COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, November 3, 2012

6

விவாதம்

இகக (மாவோயிஸ்ட்)ன் இடது சாகசவாதம்:

அதன் உள்ளிருந்தே எழும் கேள்விகள்

அரசியல் பார்வையாளர்

 

இகக (மாவோயிஸ்ட்)ன் ஒடிஷா மாநில அமைப்புக் கமிட்டியின் செயலாளர் சப்யசாஷி பண்டா சமீபத்தில் வெளியேற்றப்பட்டிருப்பது மாவோயிஸ்ட் கட்சிக்குள் மீண்டும் பதற்றத்தையும், அதன் நடைமுறை பற்றிய காத்திரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இகக (மாவோயிஸ்ட்) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும், பொதுச் செயலாளருக்கு எழுதியிருக்கும் நீண்ட கடிதம் மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி மூலமும் பண்டா கட்சிக்கும் அவருக்குமுள்ள வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துரைத்திருந்தார். அவர் ஏற்கனவே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் ஒடிஷா மாவோயிஸ்ட் கட்சி என்ற அமைப்பையும் ஏற்படுத்திவிட்டதாகவும் அதன் பின் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருப்பது காலம் கடந்த செயல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பண்டாவின் எதிர்கால அரசியல் வழி என்பது தெளிவற்றதாகவே இருக்கிறது. ஆனால் மாவோயிஸ்ட் தலைமைக்கு எதிராக அவர் எழுப்பியிருக்கும் விவாதங்களின் சில அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏனென்றால் கட்சிக்குள் ஏதோ ஒரு விதத்தில் திரும்பத் திரும்ப தொடர்ந்து எழுப்பப்படும் விவாதங்களை அவை குறிக்கின்றன.

முன்னாள் இகக(மாலெ) கட்சி அய்க்கியம் (பியு) அமைப்பிலிருந்து வந்த தொண்டர்களுக்கும், இகக(மாலெ) மக்கள் யுத்தக்குழு (பிடபிள்யுஜி) மற்றும் எம்சிசி தொண்டர்களுக்கும் இடையில் சொல்லத்தக்க பிளவுகள் இருப்பது பண்டா, மாவோயிஸ்ட் பொதுச் செயலாளருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது.

கட்சி அய்க்கியம் நீரோட்டத்திலிருந்து வந்த பண்டா, மக்கள் யுத்தக்குழு தோழர்கள் மேலாதிக்கம் செலுத்த முற்படுவதாக குற்றம் சாட்டினார். முன்னாள் மக்கள் யுத்தக்குழு தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாய் சொன்னார்.

ஒடிஷா கட்சி ஊழியர்கள் மீது, ஆந்திரா - ஒடிஷா எல்லைக் கமிட்டி ஊழியர்கள்கலாச்சார மேலாதிக்கம் செலுத்துகின்றனர் என்பது உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகளை பண்டா எழுப்பியிருந்தார். இது போன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலானவை. (உதாரணத்துக்கு லைப்பாய் சோப்புக்கு எதிராக மார்கோ சோப் என்ற கேள்வி போன்றவை).

ஆனால், பண்டா தீவிரத்தன்மையுள்ள, கருத்தியல் தாக்கம் கொண்ட கேள்விகளையும் எழுப்பியிருந்தார். மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது பதிலில் அவற்றுக்கு உரிய விளக்கம் அளிக்கத் தவறிவிட்டது.

இராணுவமயமாக்கமும், திட்டமிட்ட படுகொலைகளும்

வன்முறைச் செயல்கள் பலவும் தேவையற்றவை என்றும், எதிர்விளைவு தருபவை என்றும் பண்டா கடுமையாக விமர்சனம் செய்கிறார். ‘எல்லோரும் கையில் அலைபேசி வைத்திருக்கும் போது அலைபேசி கோபுரங்களை தகர்ப்பதன் மூலம் மக்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாது என்றும், 2000 முதல் இதுவரை ஒடிஷாவில் நடைபெற்ற பல தேவையற்ற அழித்தொழிப்புகளை தாம் கண்டதாகவும் அவர் எழுகிறார். ‘கிஷன்ஜி எதுவும் செய்யவில்லை, ஒரு போலீஸ்காரரைக் கூட கொல்லாமல் அறிக்கை விடுக்கிறார் என்றும் போலீஸ்காரரைக் கொல்வது ஒன்றுதான் புரட்சியாளனின் ஒரே வேலை போலவும் மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாகவும் பண்டா குறிப்பிடுகிறார். 2008 நயகார் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிடும்போதுசந்தேகத்தின் பேரிலும், சரியான வர்க்கக் கல்வி இல்லாத காரணத்தாலும், நம் மீது எதிர்தாக்குதல் தொடுக்காத, நம் இயக்கத்தின்பால் நல்லெண்ணம் கொண்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி, 14 சாதாரண காவலர்கள் கொல்லப்பட்டனர்என்கிறார்.

