கட்டுரை
உலகமயம்:
மேலிருந்து கீழ்
கசிவது அல்ல கீழிருந்து
மேல் சேர்வது
உணவு மானிய ஒதுக்கீட்டை நினைத்து முன்னாள் நிதியமைச்சருக்கு தூக்கம் கெட்டது. அய்முகூ ஆட்சியாளர்கள் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் சமையல் எரிவாயுவுக்கும் மானியம் தர நிதியில்லை என்று அழுகிறார்கள். பொது விநியோகத்தில் பொருளுக்கு பதிலாக பணம் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். கோடிக் கணக்கான சாமான்ய மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்காமல் பெரு நிறுவனங்களின் நலன்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் அய்முகூ அரசாங்கத்தின் இன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு கூடுதலாக நிதி வழங்குவது பற்றி அரசாங்கம் சில வாரங்களில் முடிவு எடுக்கும் என்கிறார். மார்ச் 2013 வரையிலான பட்ஜெட்டில் அது ரூ.15,500 கோடிக்கு மிகாது என்று சொல்கிறார்.
வோடோஃபோன், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களின் நலன் மட்டுமே காக்கும் அய்முகூ அரசாங்கம், தனியார்மய, தாராளமய ஆட்டத்தில், பொதுத் துறை வங்கிகளுக்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? 2010 - 2011ல் பொதுத்துறை வங்கிகளில் அரசு போட்ட பணம் ரூ.20,157 கோடி. 2011 - 2012ல் ரூ.12,000 கோடி. ஏற்கனவே வங்கிகளில் மக்கள் பணம் இருக்கிறது. அரசு போடுவதும் மக்கள் பணமே. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
நாட்டின் பொதுத்துறை வங்கிகள் மீதான நவதாராளவாத ஆட்சியாளர்களின் இந்த அக்கறையை கிங்ஃபிஷர் கதை விளக்கிவிடும். விஜய் மல்லையா கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காக 17 பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.7,500 கோடி கடன் வாங்கியிருக்கிறார். இந்தக் கடனுக்குக் காப்பாக இந்த மதிப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் சொத்துக்கள் அடகு வைத்திருக்கிறார். இப்போது ரூ.9,000 கோடி நஷ்டத்தில் இருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனத்தை மீட்க முடியாமல் போனால் வங்கிகளுக்கு ரூ.6,000 கோடி வராமலே போகக் கூடும், இந்தியாவின் வங்கிகள் செய்கிற மிகப்பெரிய கடன் தள்ளுபடி இதுவாகத்தான் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கின்றனர்.
இது தவிர கிங்ஃபிஷர் நிறுவனம் இந்திய விமான நிலைய கழகத்துக்கு ரூ.300 கோடி கடன் தர வேண்டும். இந்த கடனுக்காக விஜய் மல்லையா அனுப்பும் காசோலைகள் திரும்பி வந்தன. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தனது 4,000 ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தரும் ஊதியம் வெறும் ரூ.30 கோடி. தீபாவளிக்கு முன் மூன்று மாத சம்பளம் வேண்டும் என்று கிங்ஃபிஷர் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்களில் அவர் இந்தியாவிலேயே இல்லை. எங்கெங்கோ புகுந்து புறப்படும் ஊடகங்கள் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றன. டில்லியில் ஓர் ஊழியரின் மனைவி தற்கொலை செய்துகொண்டபோது கூட விஜய் மல்லையா வாய் திறக்கவில்லை.
ஸ்டேட் வங்கி கிங்ஃபிஷர் தர வேண்டிய மொத்த கடனையும், ரூ.1,458 கோடியையும், வாராக்கடன் என அறிவித்துவிட்டது. கார்ப்பரேசன் வங்கியும் தனக்கு வரவேண்டிய ரூ.160 கோடியை வாராக்கடனாக அறிவித்துவிட்டது.
இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் சாராய நிறுவனமான டியாஜியோ விஜய் மல்லையாவின் சாராய நிறுவனத்தின் பங்குகளை ரூ.11,000 கோடி அளவுக்கு வாங்கப் போவதாக செய்திகள் வெளியாயின. வங்கிகளும் நிபுணர்களும் கிங்ஃபிஷரின் பிரச்சனைகள் ஓரளவு தீரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதாவது வங்கிகள் தந்த பணம் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்ப் பார்த்தார்கள். விஜய் மல்லையா அவர்கள் எதிர்ப்பார்ப்பை பற்றி சற்றும் கவலைப்படாமல் அதை முழுவதுமாக அலட்சியப்படுத்தி சொன்னார்: ‘ஒரு தொழிலின் பிரச்சனை இன்னொரு தொழிலை தொற்றக் கூடாது. கிங்ஃபிஷர் ஏர்லைன்சுக்கும் கிங்ஃபிஷர் சாராயத்துக்கும் சம்பந்தமில்லை. பின்னது லாபகரமாக நடக்கும் தொழில். முன்னது நஷ்டத்தில் ஓடும் தொழில். அது வேறு, இது வேறு. இந்தியாவில் இருக்கிற சூழலில் வெற்றிகரமாக நடக்கிற ஒரு தொழிலில் இருந்து பணம் எடுத்து நஷ்டத்தில் ஓடுகிற தொழிலில் போடும் அளவுக்கு எனக்கு புத்தி கெட்டுப் போய்விடவில்லை. அதிகமான எரிபொருள் விலை, ஆபாசமான உயர்வரிகள், அந்நிய முதலீட்டுக்கு அனுமதியின்மை போன்றவற்றால், வளர்ச்சிக்கான உள்ளாற்றல் இருந்தும், இந்திய விமான போக்குவரத்து ஈர்ப்பதாக இல்லை’.
பெயின்ட், மருந்துகள், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், விவசாய ரசாயனப் பொருட்கள், உணவுப்பொருட்கள், சாராயம் இன்னும் பல தொழில்களை அவர் தந்தை விட்டுச் சென்றார். ஏசியன் ஏஜ், சினி ப்லிட்ஸ் போன்ற பத்திரிகைகளை விஜய் மல்லையா வாங்கினார். கால் பந்து, கிரிக்கெட், கார் பந்தயம் போன்ற வற்றின் விளையாட்டு வீரர்களை வாங்கினார். இந்த எந்த சொத்துக்கும் விஜய் மல்லையா வங்கியில் வாங்கிய கடனாலோ, கிங்ஃபிஷர் ஊழியர்கள் போராட்டத்தாலோ எந்த பாதிப்பும் வராது. கிங்ஃபிஷருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துக்கு இந்திய தொழில் சூழல்தான் காரணம் என்றும் அவர் சொல்கிறார்.
விஜய் மல்லையா போன்றவர்களின் அருள் வாக்குக்குத்தானே சிதம்பரம் போன்றவர்கள் காத்திருக்கிறார்கள். டியாஜியோ நிறுவனம் விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கினால் வரும் பணத்தை நஷ்டத்தில் இருக்கிற கிங்ஃபிஷர் நிறுவனத்தில் போட மாட்டார். கிங்ஃபிஷர் வாங்கியுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனையும் அந்தப் பணத்தில் இருந்து திருப்பித் தர மாட்டார். அவரைப் பொறுத்தவரை அந்த நஷ்டம் அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட நஷ்டம். எனவே அந்தக் கடனுக்கும் அதுபோன்ற வேறு பல கடன்களுக் கும் அரசே பதில் சொல்கிறது. ரமணன் சலனமற்ற குரலில் வானிலை அறிக்கை சொல்வது போல், பொருளாதார வளர்ச்சிக் குறைவின் பிரதிபலிப்பு வாராக் கடன்கள்என்கிறார் சிதம்பரம். பொருளாதார நிலைமை சீரடைந்துவிட்டால், இந்த வாராக்கடன்கள் நிரந்தர சொத்துக்களாகிவிடும் என்கிறார். கடைத்தேங்காயை வழிப்பிள்ளை யாருக்கு உடைக்கிறார்.
