்கள் சொன்ன வார்த்தைகளிலேயே சொல்லி மீண்டும் நிலை நாட்ட வேண்டி இருந்தது.

நாமும் மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் தோழர் லெனின் அரசு பற்றி சொல்லியிருந்த விசயங்களை, திரும்பவும் முடிந்தவரை, அவர்கள் வார்த்தைகள் மூலமாகவே எடுத்துச் சொல்ல முயற்சிப்போம்.

அரசு என்பது, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின், ஒரு விளைபொருளே ஆகும். அது, சமூகம் தீர்க்க முடியாத முரண்பாட்டில் சிக்கியுள்ளது, சமூகம் தீர்க்க முடியாத பகைமைகளில் பிளவுண்டுள்ளது, மற்றும் சமூகத்திற்கு அவற்றை அகற்றும் ஆற்றல் இல்லை என்பதற்கான ஒப்புதலே ஆகும். ஆனால் இந்தப் பகைமைகளும் மோதுகின்ற பொருளாதார நலன்கள் கொண்டுள்ள இந்த வர்க்கங்களும், தம்மையும் சமூகத்தையும் ஒரு பயனற்ற போராட்டத்தில் மூழ்கடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சக்தி தேவைப்பட்டது. இந்த சக்தி சமூகத்திற்கு மேலே நிற்பதாகத் தோற்றம் தந்தது. இந்த சக்தி மோதலைத் தணித்து (ஒழுங்கீன) எல்லைகளுக்குள் மோதலை வைப்பதாக இருந்தது. இந்த சக்தி சமூகத்திலிருந்து எழுந்தது. ஆனால் சமூகத்திற்கு மேலே தன்னை வைத்துக் கொண்டது. மேலும் மேலும் சமூகத்தினிடமிருந்து தனிமைப் பட்டது. இந்த சக்தியே அரசு ஆகும்.
-எங்கெல்ஸ்  1

‘தற்காலத்திய அரசில்’ அனைவருக்கும் வாக்குரிமை என்பது, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் விருப்புறுதியை வெளிக்காட்டுகிற, அதனைச் சாதிக்கிற ஆற்றலை, உண்மையிலேயே கொண்டுள்ளது என்ற தவறான கருத்தை, தாமும் பகிர்ந்து கொள்கிற சந்தர்ப்பவாதிகள், அதனை மக்கள் மனதில் விதைக்கவும் செய்கிறார்கள்.
- லெனின் 2

மனித சமூகத்தில் இதுவரை நிகழ்ந்த எல்லாப் புரட்சிகளும் வெற்றி பெற்றவரின் பரிசாக அரசைக் கைப்பற்றின. தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த ஒடுக்குமுறைக் கருவியை மென்மேலும் பலப்படுத்தின. முந்தைய எல்லாப் புரட்சிகளும் அரசு எந்திரத்தைக் கச்சிதப்படுத்தியுள்ள போது பாட்டாளிவர்க்கப் புரட்சி, அதனை உடைத்து நொறுக்க வேண்டும்.
 - லெனின் 3

சுரண்டும் வர்க்கங்களுக்கு சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக அதாவது மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய், ஆகக் குறைவான சிறுபான்மையினரது சுயநலத்திற்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எல்லாவித சுரண்டலையுமே அறவே ஒழிக்கும்பொருட்டு அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக, நவீன கால அடிமை உடைமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிறுபான்மையினருக்கு எதிராய், அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.
- லெனின் 4

அரசு உலர்ந்து உதிர்வது
மற்றும் வன்முறைப் புரட்சி

பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, முதலில் உற்பத்திச் சாதனங்களை அரசுடமை ஆக்குகிறது. ஆனால் இதன் மூலம் அது, பாட்டாளி வர்க்கமாகத் தான் இருத்தலை ஒழிக்கிறது; எல்லா வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் பகைமைகளையும் ஒழிக்கிறது; அரசு அரசாய் இருத்தலையும் ஒழிக்கிறது. இது வரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் செயல்பட்டதால், அதற்கு அரசு தேவைப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பொன்று தேவைப்பட்டது. இந்த சுரண்டும் வர்க்கத்துக்குரிய பொருளுற்பத்தி புற நிலைமைகளை நிலைநாட்டுவதற்காகவும் இதன் பொருட்டு இன்னும் முக்கியமாய் சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்த பொருளுற்பத்தி அமைப்பாலும் (அடிமை முறை, பண்ணைடிமை முறை, கூலி உழைப்பு முறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்குமுறை நிலைமைகளில் பலவந்தமாய் இருத்தி வைப்பதற்காகவும், இந்த சமூகத்திற்கு, அரசு தேவைப்பட்டது.