தோழர்களையும், சாமான்ய மக்களையும் ‘உளவாளிகள் என்று முத்திரை குத்திக் கொல்வதை அவர் கடுமையாக சாடுகிறார். ‘சர்வ சாதாரணமாக ஒருவரை உளவாளி என்று முத்திரை குத்தி அடித்து, எரித்து, அழித்தொழிப்பு செய்வது தீர்வாகாது. சம்பல்பூர் பகுதியில் 5, 6 கிராம மக்களை, 2004ல் முன்னாள் எம்சிசி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உளவாளிகள் என்றும், சல்வா ÷டும் ஏஜெண்டுகள் என்றும் சொல்லிக் கொலை செய்ததை குறிப்பிடுகிறார்.

அதே போல் பிஜ÷ ஜனாதா தள சட்டமன்ற உறுப்பினர் ஜகபந்து மாக்கி, சட்டீஸ்கார் மாவோயிஸ்ட் படையால் 2011ல் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் மாறுபட்ட கருத்தைச் சொல்லும் பண்டா, அந்த சட்டமன்ற உறுப்பினர்சரணடைய தயாராக இருந்ததாகவும், அவர் சக்கர நாற்காலியில் இருக்கும் ‘மாற்றுத் திறனாளி என்றும் குறிப்பிடுகிறார்.

தொழிற்சங்கத் தலைவர்களை, பிற கட்சிகளின் ஊழியர்களை படுகொலை செய்யும் நடைமுறையையும் அவர் கண்டனம் செய்கிறார். ‘தொழிற்சங்க இயக்கத்தில் நாம் மிகவும் பலவீனமாய் உள்ளோம். இது பற்றி பல முறை விவாதித்த பின்னரும் அப்படியே உள்ளோம். ஆனால், ஒடிஷா - ஜார்கண்ட் எல்லையில் தாமúô முண்டா என்ற சிஅய்டியு தலை வரை கொன்றதோடு தொழிற்சங்க அலுவலகத்தையும் இடித்து தரைமட்டமாக்கினோம். நம் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல், யாரை வேண்டுமானாலும் உளவாளி என்று முத்திரை குத்தி கொன்று விடுகிறோம். இது நமது புரட்சிகர பிறப்புரிமை! ஆனால் சாமான்ய தொழிலாளியின் தொழிற்சங்க அலுவலகத்தை நாம் ஏன் இடிக்க வேண்டும்?’ ‘எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் எஸ்யுசிஅய், சிஅய்டியு, இகக(மாலெ), ஊழியர்களை, சாதாரண மக்களை கூட அவர்கள் கொலை செய்கிறார்கள். அவர்களின் படுகொலை அரசியல் பற்றியும், வன்முறையை பரப்பும் நடவடிக்கைகள் பற்றியும் நான் விமர்சனம் கொண்டிருக்கிறேன் என்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட தனது செய்தியில் பண்டா குறிப்பிடுகிறார்.

