COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 22, 2012

10

மண்ணில் பாதி

ஜனநாயக விரோத ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்!

இரோம் சர்மிளாவின் 12 ஆண்டுகால பட்டினிப் போராட்டம்!

கே.ஜி.தேசிகன்

மணிப்பூரில் 1947 - 1949ல் குறுகிய காலத்திற்கு மன்னர் தலைமையிலான அரசியலமைப்பு ஆட்சி (constitutional monarchy) செய்தது. இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டு பின் 1956ல் யூனியன் பிரதேசமானது. 1972ல்தான் மணிப்பூர் தனி மாநில அந்தஸ்து பெற்றது.

அஸ்ஸôம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற வடமேற்கு மாநிலங்கள் அவற்றின் சமச்சீரற்ற வளர்ச்சி காரணமாக மத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைபொருளாக ஆயுதம் தாங்கிய குழுக்களும் உருவாகின. மத்திய அரசு பல சமயங்களில் இந்தக் குழுக்களோடு பேசி ஒப்பந்தங்களையும் போட்டிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநில மக்களின் அபிலாசைகளை ஜனநாயகரீதியில் தொடர்ந்து பேசித் தீர்ப்பதற்கு மாறாக அங்குள்ள இயக்கங்களுக்கு தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்குவது, பிரச்சனைகளுக்கு இராணுவத் தீர்வை முன்வைப்பது என்ற நிலையையே மத்திய அரசு எடுத்து வந்திருக்கிறது. அதற்கான ஒரு வழிமுறையாகத்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை 1958ல் கொண்டுவந்தது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958:
கொடிய சட்டம்

இந்த சட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் கீழ் நிலை இராணுவ வீரர் கூட சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானலும் சுட்டுத் தள்ளமுடியும். போலி என்கவுண்டருக்காக ராணுவத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

சந்தேகம் என்றுச் சொல்லி யார் வீட்டில் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நுழைய இராணுவத்திற்கு உரிமை உண்டு. யாரை வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். எந்த ஒரு பகுதியையும் தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்க முடியும். வாரண்ட் இல்லாமல், காரணங்கள் சொல்லாமல் யாரையும் கைது செய்ய இராணுவத்திற்கு உரிமை உண்டு.

இப்படி கொடிய ஷரத்துகள் உள்ள இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் இராணுவம் வடகிழக்கு மாநிலங்களில் எல்லா அட்டூழியங்களையும் செய்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 5ந்தேதி ராணுவத்தின் ஒரு பிரிவான அஸ்ஸôம் ரைபிள்ஸ், இம்பால் - அஸ்வால் தேசிய நெடுஞ்சாலை மலோம் கிராமத்தில் போலி என்கவுண்டர் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரைக் கொன்று குவித்தது. இதில் தேசிய வீரச் செயலுக்கான விருது பெற்ற சிறுவனும் உண்டுள. இந்தக் கோரச் சம்பவத்தை நேரில் பார்த்த 27 வயது பெண் தான் இரோம் சர்மிளா சானு. இராணுவ வீரர்கள் யாரையும் சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். 12 வருடங்கள் தாண்டியும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. அவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு 15 நாள் காவல் தண்டனை பெறுகிறார். தண்டனை முடிந்து வந்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். சட்டப்படி ஒவ்வொரு 15 நாளிலும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

இதனால் ஜவஹர்லால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்ஸில் அவர் தனி அறையில் வைக்கப்பட்டு அவருக்கு மூக்கு வழியே கடந்த 12 ஆண்டுகளாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. வாய் வழியே அவர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. அவரது போராட்டம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டுவிட்ட பின்பும் இராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடும் பல இராணுவத்தினர் தப்பித்து விடுகின்றனர். இதே ராணுவம்தான் 2004ல் தங்ஜம் மனோரமாதேவி என்ற 32 வயது பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியது. இதற்கு எதிராகவும் மணிப்பூர் பெண்கள் இராணுவ தலைமையிடம் முன்பு ஆடையின்றி போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மணிப்பூர் பெண்களின் இந்தப் போராட்டம் இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுமையை உலகுக்கு உணர்த்தியது. இராணுவத்தின் பூட்ஸ் கால்களில் மிதிபட்டு நித்தம், நித்தம் மக்கள் நசுங்கி செத்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சட்டத்தை விலக்கிக் கொள்ள அரசும், ஆளும் வர்க்கக் கட்சிகளும் தயாராயில்லை. மக்கள் இயக்கங்களை, ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்களுக்கு இச் சட்டம் தேவைப்படுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் கூட, நாடாளுமன்றத்திலோ மேலவையிலோ விவாதமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு ஒரு கருத்தொற்றுமை நிலவுகிறது.

