COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, November 3, 2012

10

கட்டுரை

இருண்ட தமிழகம்: யார் தருவார் மின்சாரம்?

சந்திரமோகன்

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விட்டால், தமிழகத்தில் மின் வெட்டு பறந்து போய் விடும் என்ற மூடநம்பிக்கையில் இருந்த சிறிய தொழிற்சாலை உரிமையாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் தெளிவடைந்து விட்டனர். கடுமையான மின் வெட்டிற்கு எதிராக, மின் வாரிய அலுவலகங்களை, துணை மின் நிலையங்களை பொதுமக்கள் தினந்தோறும் முற்றுகை இடுகின்றனர். சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். தொழில் நகரங்களில், தொழில் மற்றும் வர்த்தக கழகங்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்புகளை நடத்துகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையற்ற மின்சாரமா என கேள்வி எழுப்புகின்றனர். கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களும் 8 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரையிலான மின் வெட்டிற்கு தப்பவில்லை. தநா தொழில் மற்றும் வர்த்தக கழகம், மதுரை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது. 3000 மெகா வாட் நுகரும் சென்னைக்கு இரண்டு மணி நேர மின் வெட்டும், 5000 மெகா வாட்டுகளுக்கு கூடுதலாக நுகரும் பிற பகுதிகளுக்கு 16 மணி முதல் 18 மணி நேரம் வரை மின் வெட்டு என்பது அரசியல் சட்ட விதி 14க்கு முரணானது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாக மின்சாரம் வழங்கிட வேண்டும் எனக் கோரியுள்ளது.

சூரிய சக்தி மின்சாரம் மின்வெட்டை போக்கிடுமா?

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மின் வாரியத் தலைவர்களாக இருந்த சி.பி.சிங், ஸ்வரன் சிங், ஹன்ஸ் ராஜ்வர்மா, சமீபத்தில் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டுள்ளனர். ஞானதேசிகன் வந்துள்ளார். அமைச்சர்களை மாற்றுவது முதல் ஆலோசனைக் குழுக்களை அமைப்பது வரை முதலமைச்சர் ஏதேதோ செய்கிறார். தற்போது, சூரிய சக்தி மின்சாரம் மூலம் மின் வெட்டிற்கு தீர்வு என அறிவித்துள்ளார். மழை நீர் சேகரிப்புத் திட்டம் போல இதுவுமொரு கண் துடைப்பு திட்டமே.

தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012ன் அடிப்படையில், மூன்றாண்டிற்கு 3000 மெகாவாட் மின் உற்பத்தியை உருவாக்குவது (2013 - 1000 மெகாவாட், 2014 - 1000 மெகாவாட், 2015 - 1000 மெகாவாட்) கொள்கை முடிவாகும். 24 மாவட்டங்களில், ஒவ்வொன்றும் 50 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி பூங்காக்கள் (மின் உற்பத்தி நிலையங்கள்), அரசாங்க அலுவலகங்கள், வீடுகளில் சூரிய மேற் கூரைகளை அமைத்து மின்சாரம் தயாரிப்பது, 3 இலட்சம் பசுமை வீடுகளில், 1 இலட்சம் தெருவிளக்குகளில் சூரிய சக்தி மின்சாரம், 6 சதம் சூரிய சக்தி மின்சாரத்தை பெருந்தொழிற்சாலைகளுக்கு கட்டாயமாக்குவது, நுகர்வோருக்கு மானியங்கள், சூரிய மின் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகள், சிட்கோ/சிப்காட் தொழில்பேட்டைகளில் முன்னுரிமைகள், 5 ஆண்டு கால வரிச்சலுகைகள் என ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி மின்சாரம் சுத்தமானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது என்பதெல்லாம் அறிந்ததேயாகும். ஆனால், பெரிய முதலீடுகளையும், பெரிய அளவு தொடர் பராமரிப்பு செலவுகளையும் கோரும் யானையைக் கட்டி பராமரிக்கும் திட்டமாகும். 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.10க்கும் அதிகமாக செலவாகும். 60 சதுரஅடி சூரிய மேற்கூரை மூலமாக ஒரு நாளைக்கு 5 யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சிறிய வீடொன்றிற்கு பயனளிக்கும் 1 கிலோவாட் திறனுள்ள மின் கருவியின் விலை ரூ.2.5 இலட்சமாகும். அரசாங்கம் மானியத்தை வழங்கினாலும் கூட, 5 சதம் வாட் வரி மூலமாக மானியத் தொகை பறிபோய் விடுகிறது. அரசு அலுவலகங்களின் அளவைப் பொறுத்து சூரிய மின்சாரம் பெற ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை முதலீடு தேவைப்படும். சூரிய மேற் கூரை, பேட்டரி போன்றவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்த்திடவோ, மாற்றிடவோ வேண்டும். இதற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் முதலீடுகளை மீண்டும் செய்திட வேண்டும். வீடுகளில், அலுவலகங்களில் பெறப்படும் சூரிய மின்சாரத்தை மின் தொகுப்பிற்கு (கிரிட்) கொண்டு சென்று சேர்க்க முடியாது.