பண்டாவின் இந்த அவதானிப்புகள், இடதுசாரி இயக்கங்கள் எழுப்புகிற குரலோடும், மாவோயிஸ்ட் கட்சி மீது கரிசனம் கொண்டவர்கள் நீண்ட காலமாக எழுப்புகிற கேள்வியோடும் ஒத்துப்போகிறது. ஜார்கண்ட் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மகேந்திர சிங், பீஹார் பாலிகஞ்சின் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் உட்பட இகக(மாலெ)யின் தலைவர்கள் பலரும் படுகொலை செய்யபட்டதற்கு மாவோயிஸ்ட் நீரோட்டமே பொறுப்பாகும். சிவில் உரிமை செயல்வீரரும், இகக(மாலெ) மக்கள் யுத்தக் குழுவின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வந்தவரும், ‘உளவாளிகள் என்று கொலை செய்யப்படுவதை விமர்சனம் செய்து வந்தவருமான கே.பாலகோபால், ‘யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலகம் நடக்கிறதோ, அவர்கள் மத்தியிலிருந்தே உளவாளிகளையும், ஏஜெண்டுகளையும் அரசு உருவாக்குகிறது. அரசுக்கு பணபலமும், மற்ற வளங்களும் இருப்பதால் அது ஒன்றும் சிரமமான காரியமல்ல. இந்த புதைகுழியில்தான் போராளிகள் (தீவிரவாதிகள்) விழுந்துவிடுகிறார்கள். ஏஜெண்டுகள் அல்லது உளவாளிகள் என்பவரை கொலை செய்வதன் மூலமோ அல்லது காயப்படுத்துவதன் மூலமோ, தனது சொந்த அடித்தளத்தை தனக்கு எதிராக பாவிக்கிறார்கள். இதன் மூலம் அரசு மேலும் அதிகமான ஏஜெண்டுகளையும், உளவாளிகளையும் பெறுகிறது என்கிறார் (ஆந்திர பிரதேசத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் இபிடபிள்யு ஜூலை 22, 2006).

இதற்கு மாவோஸ்ட் அரசியல் தலைமைக் குழு என்ன பதில் சொல்லப் போகிறது? ‘அரசு போராடுகிற மக்களை தான் வைத்திருக்கிற ஆயுதங்கள் எல்லாம் கொண்டு தாக்குகிறது. அதுவும் போராட்டம், மக்களை விடுதலை செய்வதற்கு, உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு என்றால் அரசு கடுமையாக அதை ஒடுக்குகிறது. காவல் துறை, துணை இராணுவம், இராணுவம் இவற்றை முன்நிறுத்தி, அரசின் மற்ற அங்கங்கள் திட்டமிட்ட விதத்தில் கடும் தாக்குதல் தொடுக்கின்றன. அதனால் மக்கள் ஆயுதப் போராட்டம் நடத்துவது முற்றிலும் தேவையானதாகிறது. மார்க்சிய அரிச்சுவடி தெரிந்த எவரும் இந்த புரட்சிகர வன்முறையின் முதன்மைக் கொள்கை பற்றி அறிவர். வர்க்க எதிரிகளான லஷ்மணானந்த், ஜகபந்து போன்றோர், அரசு படைகள், அதிகாரிகள், அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் அல்லது அதில் பங்கெடுப்பவர்கள், மக்களை கொடுமையான சித்திரவதை செய்பவர்கள் அவர்கள் வாழ்வை அழிப்பவர்கள் அவர்களை கொலை செய்ய எல்லா வழிகளையும் கையாள்பவர்கள் போன்றவர்களையெல்லாம் பண்டா திடீரென்று அப்பாவிகள் என்கிறார்என்று மாவோயிஸ்ட் அரசியல் தலைமைக்குழு தனது பதிலுரையில் சொல்கிறது.

புரட்சிகர வன்முறையின் அரிச்சுவடி பற்றி பேசும் மாவோயிஸ்ட் அரசியல் தலைமைக் குழுவின் பதிலுரை, உண்மையிலேயே தனது வழியைப் பாதுகாப்பதில் குழந்தைத்தனமான தாகவும், இன்னும் அது அரிச்சுவடியைத் தாண்டி கல்லூரிப் படிப்பை எட்டவேயில்லை என்பதைக் காட்டுவதாகவும் உள்ளது. ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப் போராட ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் வெளிப்படையாகத் தெரியக் கூடிய ஒரே வழி என்று அரசியல் தலைமைக் குழு ஆலோசனை வழங்குகிறது. முதலாளித்துவ அரசாங்கம் என்றாலே அது ஒடுக்குமுறை அமைப்பு, அதனால், மாறிவரும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் வரலாற்று நிலைமைகளை கண்டு கொள்ளாமல் புரட்சியாளர்கள் ஆயுதப்போராட்டம் என்ற ஒற்றை செயல் தந்திரத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?

