தலையங்கம்
தமிழகத்தில்
சாதிவெறித் தீ
இப்படி ஒன்று நடந்துவிட்டதா? பாரதியும், பெரியாரும் பொய்யாய் பழங்கதையாய் மெல்லக் கரைந்து போய் விடுவார்களா? வெள்ளை நிறத்து பூனை பெற்ற குட்டிகள் கதை சொல்லி சாதிக் கொடுமைகள் வேண்டாம் என்றானே, மறந்து விடுவோமா? வாக்கு வங்கி அரசியல் நடத்த, தொலைந்து போன செல்வாக்கு அடித்தளத்தை மீட்க மாநில மக்கள் போராடி பெற்ற நலன்களை, பாடுபட்டு சேர்த்த பகுத்தறிவு, ஜனநாயக செல்வங்களை விற்றுவிடுவார்களா?
இந்தக் கேள்விகளுக்கு அதிர்ச்சி தரும் ஆம் என்ற பதில் வன்னியர் தலைவர் மருத்துவர் ராமதாசிடம் இருந்து வருகிறது. இழந்த செல்வாக்கு அடித்தளத்தை மீட்க, பெண்கள் மீது, தலித்துகள் மீது, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் ராமதாஸ். தாம் தலித் விடுதலைக்கு எதிரானவர் அல்ல என்று ராமதாஸ் சொல்வது, வெறும் சொற்கள் என்பதும் தலித் அறுதியடலை சகித்துக் கொள்ள பாமக சற்றும் தயாராக இல்லை என்பதும் நாய்க்கன்கொட்டாய் சொல்லும் செய்தி. ராமதாசை எதிர்ப்பது தவிர வேறு வழியில்லை என்பதால் எதிர்ப்பை காட்டத் துவங்கிவிட்டார் திருமாவளவன்.
இந்த சண்டைக்குள் கருணாநிதி திராவிடப் பாட்டு பாடி காட்சியை முடித்துக் கொள்ள, ஜெயலலிதா, சபாஷ், சரியான போட்டி என்று வேடிக்கைப் பார்க்கிறார். தலித் மக்கள் மீதான அரசு மற்றும் மேல்சாதித் தாக்குதல்கள் இருவருக்கும் எந்த உறுத்தலையும் இதுவரை உருவாக்கியதில்லை.
தமிழகம் தலித் மக்களின் சொர்க்க பூமியாக இருந்ததில்லை தான். இரு சாதியினருக்கு இடையில் ஏற்பட்ட மணஉறவுகள் மோதலுக்குக் காரணமாக இருந்ததில்லை என்று சொல்ல முடியாதுதான். இப்போது அந்த மண உறவைக் காரணமாகச் சொல்லி காலச்சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ள எடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட முயற்சிதான் ஆபத்தானதாக மாறுகிறது.
எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கச் சொன்னார்கள் பெரியவர்கள். அரியானாவின் காப் பஞ்சாயத்துக்களை, கர்நாடகாவின் கலாச்சார காவலர்களை, மகாராஷ்டிராவின் மண்ணின் மைந்தர்களை, நச்சுக் கருத்துக்களை ராமதாஸ் தமிழ் மண்ணுக்கு இறக்குமதி செய்கிறார். இதற்கு மாயாவதி மாதிரி என்று பெயர் சூட்டுகிறார். மூன்றாவது அணி உருவாக்க பல சமூகங்களும் சாதிகளும் அவரை கேட்டுக் கொண்டதால் எல்லா சாதியினரையும் ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கிறாராம். நாயக்கன் கொட்டாய் நடந்த பின்னணியில் சொல்கிறார். தீயினாற் சுட்ட புண் எரிகிறது. சூடுபட்ட இடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எரிகிறது. தமிழக மக்கள் கேப்பையில் நெய் எடுப்பவர்கள் என்று கருதிவிட்டாரா? ராமதாசின் முயற்சி, தலித் அறுதியிடலை ஒடுக்குவதன் அடிப்படையில் வன்னியர் தலைமையில் பிற சாதிகளை ஒருங்கிணைப்பது, உறுதிப்படுத்துவது என்பதாகவே அமைந்துள்ளது.
