களம்
உழைப்போர் உரிமை
இயக்கம் நடத்திய
மருத்துவ முகாம்
சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கியமான புறநகரான அம்பத்தூரை சுற்றி 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். மாநகராட்சி மக்கள் வாழும் இடத்தில் 15 ஆண்டுகளாக குப்பைக் கொட்டி மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னுமும் முடிக்கப்படவில்லை. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என மக்களிடம் பணம் பறித்து அந்த திட்டமும், இன்று வரை கானல் நீர் திட்டமாகிவிட்டது. சாலைகள் தெருக்களில் இவற்றிற்காக தோண்டப்பட்ட மரணப் பள்ளத்தாக்குகள் அப்படியே உள்ளன. ஆட்சிகள் மாறினாலும், இந்த காட்சிகள் இது வரை மாறவில்லை. மாலெ நடத்திய பல்வேறு ஆய்வுகளில் மக்களுடைய கவலைகள், விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகள் தெரிந்து கொள்ள பலமுறை மக்களிடம் சென்றபோது ஒவ்வொரு குடும்பமும் அவர்களுடைய வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மருத்துவத்துக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடிந்தது.
உழைப்போர் உரிமை இயக்கம், வரதராஜபுரம் பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 21.10.2012 அன்று மருத்துவ முகாம் நடத்தியது. சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான டாக்டர் ராணி பாண்டியன் இந்த முகாமில் கலந்து கொண்டார். கட்சி தோழர்களின் நண்பர்கள் ஆர்.எஸ்.பாலாஜி, கஜேந்திரன், புவனேஷ்வரி, கே.ஜெயலட்சுமி, எம்.கோமதி ஆகியோர் மருத்துவ உபகரணங்கள் வாடகைக்கு வாங்கி பரிசோதனை செய்ய உதவி செய்தார்கள். கட்சியின் வேலைப் பகுதியில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த செவிலியர் தோழர்கள் கலந்து கொண்டனர்.
வரதராஜபுரம், ஜிஎன்ஜி காலனி, ஆசிரியர் காலனி, ராமாபுரம் பகுதிகளை சேர்ந்த சங்க உறுப்பினர்களும் ஆர்வமாக முகாமிற்கு வந்து ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் கேட்டுக் கொண்டனர். பலரும் நீரிழிவு நோய் சம்மந்தமான பரிசோதனைகளையும் செய்து கொண்டனர். டெங்கு சம்மந்தமான விழிப்புணர்வு குறித்து மருத்துவர் பேசினார். மக்கள் கேட்டுக் கொண்டனர். காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். உழைப்போர் உரிமை இயக்கம் மக்களை திரட்டி மருத்துவ முகாம்கள் இன்னும் பல நடத்துவோம், அரசு மருத்துவமனை இவ்வளவு பெரிய நகரில் அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாததை கண்டித்தும் இயக்கம் நடத்துவோம் என புறப்பட்டுள்ளது.