மின் தொகுப்பிற்கு, சூரிய மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் மிக்க 1 மெகா வாட் மின் நிலையம் அமைக்க குறைந்தது ரூ.10 கோடி முதலீடு வேண்டும். கோவை மாவட்டம், அன்னூர் அருகே குப்பேபாளையத்தில், ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம் (நியுமெரிக் பவர் சிஸ்டம்) சூரிய சக்தி மின் நிலையத்தை அமைத்துள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளியை கிரகிக்கும் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தை கட்டி முடித்திட ரூ.10 கோடி முதலீடும், 6 மாத காலமும் ஆனது. நாளொன்றுக்கு 4000 யூனிட்டுகளை மட்டுமே உற்பத்தி செய்து மின் தொகுப்பிற்கு அனுப்புகிறது. தமிழக அரசாங்கத்தின் 3000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரக் கொள்கையை நிறைவேற்ற தேவையான முதலீடு (மானியம் உட்பட) ரூ.50,000 கோடிகளுக்கும் அதிகமானதாகும். யார் தருவார், முதலீடு? சூரிய சக்தி மின்சாரம் வருமா? தீருமா மின் வெட்டு?

தொலை நோக்கு பார்வை இல்லை

கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தின் மின்சார நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. 2.30 கோடி மின் நுகர்வேர்கள், 19 இலட்சம் விவசாய பம்புசெட்டுகள் என அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்ப (அய்டி) துறையில், 2006ம் ஆண்டில் ஏற்பட்ட எழுச்சியானது, மின்னணு சாதனங்கள், ஏசி போன்ற சொகுசுத் தேவைகளை அதிகரித்தபொழுது, திடீரென 25 சதம் மின்சார நுகர்வு உயர்வு ஏற்பட்டது. மின்சாரத் தட்டுப்பாடு துவங்கியது. நாளொன்றிற்கு மின்சாரத் தேவை 2007லேயே, 10,000 மெகாவாட்டுகளை கடந்து விட்டது. தற்போதைய தேவை 12,000 மெகாவாட்டுகளாகும்.

மின் வெட்டிற்கு அடிப்படையானக் காரணம் நுகர்வுக்கும், உற்பத்திக்கும் இடையில் பெருத்த வேறுபாடு நிலவுவதேயாகும். தேவைக்கேற்ற உற்பத்தி இல்லை. தநா.மின் வாரியத்தின் (மத்திய மின் திட்டங்கள், காற்றாலைகள் நீங்கலாக) உற்பத்தி (நிறுவியத்) திறன் (இன்ஸ்டால்ட் கெப்பாசிட்டி) 2001ல், 5222 மெகாவாட்டுகளாக இருந்தது. 2010ல் 5705 மெகாவாட்டுகளாக மட்டுமே உயர்ந்தது என மத்திய திட்ட கமிசன் தெரிவிக்கிறது. பத்தாண்டுகளில் வெறும் 483 மெகாவட்டுகளே உயர்ந்தது. தமிழகத்தின் பிரதானமான திட்டங்கள் பின்வருமாறு:

. 36 நீர் மின் திட்டங்கள் (காடம்பாறை, குந்தா, பெரியாறு, சோலையார் மற்றும் மேட்டூர்) மூலமாக 2186 மெகாவாட்.

. நான்கு அனல் மின் நிலையங்கள் (எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வட சென்னை) மூலமாக 2970 மெகாவாட்.