வெண்சுருட்டு பிடிக்கக் கூடாது என்றார். தனது மகன் அமைச்சராய் இருந்ததை பயன்படுத்தி பொது இடங்களில் வெண்சுருட்டுக்கு தடை கொண்டு வந்தார். டாஸ்மாக் வேண்டாம் என்றார். கருத்தளவில் சரி என்றுதான் ஒப்புக்கொண்டார்கள் தமிழக மக்கள். இந்த ஒப்புதலை இதற்கு மேல் நீட்டிக்கப் பார்க்கிறார். இனத்தூய்மை பாதுகாக்க முயற்சித்த ஹிட்லர் போல், சாதித்தூய்மை பாதுகாக்கப் பார்க்கிறார்.
95% காதல் திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன என்று ராமதாஸ் புள்ளிவிவரம் தருகிறார். காதல், காதலர்களை மட்டுமின்றி சமூகத்தையே பாதிக்கிறது, கலப்பு திருமணங்கள் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும் என்று பதைபதைத்துப் போகிறார். காதல் சாதாரண உணர்வுதானே? இருக்கட்டுமே. திருமணமும்தான் நடக்கட்டுமே. அது முறிந்து போனால்தான் என்ன? சமூகமா முறிந்து போகும்? அமெரிக்கா வளர்ச்சியுற்ற நாடு என்று ராமதாஸ் நிச்சயம் ஒப்புக்கொள்வார். மீட்டிங், டேட்டிங் ஆகிய வற்றுக்குப் பிறகுதான் அங்கு பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. அந்தத் திருமணங்கள் முறிகின்றன. (முதலாளித்துவ சமூகத்தில் திருமணங்கள் முறிவதுதான் விஞ்ஞானம்). அமெரிக்க பெண் வாக்காளர்களில் 25% பேர் சிங்கிள் மதர்ஸ். அதாவது கணவன் இல்லாமல் தங்கள் குழந்தைகளுடன் வாழ்பவர்கள். இதனால் அமெரிக்கா பிரச்சனை ஏதும் சந்திக்கவில்லை.
வன்னியர் சாதிப் பெண்ணை தலித் ஆண் மணம் செய்து கைவிட்டுவிட்டால் அந்தப் பெண் மீண்டும் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளட்டுமே. அதுவும் சரி வரவில்லை என்றால் இன்னொரு சாதியில் இன்னொரு திருமணம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ராமதாசும் காடுவெட்டி குருவும் இதில் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை.
முதலில் காதல் கடிதம் கொடுக்கிறார்கள், பின்னர் அலைபேசி கொடுக்கிறார்கள், இளம் பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள் என்கிறார் ராமதாஸ். அதனால் பெண் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்திருப்பது, அவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின், குடும்பத்தில் உள்ள பெரியவர்களின், சமூகத்தின் கடமை என்று அனைவரையும் துணைக்கழைக்கும் போக்கில், தமிழகப் பெண்களை விரோதித்துக் கொள்கிறார். காதல் கடிதத்துக்கு பெண்கள் மயங்கிய காலம் மலையேறிவிட்டது ராமதாஸ் அவர்களே. ஒன்றல்ல, இரண்டல்ல, ஊருக்கே அலைபேசி வாங்கித் தரும் பொருளாதார ஆற்றல் பெற்ற பெண்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சின்ட்ரெல்லா கனவுகள் பழங்கனவுகள். அந்தக் கதையையே மறந்துவிட்ட பெண்கள்தான் இன்று பெரும்பான்மை. நீங்கள்தான் பழமைக்கு மெருகு ஏற்றப்பார்க்கிறீர்கள்.
கல்லூரிக் காதல் வழிவிலகல், அது வளர்ச்சிக்கு ஆபத்தானது என்கிறார் ராமதாஸ். சாதி வெறியை விடவா காதல் ஆபத்தாகிவிடும்? பாரதி அழகாகச் சொல்கிறானே.
காதலினால்
மானுடர்க்குக்
கலவி
யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக்
கவலை
தீரும்
காதலினால் மானுடர்க்குக்
கவிதை
உண்டாம்
கானமுன்டாம்
சிற்பமுதற்
கலைக
ளுண்டாம்
ஆதலினாற் காதல்
செய்வீர்
உலகத்தீரே!
