COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 29, 2012

1

வேண்டுகோள்

தீப்பொறி வாசகர்களுக்கு வேண்டுகோள்

தீப்பொறி வாசகர்களுக்கு, வணக்கம்.

உலகின் தலைசிறந்த அறிஞர் மார்க்ஸ் என்று மக்கள் கருதுவதாக இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு முதலாளித்துவ ஆய்வு சொல்கிறது. இன்றைய இந்தியாவுக்கு யார் தேவை என்று கேட்டபோது, காந்தி போன்றவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அது பகத்சிங் என்று இந்திய மக்கள் கருதுவதாக இன்னொரு முதலாளித்துவ ஆய்வு சொல்கிறது. வெள்ளை ஆட்சியிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கும். தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மரணம். 23 வயதில் மரணம். அந்த மரணம் இன்னும் பல பகத்சிங்குகளை உருவாக்க மக்களுக்கு உத்வேகம் தரும் என்றும், அவர்கள் வெள்ளை ஆட்சியை விரட்டுவார்கள் என்றும் பகத்சிங் நம்பினான். இந்தப் போர் எங்களோடு துவங்கவும் இல்லை, எங்களோடு முடியப் போவதும் இல்லை என்று சொல்லி தன் நண்பர்களுடன் தூக்குமேடையும் ஏறினான். தூக்கு மேடைக்குச் செல்லும் முன் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். மான்கள், மயில்கள், சூப்பர் சிங்கர்கள் அனைத்தையும் தாண்டி, சாஹின் தாதாவின் முகநூல் செய்தி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவுக்கு அஞ்சலி செலுத்தினோமா என்றுதான் கேள்வி எழுப்பியது.

முதலாளித்துவம் மூளைக்கு போட்டிருக்கும் விலங்குக்கு அப்பால் மார்க்சும் பகத்சிங்கும் உத்வேகமூட்டுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஒட்டுமொத்த சமூகம் பற்றி, பெரும்பான்மை மக்கள் நலன் பற்றி அக்கறை கொண்டிருந்தார்கள். சமூக மாற்றம் பற்றி அவர்கள் சொன்ன கருத்துக்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் அவர்களை வீழ்த்த முடியாதவர்கள் ஆக்குகின்றன.

அரசியல், ஜனநாயகம் ஆகியவை பற்றி கவலைப்பட முடியாதவர்களாக முதலாளித்துவம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஆக்கிவிட்டபோதிலும், போராட்டங்களில் அறவே பங்கு கொள்ளாமலோ, ஜனநாயக உரிமைகள் பற்றி கேள்விகளே இல்லாமலோ அவர்கள் இல்லை. ஊழல் நீடுழி வாழ்க என்றோ, ஒடுக்குமுறை வெல்க என்றோ யாரும் சொல்லிவிட்டுச் செல்லவில்லை.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழரை கோடி. முதலாளித்துவ மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் அன்றாடம் மக்களை நேரடியாக அவர்கள் வீட்டில் சந்தித்துவிடுகின்றன. மூளைக்கு மேலும் மேலும் விலங்கு போட்டு, மயக்கத்தில் ஆழ்த்தப் பார்க்கின்றன. இந்தக் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமான கருத்தியல் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மார்க்சும் பகத்சிங்கும் சொன்ன செய்திகளை எடுத்துச்செல்ல, எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.

நாங்கள் ஊழல்தான் செய்வோம், நாட்டை அடகுதான் வைப்போம், கூறுபோட்டுதான் விற்போம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று அய்முகூ ஆட்சியாளர்கள் மக்களிடம் கேட்கிறார்கள். 2014 தேர்தலை மனதில் கொண்டு மட்டுமே, ஜெயலலிதா அரசாங்கம் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த அடக்கிய வாசிப்பிலேயே பரமக்குடி, கூடன்குளம், நாய்க்கன்கொட்டாய் ஒடுக்குமுறைகள் நடந்தேறிவிட்டன. கோலார் வயலில் அணுக்கழிவை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக மக்களும் ஆட்சியாளர்களும் உறுதியாக எதிர்ப்பு தெரிவித்த பிறகு, மத்திய அரசாங்கம் அந்த முயற்சியை கைவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அணுஉலை எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று மக்களுக்கு கேள்விகள் எழுகின்றன. டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் அணுவிபத்தை எப்படி தடுக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீதிகளில் நடக்கும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க, செம்மைபடுத்த, மார்க்சியத்துக்கு பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்சியமும் வேண்டும். மார்க்சியத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியைச் செய்யும் தீப்பொறி 2012 ஜனவரி முதல் இருவார இதழாக வெளிவருகிறது. 4000 பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. 2013 ஜனவரி முதல் 6000 பிரதிகள் என விநியோகத்தை உயர்த்த மாலெ கட்சி முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் முழுவதும் சந்தா புதுப்பித்தல் மற்றும் புதிய சந்தாக்கள் சேர்க்கும் இயக்கம் நடத்துகிறது. சந்தாதாரர்கள், சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், புதிய சந்தாக்கள் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தீப்பொறி வேண்டுகோள் விடுக்கிறது.

Search