சமூகத்தின் முழுமையான அதிகாரபூர்வ பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக, அரசு விளங்கியது. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ, அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தின் அடிமை எஜமான குடிகளின் அரசாகவும், மத்திய காலங்களில் நிலவுடைமை பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத்தான், அரசால், இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது, சமூகம் முழுமையின் மெய்யான பிரதிநிதி ஆகிவிடும் போது, அது தன்னை தேவையற்றதாக்கிக் கொள்கிறது. இனி கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமல் போனதும், வர்க்க ஆதிக்கமும் - பொருளுற்பத்தி முறையில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெரும் பிழைத்திருத்தலுக்கான தனி மனிதப் போராட்டம் மற்றும் இந்த போராட்டத்திலிருந்து எழுகிற மோதல்களும் மட்டுமீறல்களும் - நீக்கப்பட்டதும், கீழ்ப்படுத்திவைப்பதற்கு எதுவும் இல்லாமல் போய்விடுகிறது, ஆதலால் ஒரு சிறப்பு ஒடுக்குமுறை சக்தியை ஓர் அரசை அவசியப்படுத்தும் எதுவும் இல்லாமல் போகிறது.

அரசானது, சமூகம் முழுமையின் பிரதிநிதியாக மெய்யாகவே முன்வந்து செய்திடும் முதல் நடவடிக்கை - அதாவது பொருளுற்பத்திச் சாதனங்களை சமூகத்தின் பெயரால் கையகப்படுத்தும் செயல் - அரசு என்ற முறையில் கடைசியாய் சுதந்திரமாய் அது எடுக்கும் நடவடிக்கையாக ஆகிவிடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறையிலுமாய் தேவையற்றதாகி, பிற்பாடு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களை ஆளும் அரசாங்கமானது, விசயங்களை நிர்வகிப்பதாய் உற்பத்தி இயக்கப் போக்குகளை நடத்துவதாய், மாற்றீடு செய்யப்படுகிறது. அரசு ‘ஒழிக்கப்படுவதில்லை’ அது உலர்ந்து உதிர்ந்து விடுகின்றது.
- எங்கெல்ஸ் 5

முதலாளித்துவ அரசை பாட்டாளி வர்க்க அரசு ஒடுக்குவது, ஒரு பலாத்கார புரட்சி இல்லாமல் சாத்தியமே இல்லை. பாட்டாளி வர்க்க அரசை ஒழிப்பது, அதாவது பொதுவில் அரசு என்பதை ஒழிப்பது.‘உலர்ந்து உதிரும்’ இயக்கப்போக்கின் மூலமாக மட்டுமே அல்லாமல் வேறு எந்த விதத்திலும் சாத்தியமில்லை.
- லெனின் 6

‘என்னைப் பொறுத்தவரை, நவீன சமூகத்தில் வர்க்கங்கள் நிலவுவதையோ அவற்றுக் கிடையில் போராட்டங்கள் நிலவுவதையோ கண்டுபிடித்த பெருமை, என்னைச் சாராது. எனக்கு நெடுங்காலம் முன்பாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும், முதலாளித்துவ பொருளியலாளர்கள் வர்க்கங்களின் பொருளாதார உடற் கூறியலையும் விவரித்திருந்தனர். நான் செய்ததில் புதியது என்னவெனில், பின்வருவனவற்றை நிரூபித்ததுதான்.

1. வர்க்கங்கள் நிலவுதல் பொருளுற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு மட்டுமே இணைந்ததாகும்.

2. இந்த வர்க்கப் போராட்டம் அவசியமாய் பாட்டாளி வர்க்க சமூகத்திற்கு இட்டுச் செல்கிறது.