அஃதன்றோ
இவ்வுலகத்
தலைமை
யின்பம்
காதலினாற் சாகாம
லிருத்தல்
கூடும்
கவலைபோம். அதனாலே
மரணம்
பொய்யாம்.
இதற்கு மேல் இதில் யாரும் பேச என்ன இருக்கிறது? யார் வளர்ச்சி பற்றி பேசுகிறார் ராமதாஸ்? சாதிவெறி வளராமல் இருப்பது சமூக வளர்ச்சிக்கு நல்லது என்று அதற்கு முடிவு கட்ட வேண்டிய கட்டத்தில் காலத்துக்கு ஒவ்வாதவற்றை திணிக்கப் பார்க்கிறார். தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் என்று திருமாவளவனே பட்டம் தந்துவிட்ட பிறகு அவர்கக்கும் சாதிவெறி நஞ்சுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று எதிர்ப்பார்க்கிறார். இன்னொரு முறை யாருக்கும் பட்டம் சூட்டு பவர்கள் யோசித்து செய்யட்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் கட்டாய காதல் திருமணங்கள் செய்வதை பாமக எதிர்ப்பதாக ராமதாஸ் சொல்கிறார். காதலில் கட்டாயம் ஏது? அது விருப்பம் பற்றியது. கலகம், மீறல் என்றிருக்கும் வரை மட்டுமே அது கொண்டாடப்படுகிறது. காதல் திருமணம் செய்துகொண்டால் தலித் விடுதலை வந்துவிடும் என்று யாரும் கருதவில்லை.
தலித் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தம். நாயக்கன்கொட்டாய் இளைஞர்கள், ஆண்கள் பெரும்பாலானோர் இடம்பெயரும் தொழிலாளர்களாக இருந்துதான் அந்த குறைந்தபட்ச கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை எட்டினார்கள். தொடர்ந்தார்கள். மேல்சாதிப் பெண்கள் கிடைப்பார்களா என்று தேடி அலையவில்லை. அன்றாட வாழ்க்கையே அவர்களுக்குப் பெரும்பிரச்சனை. மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் தலித் விடுதலை அடைய முடியும் என்று கருதிவிடும் அளவுக்கு அவர்கள் அப்பாவிகள் அல்ல. தங்கள் சொந்த பொருளாதார மேம்பாடு தங்கள் நிலைமைகளுக்கான தீர்வின் ஒரு கட்டம் என்பதை புரிந்துகொண்டதால்தான் வேலை தேடி ஊர் விட்டு ஊர் செல்கின்றனர். தலித் இளைஞர்களை இழிவுபடுத்தி முத்திரை குத்திவிட்டு, திராவிட இயக்கம் நவீன பிராமணர்களை உருவாக்கியிருக்கிறது என்று ராமதாஸ் சொல்வது தன்னை கண்ணாடியில் பார்த்துத்தான்.
கீழ்சாதி ஆண்களை மட்டுமின்றி மேல் சாதிப் பெண்களையும் சாதிக் கோட்டை தாண்டாதே என்று ராமதாஸ் கருத்துக்கோப்பு மிரட்டுகிறது. ராமதாசின் இந்த விதி மேல்சாதி ஆண்களுக்கு பொருந்துமா? ஆணாதிக்கப் பொதுப்புத்தி இந்த விசயத்தில் எப்படி இயங்கும்? இந்த விசயத்தில் இதுவரை ஒடுக்குமுறை என்ற ஒற்றை வடிவம்தானே வெளிப்பட்டிருக்கிறது? இவை ஆபத்தான சூழலை உருவாக்கும் உள்ளாற்றல் கொண்ட கேள்விகள்.
ராமதாஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறார். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இரண்டு திராவிடக் கட்சிகள் பின்னால், தங்கள் கருத்தியலை சமரசம் செய்து கொண்டு போக வேண்டியிருக்கிறது என்றும், திராவிடக் கட்சிகளால் சாதியை ஒழிக்க முடியவில்லை, மாறாக, தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக சில சாதிக் குழுக்களை ஊக்குவிக்கின்றன என்றும் அப்பட்டமாக சாதி அடிப்படையிலான, அதன் ஆதிக்கத்தின் அடிப்படையிலான கட்சி நடத்துகிற ராமதாஸ் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அவற்றை பயன்படுத்தியது போதும் இனி பாமக அதை பயன்படுத்த வாய்ப்பு வேண்டும் என்கிறார். அதற்காக சாதிவெறித் தீயை மூட்டியும் விட்டிருக்கிறார். வன்னியர் தலைமையில் அனைத்து கட்சியினரும் கட்சி பேதம் பாராமல் தலித் குடியிருப்புக்கள் மீது, அந்த மக்களின் பொருளாதார முதுகெலும்பை குறி வைத்துத் தாக்குதல் நடத்தியிருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டபோது நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்தப் பார்க்கிறார். பாமகவுக்கோ வன்னியர் சங்கத்துக்கோ இந்தத் தாக்குதலில் சம்பந்தமில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வதால், தலித் மக்கள் எதிர்ப்பில் இருந்து அவருக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லை. பாமக தலித் விடுதலையை ஒருபோதும் எதிர்த்ததில்லை என்று சொல்வதால் வாழ்விழந்த அந்த தலித் மக்களின் சீற்றம் தணியப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, மேற்குத் தமிழகத்தில் உள்ள கவுண்டர்களும் காப் பஞ்சாயத்து கருத்துக்களில் நின்றுகொண்டு ராமதாசுடன் சேர்ந்து சத்தம் போடத் துவங்கியுள்ளனர். 2014 நோக்கிய ராமதாசின் திட்டத்தில் திருமாவளவனுக்கும் இடம் வைத்திருக்கிறார். திருமாவளவனுக்கு சில நிர்ப்பந்தங்கள் இருப்பதால்தான் பாமக மீது குற்றம் சுமத்துகிறார் என்கிறார்.
பெண்களுக்கு எதிராக, காதலுக்கு எதிராக தான் பேசியதை யாராவது நிரூபித்தால் அந்த இடத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதாக யாரும் உணர்ச்சிவசப்படு வதில், தன்னிரக்கத்தில் பயனேதும் இல்லை. தலித் மக்கள் விடுதலை யார் கொடுத்தும் வரப்போவதில்லை. அதை அவர்களுக்கு யாரும் பெற்றுத் தரப் போவதும் இல்லை. அதை அவர்கள் தங்கள் போராட்டத்தில் வெல்லப் போகிறார்கள். முதலாளித்துவம் அழுகிப் போகும்போது அது எடுக்கும் வடிவம் பாசிசம். அதனிடம் எந்த முற்போக்கையும் தேட முடியாது. சாதிய அரசியல் தனக்கொரு இடம் பிடிக்க சாதிய வெறி ஆட்டம் போடும்போது அதனிடம் கருணையை எதிர்ப்பார்க்க முடியாது. அதை முழுவதுமாக அழிப்பதுதான் தீர்வாகுமே தவிர அதனுடன் எந்த விதத்திலும் கை கோர்த்துத் தீர்வு காண முடியாது.
சென்ற ஆண்டு பரமக்குடியில் தலித் மக்களை சுட்டுத் தள்ளிய காவல் துறையினர் மீது, இப்போது சாதிவெறியை தூண்டி பகிரங்கமாகப் பேசும் சாதித்தலைவர்கள் மீது ஜெயலலிதா அரசாங்கம், அதன் வீரதீர காவல்துறை, இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வன்னியர் மற்றும் பிறசாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ராமதாசின் கருத்துக்களை நிச்சயம் நிராகரிப்பார்கள். ராமதாஸ் துவக்கி வைத்திருக்கிற சாதி வெறி விவாதத்தை, சாதி ஆதிக்கத்தில் இருந்து, ஆணாதிக்கத்தில் இருந்து பிரித்து நிறுத்தி, மொத்த விசயமும் காதல் தொடர்பானது என்று சுருக்குவது, தாராளவாதத்துக்கு இட்டுச் செல்லும். சாதி ஆதிக்கத்தை, நாய்க்கன்கொட்டாய் சாதி வன்முறையை காதலில் வேர்கொண்டதாகக் காட்டப் பார்க்கும் ராமதாசின் முயற்சிக்கு துணைபோய்விடும். காதல் பற்றி ராமதாஸ் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரம், காதலைக் கொண்டாடும் அதே நேரம், சாதிவெறி எதிர்ப்பில் அழுத்தம் குறைந்துவிடக் கூடாது.