அரசு இயந்திரத்தின் அல்லது ஆளும் வர்க்க அரசியல் அமைப்புகளின் ஒவ்வொரு பிரதிநிதியும் பரந்த பொருளில், அவர்கள் ஒடுக்குமுறையாளர்கள், அவர்கள் நலன் மக்கள் நலனுக்கு நேர்எதிரானது என்ற வகையில் மக்கள் எதிரிகள் என வர்ணிக்கப்படலாம். ஆனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காவல்துறையினரைக் கொல்வதும், தனிநபர் அரசியல் தலைவர்களைக் கொல்வதும் எப்படி புரட்சிக்கு உதவ முடியும்? ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மக்கள் செல்வாக்கோடு இருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அவர்களை மொத்தமாக அழித்தொழிப்பதை விட இந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கில் அரிப்பை ஏற்படுத்துவது உண்மையான சவால்மிக்க பணி. அது கடுமையான, நீடித்த அரசியல் செயல்பாட்டை புரட்சியாளர்களிடம் கோருகிற பணி. சாதாரண கிராமவாசிகளை, மாவோயிஸ்ட் அமைப்பின் சொந்த அணிகளை, பிற இடதுசாரி இயக்கத்தின் ஊழியர்களை, தொழிற்சங்கவாதிகளை கொலை செய்வதை இந்த பூமியில் மாவோயிஸ்டுகள் எப்படி நியாயப்படுத்த முடியும்? மாவோயிஸ்ட் அரசியல் தலைமைக் குழு இவ்விஷயத்தில் அமைதி காக்கிறது.

சந்தேகத்திற்கிடமான நிதி சேகரிப்பும், நிதி மோசடியும்

நிதி விவகாரங்களின் கடுமையான ஒழுங்கீனங்கள் இருப்பதை பண்டா ஏற்கனவே எழுப்பியிருந்தார். (தொகை வியப்பூட்டும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது). நிதி விசயங்களிலான அராஜகம் பற்றி கட்சிக்குள் ஏற்கனவே எழுப்பியிருக்கிறேன் என்று சொல்லும் பண்டா, மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபர்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கான கணக்கு வழக்கு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், அவர்கள் சரணடைவதற்கு முன் முடிந்த வழிகளிலெல்லாம் பணத்தை சேர்த்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார். பெரும் தொழில் குழுமங்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது என்று கட்சி முடிவு இருந்த போதிலும், மாவோயிஸ்ட் தலைவர்கள், மக்களை வெளியேற்றும் அதே பெருந்தொழில் குழுமங்களிலிருந்து பெரும் தொகை வசூல் செய்வதை தொடர்கிறார்கள்.

மேலும், இது புதிய செய்தியோ, அல்லது நாகரீகமற்ற குற்றச்சாட்டோ அல்ல. மாவோயிஸ்ட் இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள், மாவோயிஸ்ட்டுகள் நடைமுறையில், ஒப்பந்தக்காரர்கள், மொத்த வியாபாரிகள், பெரும்தொழில்குழுமங்கள் ஆகியோரை சார்ந்தே இருக்கிறார்கள் என்கின்றனர். இந்தப் போக்குபற்றி எழுதும் போதுபணப்பறிப்பின் மூலம் திரட்டப்பட்ட பெரிய தொகையை வரி என்று நியாயப்படுத்தினாலும், வரி கட்டுவதன் மூலம், ஆதிக்க சக்திகள் கொள்ளையடிக்க, சுரண்ட ஓர் உரிமம் பெறுகிறார்கள் என்பதுதான் பிரச்சனை. அவர்களுக்கும் வரி வசூல் செய்பவர்களுக்குமிடையில் ஓர் ஆதரிப்பவர் ஆதரவு பெறுபவர் உறவு உருவாகி விடுகிறது. தவிர்க்க முடியாமல் சுரண்டுபவர்களுக்கு எதிரான இயக்கம் எடுக்க முடியாமல், வெகுமக்கள் வேகம் தணிக்கப்படுகிறது. வெகுமக்கள் தடுக்கப்படுகிறார்கள். (பசுமை வேட்டை, பழிவாங்கும் வேட்டையே. அதனை எதிர்த்திடுவோம், இந்தியாவில் மாவோயிசம், அரசு மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கம், அரிந்தம் சென். விடுதலை வெளியீடு 2010)