. வாயு அடிப்படையிலான மின் நிலையங்கள் (பேசின் பிரிட்ஜ், கோவில் களப்பால், குத்தாலம்) மூலமாக 515 மெகாவாட். கூடுதலாக கிடைப்பவை

. மத்திய மின் நிலையங்களிலிருந்து (நெய்வேலி அனல், கல்பாக்கம் அணு) 1500 மெகாவாட்.

. 2000க்கும் மேற்பட்ட தனியார் காற்றாலைகளில் இருந்து 300 மெகா வாட் முதல் 3000 மெகாவாட் வரை பருவ நிலைக்கு ஏற்ப ஏறி இறங்கும். ஆண்டு முழுமைக்கும் உத்திரவாதமாக எடுத்துக்கொள்ள முடியாத உற்பத்தி திறன்.

. தனியார் மின் நிலையங்களிடமுள்ள (பேசின் பிரிட்ஜ், சாமல் பட்டி, பிள்ளை பெருமாநல்லூர் போன்றவை) 1179 மெகாவாட். சுருங்கச் சொன்னால், தநா, மின் வாரியத்தின் உற்பத்தி திறன் 2010ல் 5705 மெகவாட்டுகள் மட்டுமே ஆகும். இதை விட கூடுதலாக தனியார் மின் முதலாளிகளின் உற்பத்தி திறன் இருந்தது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்ப்போம். ஆந்திராவில் 2001ல் 5876 மெ.வா. இருந்த உற்பத்தி திறன் 2010ல் 8482 மெ.வா. ஆகவும், கர்நாடகத்தில் 2001ல் 4118 மெ.வா. இருந்த திறன் 6615 மெ.வா. ஆகவும், மகாராஷ் டிராவில் 9744 மெ.வா. ஆக இருந்த உற்பத்தி திறன் 11,121 மெ.வா. ஆகவும் உயர்ந்தது. தமிழகம் மட்டும் பின் தங்கியது ஏன்? திமுக, அதிமுக அரசாங்கங்கள் பதில் சொல்லியாக வேண்டும். புதிய திட்டங்கள் போடப்பட்டனவா? பழைய திட்டங்களின் நிலை என்ன?

உற்பத்தியை துவக்காத புதிய திட்டங்கள்

2007ம் ஆண்டிலேயே, திமுக வின் ஆட்சியிலேயே மின் வெட்டுகள் தொடர்கதையாகி விட்டன. (சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு மின் வெட்டும் காரணமாக சொல்லப்படுகிறது) திமுக அரசாங்கம், 2007 - 2008ல் 5000 மெ.வாட்டுக்கு புதிய அனல்மின் நிலையங்களை (வடசென்னை, மேட்டூர், வள்ளூர், தூத்துக்குடி, உடன்குடி) மற்றும் சில நீர் மின் நிலையத் திட்டங்களை ஆரவாரமாக அறிவித்ததது.

). வட சென்னை அனல் மின் நிலைய இரண்டாவது திட்டம் 1200 மெகாவாட், ரூ.4650 கோடி மதிப்பீட்டில் 2008 ஜூலையில் துவக்கப்பட்டது. 2010 ஆகஸ்டில் உற்பத்தியை துவக்கி விடுமென அறிவிக்கப்பட்டது.

). மேட்டூர் அனல் மின் நிலைய மூன்றாவது திட்டம் 600 மெ.வா., ரூ.3100 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டது. 2011 ஜூலையில் உற்பத்தி துவக்குமென அறிவிக்கப்பட்டது. ). வள்ளூர் அனல் மின் நிலைய திட்டம் 1,2,மற்றும் 3 1500 மெ.வா., தநா.மின் வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டுத் திட்டமாக ரூ.8444 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டது. திட்டம் 1ம், 2ம் 2011 இறுதிக்குள் உற்பத்தியை துவக்கும் எனவும், திட்டம் 3 ஆனது, 2012 நவம்பரில் துவக்குமெனவும் அறிவிக்கப்பட்டது.

). தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்டம் 1, 2ல் 1000 மெ.வா. .நா.மின் வாரியம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கான கூட்டு முயற்சியாக ரூ.4909 கோடி மதிப்பீட்டில், 2009ல் துவங்கப்பட்டது. திட்டம் 1, 2012 மார்ச்சிலும், திட்டம் 2, 2012 ஆகஸ்டிலும் உற்பத்தியை துவக்குமென அறிவிக்கப்பட்டது.