கிடப்பில் போடப்பட்ட கமிட்டி பரிந்துரைகள்

2005ல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் போடப்பட்ட கமிட்டி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துவிட்டது. ஆனால் அரசு அப்பரிந்துரைகளை இது நாள் வரை வெளியிட மறுத்து வருகிறது. பரிந்துரைகள் கசிந்து பத்திரிக்கைகளில் வெளியாகின. அதில் இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் ஜனநாயக விரோதமானது என்றும், அது நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதேபோல் உள்துறை அமைச்சகத்தால் போடப்பட்ட கமிட்டியும் தனது அறிக்கையில் இக் கொடிய சட்டத்தை நீக்கிவிடலாம் என்று பரிந்துரைத்தும் அமைச்சரவை கள்ள மவுனம் காத்து வருகிறது. இந்த அடிப்படைகளில் சட்டத்தை நீக்க வலியுறுத்தி ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் பல இயக்கங்களை இதுகாறும் நடத்தி வருகின்றன. அம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்பும் இச்சட்டத்தை நீக்கச் சொல்லி பரிந்துரைத்தது.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

ஆயுதப்படை சிறப்பு அதிராகரச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடாது என காங்கிரசாரும் பிஜேபியும் ஒத்தக் கருத்தில் இருக்கின்றன. அதனால்தான் இரோம் சர்மிளா பற்றி இருவரும் வாய் திறக்க மாட்டார்கள். நாட்டின் செல்வாதாரங்களைக் கொள்ளையிட உள்நாட்டில் பதற்றம் நீடித்து இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள்.

ஆனால் விசித்திரமான வகையில் இகக, இகக(மா) ஆகிய இடதுசாரி கட்சிகள் இந்தச் சட்டத்தை நீக்கம் செய்வது பற்றி மவுனம் காக்கின்றன. சமீபத்தில் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தேர்தலில் கூட எஸ்எப்அய், இந்தப் பிரச்சினை மீதான விவாதத்தில் சமாளிக்க முடியாமல் திணறியதைப் பார்க்க முடிந்தது. ஓமர் அப்துல்லா தான் ஜம்மு -காஷ்மீரில் இச் சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்று கூறியவர். மணிப்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, தான் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூரில் இச்

சட்டம் நீக்கப்படும் என்று பிரச்சாரம் செய்தார். மேற்கு வங்கம், ஜங்ஹல்மஹாலில் தீவிரவாதத்தை 8 மாதத்தில் ஒழித்தது போல், மணிப்பூரிலும் என்னால் செய்ய முடியும். அதனால் இச்சட்டம் தேவையில்லாமல் போகும் என்று பிரச்சாரம் செய்தார். மணிப்பூர் முதல்வர் இபோபிசிங் சட்டத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகிறார்.

இகக(மா.லெ) மட்டுமே இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இயக்கம் நடத்துகிறது. ஜேஎன்யு தேர்தலில் அய்சா சட்டத்திற்கு எதிராக வலிமையான கருத்துரு வாக்கம் செய்தது.

இரும்பு மனுஷி இரோம் சர்மிளா

தனது வலிமையான போராட்டத்தின் மூலம் உலக கவனத்தைப் பெற்றுள்ள இரோம், தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை வாங்க மறுத்துவிட்டார். இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு விருதுகளை பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். பிரதமரும், முக்கிய தலைவர்களும் உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.

அவரை ஒவ்வொரு முறை கைது செய்யும் போதும் அதிகபட்சமாக 1 வருட சிறைத் தண்டனை தான் வழங்க முடியும். ஒரு வருடம் கழித்து மீண்டும் கைது செய்யப்படுவதற்காகவே அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

நம் நாட்டு ஊடகங்கள் அவரது 12 ஆண்டுகால போராட்டத்தையும், அவர் கோரிக்கையின் நியாயத்தையும் எடுத்துச் செல்லத் தயாரில்லை. அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு கிடைத்த ஊடக கவனம் இரோம் சர்மிளாவுக்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் மணிப்பூர் பெண்களும், நாடு முழுவதுமுள்ள ஜனநாயக இயக்கங்களும் இரோம் சர்மிளாவின் விடாப்பிடியான போராட்ட உணர்வுகளை சுவீகரித்துக்கொள்வார்கள். கருப்பு ஆள் தூக்கிச் சட்டங்கள், ஒடுக்குமுறைகள் இல்லாத சமச்சீரான மக்கள் சார்பு வளர்ச்சிக்கான போராட்டத்தில் மேலும், மேலும் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

Search