இடது சாகசவாதம்

மக்களின் தயார்நிலை, பிராந்தியம், நாடு ஆகியவற்றின் குறிப்பியல்புகள் பற்றி கண்டு கொள்ளாமல் மாவோயிஸ்ட்டுகள் முடிவு எடுப்பதால் அவை பெரும்பாலும் இடது சாகசவாத தன்மை கொண்டதாக இருக்கிறது என்று பண்டா குறிப்பிடுகிறார். இந்திய நிலைமைகளில் நீடித்த மக்கள் யுத்தத்தின் பயன் பற்றி கேள்வி எழுப்பும் பண்டா, புரட்சிக்கான பாதை அந்த நாட்டு நிலைமைகளுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்க வேண்டும் என்றும் அந்தப் பாதை சீனத்துக்கு பயன்பட்டது போல் நம் நாட்டுக்கு பயன்படாது என்றும் குறிப்பிடுகிறார். மக்கள் தயாராக இல்லாதபோது, கொரில்லா யுத்த்ததைத் தீவிரப்படுத்துவது தவறு என்றார். மாறாக மக்களைத் தயார் செய்ய இன்னும் கூடுதல் நேரம் நமக்குத் தேவை என்ற அவர், அதற்காக இவ்வளவு பெரிய நாட்டில் ஓரிரு பகுதிகளில் மட்டும் போரைத் தீவிரப்படுத்தக் கூடாது என்றார். மக்கள் நீண்ட யுத்தத்தில் பங்கெடுக்கா விட்டாலும், நமக்கு உதவலாம் நம்மிடம் இணையலாம் என்றார். இது சாராம்சத்தில், மாவோயிஸ்ட்டுகள், சீன மாதிரியை இந்தியாவில் எந்திரகதியில் பொருத்துவதற்கெதிரானது; மக்கள் யுத்தம் என்ற அவர்களது கொள்கை உண்மையான அரசியல் நிலைமைகளுக்கு மாறானது: இந்த விமர்சனம் இராணுவமல்லாத மற்ற நடவடிக்கைகளில் மக்களை அணிதிரட்டுவது மற்றும் அரசியல் தயாரிப்பின் தேவை ஆகியவற்றை அங்கீகரிப்பதுமாகும்.

மாவோயிஸ்ட் அரசியல் தலைமைக்குழு, இந்த கருத்தியல் அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு பண்டாவை தனிநபர்வாத முடையவர், சீர்குலைவுவாதி மற்றும் துரோகி என்று குற்றம்சாட்டி முடித்துக் கொண்டது. அரசியல் தலைமைக்குழுவின் பதிலுரை, கலாச்சார மேலாதிக்கம், ஆதிவாசிகளையும், பெண்களையும் சுரண்டுவது ஆகிய குற்றச்சாட்டுகளின் மீது மட்டுமே கவனம் குவித்திருக்கிறது. பொருளுள்ள கருத்தியல் விமர்சனங்களை விட இது மாதிரி விசயங்களுக்கு பதில் சொல்வதோ அல்லது மறுப்பதோ சுலபமானது.

பண்டாவுக்கு எதிரான மாவோயிஸ்ட் அரசியல் தலைமைக் குழுவின் விமர்சனத்துக்கு அடிப்படை இருக்கிறதா என்று நம்மால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் மாவோயிஸ்ட்டுகள், அவர்கள் வழியில் ராணுவத்திற்கு மட்டுமேயான அழுத்தம் பற்றிய கேள்வியை எழுப்பும் தலைவர்களில், அணிகளில் பண்டா முதலாமானவரும் அல்ல, இறுதியானவரும் அல்ல என்பதை மாவோயிஸ்ட்டுகள் அங்கீகரிக்க வேண்டும். அவ்வப்போது இதுபோன்ற கேள்விகள் மாவோயிஸ குழுக்களில் வரும்போதெல்லாம், அவர்களை வெளியேற்றுவதன் மூலம் கட்சி பதில்வினையாற்றியிருக்கிறது. ஆனால் கேள்விகள் வெளியில் செல்லவில்லை. அவை மாவோயிஸ்ட் கட்சிக்குள் இருந்தே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை, திரும்பவும், இகக (மாவோயிஸ்ட்)ன் இடது சாகசவாதம் மற்றும் அராஜக, இராணுவ வழி பற்றிய கேள்விகள் அதன் சொந்த மூத்த தலைமையிடமிருந்து வந்திருக்கிறது. மாவோயிஸ்ட் கட்சி கேள்விகளை சந்திக்க தயாராக இல்லை என்பது புலனாகிறது என்றாலும் இவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேதான் இருக்கும்.

தமிழில்: தேசிகன்

Search