பொதுவாக அனல் மின் நிலையங்களை கட்டி முடிக்க, அதிகபட்சம் 36 மாதங்கள் தேவைப்படுகிறது. துவக்கப்பட்டு 60 மாதங்களான பின்னரும் கூட முடிவடையாத நிலையில் புதிய திட்டங்கள் உள்ளன. ஏன்? .நா.மின் வாரியம் இந்த புதிய மின் திட்டங்களுக்காக பல்வேறு அரசு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை வாங்கியது. ஆனால், அந்த நிதியை வேறு தேவைகளுக்காக திருப்பி விட்டது. திமுக ஆட்சியானது 2007லிருந்து தொடரும் மின் வெட்டை சமாளிக்கவும், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மின் வெட்டை குறைப்பதற்காகவும், 2011 சட்டமன்ற தேர்தலின் போது மக்களின் கோபத்தை தணிப்பதற்காகவும், தனியார் முதலாளிகளிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கு இந் நிதியை செலவிட்டது. 2010 - 2011ல் மட்டும் இதற்காக ரூ.19,357 கோடியை செலவிட்டது. இப்படியாக புதிய திட்டங்களுக்கான முதலீடு சந்தையில் மின்சாரம் வாங்க திசை மாறியது. ஒரு புறம் புதிய திட்டங்கள் உற்பத்தியை குறித்த காலத்தில் துவக்கவில்லை. மற்றொரு புறம், ஊழல் ஆட்சியாளர்கள் 1 யூனிட் மின்சாரத்தை ரூ.17.78 வரை கொடுத்து வாங்கி, வழக்கமான கட்டணங்களுக்கு விற்பனை செய்தனர்; அய்டி நிறுவனங்களுக்கும் சலுகை கட்டணத்தில் வழங்கினர். நட்டத்தை மின் வாரியத்திற்கு ஏற்படுத்தினர். ஆட்சியாளர்களுக்கு ஊழலே இலட்சியமாக இருந்ததால், குறைந்த விலையில் வெளி மாநில மின்சாரம் வாங்குவதற்கானத் திட்டங்களும் போடப்படவில்லை. பழைய மின் நிலையங்களை அக்கறையோடு பராமரிக்கவும் இல்லை. தநா.மின் வாரியத்திற்கு ரூ.54,500 கோடி தொடர் இழப்பு ஏற்பட்டது. மீட்சி நிதியாக ரூ.10,000 கோடியாக தமிழக அரசாங்கம் வழங்கும் என ஜெயலலிதா அறிவித்தார். தனியார் மின்சார முதலாளிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்க வேண்டியுள்ள நிலுவைத் தொகை மட்டும் ரூ.11,000 கோடியாகும். காற்றாலை முதலாளிகளுக்கு வழங்க வேண்டிய 14 மாத பாக்கி மட்டும் ரூ.3500 கோடியாகும். யாருக்கு செல்லும் இந்த ரூ.10,000 கோடி மீட்சி நிதி?

புதிய மின் திட்டங்களின் மற்றொரு பட்டியலும் உள்ளது. தநா.மின் வாரியம் மற்றும் பெல் நிறுவனத்துக்கிடையிலான கூட்டு முயற்சியான உடன்குடி மின் திட்டம், எண்ணூர் இணைப்பு 600 மெ.வா. அனல் மின் திட்டம், திருவள்ளூர் - காட்டுப்பள்ளி 1600 மெ.வா. அனல் மின் திட்டம், செய்யூரில் 4000 மெ.வா. மாபெரும் அனல் மின் திட்டம் - எப்போது இத்திட்டங்கள் மின் உற்பத்தியை துவக்கும்? இத்திட்டங்களுக்கு முதலீடுகள் உள்ளனவா? தெரியாது.

