களம்
புரட்சிகர
இளைஞர் கழகத்தின்
தேசிய மாநாட்டு
விளக்கப் பொதுக்
கூட்டங்கள்
ஊழலுக்கு, பெருநிறுவன கொள்ளைக்கு, ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு எதிராக, 2012 டிசம்பர் 14, 15 தேதிகளில் உத்தரபிரதேசம், லக்னோவில் பகத்சிங் அரங்கத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் 5வது தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. இதை ஒட்டி தமிழகம் முழுக்க மாநாட்டு விளக்கப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நவம்பர் 10 அன்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தர்மபுரி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை, அதற்கு துணை போன தமிழக அரசின் போக்கைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,36,000 பேருக்கு வேலை என்று ஜெ. அரசு அறிவித்துள்ள பின்னணியில் 12 பெருநிறுவனங்களுக்கு அரசு அளித்துள்ள, அளிக்கப்போகிற சலுகைகளை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிடக் கோரியும், லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றக் கோரியும், மாணவர், இளைஞர் பிரச்சனை மீது இயக்கம் நடத்தவும், 2013 பிப்ரவரி 20, 21ல் நடக்கவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவும், மாணவர், இளைஞர் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற மார்ச் 23, பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவும் பொதுக் கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.
கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, அகில இந்திய மாணவர் கழக திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சீதா, மாணவர், இளைஞர் அமைப்புகளின் தோழர்கள் கார்த்திக், கல்யாணி, உமா, துளசிநாதன், சிபிஅய் (எம்.எல்) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், அவிதொச மாவட்ட அமைப்பாளர் தோழர் சுந்தர், ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு, புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினர்.
விருத்தாச்சலத்தில் நவம்பர் 24 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் தனவேல், அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத் மற்றும் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர்பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் ராஜசங்கர் தலைமை தாங்கினார்.
விருத்தாச்சலத்தில் நவம்பர் 25 அன்று வகுப்பு நடத்தப்பட்டது. சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சேலம், கோவை கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர், இளைஞர் முன்னோடிகள் கலந்து கொண்டனர். மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார்.
பால் தாக்கரே மறைவு, அப்துல் கசாப் தூக்கு, பாலஸ் தீனம் மீதான இஸ்ரேல் தாக் குதல், அமெரிக்க தலையீடு ஆகியவை பற்றி விவாதங்கள் கட்டமைக்கப்பட்டன. பெண்கள் இயக்கம் பற்றிய மாலெ கட்சியின் 9ஆவது காங்கிரஸ் நகல் ஆவணம் மீதும் விவாதங்கள் நடத்தப்பட்டன.