3.இந்த சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும் ஒழிக்கப்படுவதற்கும் வர்க்கமில்லாத சமூகத்திற்குமான ஒரு மாறிச் செல்லும் கட்டம் ஆகும்.’
- மார்க்ஸ் 7

வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அங்கீகரிப்பவர்கள் இன்னமும் மார்க்சிஸ்டுகள் ஆகிவிடுவதில்லை. அவர்கள் இன்னமும் முதலாளித்துவ சிந்தனை மற்றும் முதலாளித்துவ அரசியலின் எல்லைக்குள்ளேயே இருந்துவிட முடியும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்ட தத்துவத்தோடு சுருக்கிவிடுவது, மார்க்சியத்தை குறுக்குவது, சிதைப்பது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடையதாக்குவது என்றுதான் ஆகும். எவரொருவர், வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரை நீட்டிக்கிறாரோ, அவரே மார்க்சிஸ்ட் ஆவார்.
- லெனின் 8

சந்தர்ப்பவாதம், வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதை தலையாய பிரச்சனையான முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் கட்டம் முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவது அதனை அறவே ஒழித்துவிடுவது என்பது வரை நீட்டிப்பதில்லை. எதார்த்தத்தில், இந்த காலகட்டம்தான் முன்னுதாரணமில்லாத தீவிர வடிவங்களில் முன்னுதாரணமில்லாத பலாத்கார வர்க்கப் போராட்ட காலகட்டமாகும், தொடர் விளைவாக, அரசானது இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாமல் ஒரு புதிய வகையில் ஜனநாயக இயல்புடையதாக (பாட்டாளி வர்க்கத்திற்கும் பொதுவாக சொத்தில்லாதவர்க்கும்) ஒரு புதிய வழியில் சர்வாதிகார இயல்புடையதாக (முதலாளித்துவத்திற்கு எதிரானதாக) திகழும்.
- லெனின் 9

திருக்குறளுக்கு, பரிமேலழகரிலிருந்து பலரும் உரை எழுதியிருந்தாலும், இறுதி ஆராய்ச்சியில், வள்ளுவர் எழுதிய குறளே ஆதாரமான அடிப்படையாகும். அதே போல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மேற்கோள்களை நேரடியாக அந்த மேற்கோள்களிலிருந்து புரிந்து கொள்வதே, சாலச் சிறந்ததாகும். இந்த எச்சரிக்கையுடன், நாம் பொதுவான வாசகர்களுக்காக, இந்த மேற்கோள்கள் சொல்லும் மய்யமான செய்திகளை சுருக்கமாகத் தர முயற்சி எடுக்கிறோம். (வசதி கருதி மேற்கோள்களுக்கு எண்கள் தரப்பட்டுள்ளன)

    அரசு என்பது, ஓர் ஒடுக்குமுறைக் கருவி. அது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான கருவியாகும்.

    அரசு என்பது, எந்தக் காலத்திலும் சமூகத்திலுள்ள எல்லோருக்கும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாக இருந்ததில்லை, இருப்பதில்லை, இருக்கப் போவதுமில்லை. இந்த விதி, அடிமைச் சமூக அரசு, பிரபுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு மற்றும் பாட்டாளி வர்க்க அரசு ஆகிய அனைத்து அரசுகளுக்கும் பொருந்தும்.

    அரசால், வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாது. அது, அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற முகமூடி தரித்துள்ள முதலாளித்துவ அரசாக இருக்கும் போதும், வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாது.

    2ஆம் எண் தரப்பட்டுள்ள மேற்கோள், அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம், ஒரு போதும், உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பிரதிபலிக்காது என்பதையும், அது ஒரு போதும் உழைக்கும் மக்களின் விருப்பங்களை சாதிக்காது என்பதையும் ஓங்கி அறைந்து சொல்கிறது. இது தொடர்பான மாயைகளைப் பரப்புபவர்கள், மார்க்சிஸ்டுகளல்ல, சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.

    அடிமைச் சமூக அரசு துவங்கி முதலாளித்துவ அரசு வரை, சிறுபான்மையினர் நலன்களுக்காக பெரும்பான்மையினரை ஒடுக்கினர். பிரபுத்துவ அரசு, அடிமை சமூக அரசை மேலும் பலப்படுத்தியது. முதலாளித்துவ அரசு பிரபுத்துவ அரசை மேலும் பலப்படுத்தியது. பாட்டாளி வர்க்க அரசு முதலாளித்துவ அரசை பலப்படுத்தாது, மாறாக அதனைத் தகர்த்தெறியும்.

    அரசு அமைவது எவருடைய விருப்பத் திற்கேற்பவும் இருக்காது. பொருளுற்பத்தியில் ஈடுபட்டுள்ள வர்க்கங்கள் கொண்டுள்ள சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வர்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை அடக்கியாள்வதற்கான புறநிலை தேவைக்கேற்பவே, அரசு அமையும்.