பராமரிப்பற்ற பழைய மின் நிலையங்கள்

உற்பத்தி(நிறுவிய) திறன் (இன்ஸ்டால்ட் கெப்பாசிட்டி) என்பது ஒரு மின் நிலையத்தால் உற்பத்தி செய்வதற்குரிய தகுதியைத்தான் குறிக்கிறது. அதை உண்மையாக உற்பத்தியாகும் அளவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதோ மூடியிருக்க வேண்டிய நாற்தாண்டு கால பழமையான எண்ணூர் 450 மெ.வா. அனல் மின் நிலையம் அதன் உற்பத்தி திறனில் பாதியையே உற்பத்தி செய்கிறது. அதே போல, தூத்துக் குடியிலுள்ள 1050 மெ.வா. மின் நிலையங்களில், திட்டங்கள் 1, 2, 3 முப்பது ஆண்டுகளை கடந்துவிட்டன. திட்டங்கள் 4,5ம் 25 ஆண்டுகளாகி விட்டன. பழமையாகிவிட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், உற்பத்தியில் கடும் இழப்பு ஏற்படுகிறது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததும், தரக் குறைவான உதிரி பாகங்கள் வாங்கப்படுவதும் உற்பத்தியை கடுமையாக பாதிக்கின்றன. ஊழல் கொள்முதலால், நீர் மின் நிலையம், எரிவாயு மின் நிலைய டர்பைன்கள் தொடர்ந்து பழுதடைகின்றன. உற்பத்தியை இழக்கின்றன.

நிர்வாக சீர்கேட்டிற்கு மேட்டூர் அனல் மின் நிலையம் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தால், சில மாதங்களுக்கு முன்னர், மேட்டூர் அனல் மின் நிலைய திட்டம் 1 மற்றும் 2 மூடப்பட்டன. பழுது பார்ப்பதற்காக நீண்ட காலமானதால் 420 மெ.வா. உற்பத்தி தடைபட்டது. திட்டம் 3ல் 600 மெகாவாட், பிஜிஆர் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் கட்டி வருகிறது. 2011 ஜூலையில் உற்பத்தி துவக்கியிருக்க வேண்டும். சோதனை ஓட்டமே இப்போதுதான் துவங்கியுள்ளது. புதிய திட்டத்திற்கு நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால், தநா. மின் வாரியம் திட்டம் 2அய் பழுது பார்ப்பதென மூடிவிட்டது. சீனத் தொழில் நுட்பம் காரணமாகவும், மாறுபட்ட அளவு கரித்துண்டுகளை மின் வாரியம் வழங்கியதாலும் சோதனை ஓட்டமே சோதனைக்குள்ளாகிவிட்டது. புதிய நிலையமும் உற்பத்தியை முழுமையாக வழங்கவில்லை. பழைய நிலையங்கள் செயல்படவே இல்லை. ஆனால், மின் வாரிய இயக்குனர்கள், உற்பத்தி துவங்குவதைப் பற்றி ஜோதிடர்கள் போல் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனியார் முதலாளித்துவ ஆதரவுக் கொள்கை

கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல்வர் ஜெயா மின் வெட்டைப் போக்க எடுத்த முதல் நடவடிக்கை ஆகஸ்டு, 2011ல் லான்கோ இன்ப்ரா டெக் என்ற தனியார் கம்பெனியுடன் 630 மெ.வா. உற்பத்திக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தமாகும். சத்தீஸ்கர் மாநில நிலக்கரி சுரங்கங்களில், மத்திய அரசின் காரே பெல்மா - 2 திட்டத்தின் கீழ் தமிழக அரசிற்கு 59.20 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்க உரிமை கிடைத்தது. நமது அனல் மின் நிலையங்கள் நிலக்கரித் தட்டுப்பாட்டில் உள்ளன. அதிக விலை கொடுத்து வெளிநாட்டிலிருந்து வாங்குகின்றன. இதைப் பற்றி கவலைப்படாத முதல்வர், தனியார் முதலாளிக்கு மொத்த சுரங்கத்தையும் கையெழுத்திட்டு கொடுத்து விட்டார். இலவசமாக நிலக்கரியை பெற்றுக் கொண்டு, உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு ரூ.1.99 நாம் கொடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதுவல்லாமல், 14க்கும் அதிகமான தனியார் அனல் மின் நிறுவனங்கள் தூத்துக்குடி, நாகை, சீர்காழி கடலோரப் பகுதிகளை குறி வைத்து 20,000 மெ.வா. அளவிற்கு துவக்கிட காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தடையற்ற மின்சாரம்.

வாக்களித்த மக்களுக்கு வாட்டி வதைக்கும் மின்வெட்டா!

மின்வெட்டுக்கு உடனடியாக முடிவு கட்டு!

முடிவு கட்டும் வரை மின்கட்டணம் வசூல் செய்யாதே!

பாதிக்கப்பட்ட தொழிலாளர்க்கு மாதம் ரூ.5000 நிவாரணம் வழங்கு!

கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மின்வெட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை, வருமானம், வாழ்க்கை இழக்கும் நிலையை ஜெ. அரசு உருவாக்கியுள்ளது. தமிழக அரசும் மின்துறையும், இப்போது இருக்கிற மின்திட்டங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிபார்க்காமல் அலட்சியமாக காலம் கடத்துகிறது என்றும், இதை செய்தாலே பலமணி நேர மின்வெட்டை குறைத்துவிட முடியும் என்றும் விவரம் தெரிந்த மின்வாரிய அதிகாரிகளே ஆதங்கப்படுகிறார்கள். மின்வெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி கோவை மாவட்டத்தில் வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மன்நாயக்கன்பாளையம் பகுதிகளில் கண்டனக் கூட்டங்கள் நடத்தியது.

உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தடையற்ற மின்சாரம். வாக்களித்த மக்களுக்கு வாட்டி வதைக்கும் மின்வெட்டா! மின் வெட்டுக்கு உடனடியாக முடிவு கட்டு! முடிவு கட்டும் வரை மின்கட்டணம் வசூலிக்காதே! பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் வழங்கு என்ற கோரிக்கைகளோடு 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்டோபர் 18ல் பெரியநாயக்கன்பாளையம் அஞ்சுமுக்கு, யூனியன்டேங்க்ரோடு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், அக்டோபர் 19ல் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டிநாயக்கனூர், வீரபாண்டிபிரிவு, அக்டோபர் 20ல் கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலைநாயக்கன்பாளையம், காட்டூர், சாமிசெட்டிபாளையம், கூ.கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் கூட்ட அமைப்பாளர்கள் இரண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டிருக்க, பொதுமக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொண்டு ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். கூட்டத்தில் பேசிய தோழர்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் மின்வெட்டை நீக்குவேன் என்று கூறிய ஜெயலலிதா மக்களுக்கு, துரோகம் இழைத்துவிட்டார் எனக் குற்றம் சாட்டினார்கள். மாலெ கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜானகிராமன், மணிகண்டன், பிரிக்கால் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.சக்திவேல், நாகராஜ், ரவிச்சந்திரன், பாபு, வீரபாண்டி சக்திவேல், செல்லச்சாமி, குமார், குணபாலன், நடராஜ், எல்எம்டபுள்யு வாசு, சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகம் வெளிச்சம் பெற்றிட

நீர் மற்றும் நிலக்கரி ஆதாரங்களை, நிதி நிர்வாக ஒழுங்கோடு முறையாக பயன்படுத்தினாலே, குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும். கொள்முதல் செய்வதில் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் ஊழல்களை தடுத்து நிறுத்தினால் நட்டங்களை களைய

முடியும். தனியார் மின் முதலாளிகளுக்கு ஆதரவான போக்கை கைவிட்டு மின் வாரிய உற்பத்தி நிலையங்களை வலுப்படுத்தினாலே (புதிய மின் நிலையங்களை துரிதப்படுத்துவது, பழையவற்றை முறையாக பராமரிப்பது) மின் வெட்டுகளுக்கு முடிவு கட்ட முடியும். தமிழகத்தின் நடப்பு மின் தேவையான 12,000 மெ.வா.க்கும் கூடுதலான உற்பத்தி திறனை .நா. மின் வாரியமும், மத்திய மின் தொகுப்பு வரவுகளையும் கையில் வைத்துக் கொண்டு, பல மணி நேர மின்வெட்டில் தமிழகத்தை தள்ளியதற்கு ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தின் நிர்வாக சீர்கேடுகளுமே காரணமாகும். மின்வெட்டு நீடித்தால் போராட்ட களங்களில் உள்ள மக்கள் அரசியல் அரங்கிலும் ஜெயா ஆட்சிக்கெதிராக வலுவான எதிர்ப்பை காட்டுவார்கள்.

Search