    அரசு உலர்ந்து உதிரும் என்ற எங்கெல்ஸ் மேற்கோளை, சந்தர்ப்பவாதிகள் வேண்டுமென்றே தவறாக விளக்குகிறார்கள். எங்கெல்ஸ் முதலாளித்துவ அரசை குறிப்பிட்டதாகவும், அந்த முதலாளித்துவ அரசில் மெல்ல மெல்ல மாற்றங்கள் கொண்டுவந்து அமைதியான நாடாளுமன்ற வழியில் அந்த அரசை உலர்ந்து உதிரச் செய்ய முடியும் என, மார்க்சியத்தை திரித்துச் சொல்கிறார்கள். முதலாளித்துவ அரசு தகர்த்தெறியப்பட வேண்டியது என்று போதனை செய்யும் மார்க்சியம், பாட் டாளி வர்க்க அரசு என்பதுதான், வர்க்கங்களே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கிய, அரசே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கிய, உண்மையில் சுதந்திரமான, மானுட சாரம் மீட்கப்படும் கம்யூனிச சமூத்தை நோக்கிய பயணத்தில், ஒரு மாறிச் செல்லும் கட்டம் என்கிறது. அராஜகவாதிகள், அரசை ஓர் இரவில் ஒழித்து விடலாம் என அபத்தமாகச் சொல்வதை, மார்க்சிய லெனினியம் நிராகரிக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தை அடக்கி ஆள, முதலாளித்துவம் மீளாமல் தடுக்க, பாட்டாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவை என அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறது.

    வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதைத் தாண்டி, பாட்டாளிவர்க்க அரசை நிறுவுவது, வர்க்கங்களில்லாத, அரசு இல்லாத சமூகம் நோக்கிச் செல்வது என்பதை அங்கீகரித்து செயல்படுபவர்கள் மட்டுமே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகள் ஆவார்கள்.

     பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரால் மார்க்சிய இலக்கியங்களில் திரும்பத் திரும்ப குறிப்பிடப்படும் பாட்டாளி வர்க்க அரசானது, உண்மையில் ஒரு புதிய வழியில், பாட்டாளிகளுக்கும் சொத்தில்லாதவர்களுக்கும் ஜனநாயக இயல்புடையதாக இருக்கும்; அதே நேரம் அது ஒரு புதிய வழியில், இதுகாறும் இல்லாத வகையில், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஆகச் சிறிய முதலாளிவர்க்கத்தின் மீது செலுத்துகிற சர்வாதிகாரமாகவும் இருக்கும்.

     உலர்ந்து உதிர்வது பாட்டாளிவர்க்க அரசாகவே இருக்கும். உற்பத்தி சக்திகளின் பிரும்மாண்டமான வளர்ச்சி, நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான வேறுபாடு மறைதல், மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையிலான வேறுபாடு மறைதல் மற்றும் தனிநபரை உழைப்புப் பிரிவினைக்கு உட்படுத்தி அடிமைத்தளையிடுதல் மறைதல் ஆகியவை நிகழும், சோசலிச பொருளாதாரத்தின் ஒரு வளர்ச்சிக் கட்டத்திலேயே அரசு உலர்ந்து உதிரும். அப்போது புதிய சமூகத்தில் புதிய மனிதர்கள் உருவாகியிருப்பார்கள். அவர்கள் அரசின் கீழ்ப்படுத்துதல் இல்லாமலேயே சமூக வாழ்க்கையின் சாதாரண விதிகளை ஒரு பழக்கமாகப் பற்றி ஒழுகுவார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பான மார்க்சிய லெனினிய கருத்துக்களை, அரசு பற்றிய கருத்துக்களோடு பொருத்திப் பார்க்கும் போது மட்டுமே அவை முழுமையடையும். அதனால்தான் அரசு குறித்த சில அடிப்படை விசயங்களை இங்கு பார்த்தோம். அடுத்த பகுதி யில் முதலாளித்துவ அரசுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் இடையிலான வேறுபாடுகளை, பாரீஸ் கம்யூன் அனுபவங்களில் நின்று கொண்டு மார்க்சிய லெனினியம் எப்படிக் காண்கிறது என்பதைப் பார்ப்போம். - தொடரும்




Search