செயல்படாத சொத்துக்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வாராக்கடன்களால் வங்கி சொத்துக்களின் தரம் குறைந்து விட்டது என்கிறார்கள். வாங்கப்பட்ட கடனுக்கு மூன்று தொடர் மாதங்கள் வட்டி செலுத்தப்படாவிட்டால் அது வாராக்கடன் ஆகிவிடும். விஜய் மல்லையா போன்ற கனவான்கள் வாங்கி, திருப்பித் தராத கடனால் பொதுத்துறை வங்கியின் சொத்தின் தரம் குறைந்துவிடுகிறது. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதால் கடன் வாங்கிய நிறுவனங்கள் கடனை திருப்பித் தர முடியவில்லை. இதனால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பின்தங்கிய நிலையை மேம்படுத்த, இப்படி தரம் குறைந்த சொத்துள்ள வங்கியை வலுப்படுத்தத்தான் அரசு வங்கிகளுக்குத் தரும் இந்த ஒதுக்கீடு. இப்படி ஊர் பணத்தை அடித்து முதலாளிகள் உலையில் போடுவதற்குப் பெயர் நிதிநிலை அறிக்கை. அவர்கள் மேலும் கடன் வாங்கி ஏமாற்ற வழி செய்வதற்குப் பெயர் பொருளாதார மேம்பாடு.
இந்த ஆண்டு இப்படி ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவு என்றும் ரூ.90,000 கோடி வேண்டும் என்றும் செப்டம்பரில் மத்திய வங்கி சொன்னது. அந்த அளவுக்கு பொதுத்துறை வங்கிகளின் சொத்துக்கள் தரம் குறைந்து விட்டது. அதாவது கொடுக்கப்பட்ட கடன் திரும்பவில்லை. வங்கிகளில் உள்ள மக்கள் பணமும் போய் அதற்கு மேல் அரசாங்கத்திடம் உள்ள மக்கள் பணமும் போகிறது. தன்னிடம் கோடிகோடியாய் பணம் புரளுகிறபோது, தானே பணத்தில் புரளும்போது, அந்தப் பணத்தை எல்லாம் பாதுகாப்பாக தானே, தனக்காக வைத்துக்கொண்டு கிங்ஃபிஷர் நிறுவன நெருக்கடியை சமாளிக்க இன்னும் யாராவது கடன் தருவார்களா என்று ஆராய்ந்து சொல்ல இரண்டு நிறுவனங்களை பணிக்கமர்த்தியிருக்கிறார் விஜய் மல்லையா. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும், இருக்கிற, வரவிருக்கிற பணத்தை கொண்டு கடனை அடை, ஊழியர்களுக்கு ஊதியம் கொடு, பாக்கிகளை ஈடுகட்டு என்று அவரை வற்புறுத்தவில்லை. அவர் சொத்துக்களை பறிமுதல் செய்யவில்லை. வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மாறாக, அவர் வாங்கிய கடனை காந்தி கணக்காக்க வழிசொல்கிறார்கள்.
மத்தியில் உள்ள ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் தலைவரின் மருமகனின் ஆசி பெற்ற டிஎல்எஃப் நிறுவனத்தின் கடன் ரூ.23,200 கோடி. தனது காற்றாலைகளை விற்கவும் டிஎல்எஃப் திட்டமிட்டுள்ளது. 12 நாடுகளில் உள்ள 22 ஓட்டல்கள் கொண்ட அமன் ரிசார்ட்ஸ் ஓட்டலை விற்க ஓராண்டு காலமாக முயற்சி செய்கிறது. இதில் 400 மில்லியன் டாலர் (ரூ.2,200 கோடி) வரும் என்று எதிர்ப்பார்க்கிறது. மும்பையில் இருந்த தனது நிலத்தை ரூ.2,700 கோடிக்கு லோதா குழுமத் துக்கு விற்றது. இவற்றை விற்று 2013 மார்ச்சுக் குள் ரூ.18,500 கோடியாக கடனை குறைத்துவிட முடியும் என எதிர்ப்பார்க்கிறது. இந்தக் கடன் களில் வாராக்கடன்களுக்கு பங்களிக்கிற கடன் பற்றிய விவரம் வெளியாகவில்லை. வங்கிகள் வாராக்கடன் எவ்வளவு என்ற விவரங்களை மட்டும்தான் வெளியிடும். கடன் வாங்கிய நிறுவனங்கள் பெயர்களை, பட்டியலை ராணுவ ரகசியம் போல் வைத்திருக்கின்றன.
இப்படி 2012 - 2013 மட்டும் பொதுத்துறை வங்கிகளில் ரூ.2000 கோடி வாராக்கடன் உள்ளது. 2012 வரையிலான மொத்த வாராக் கடன் ரூ.1,11,664 லட்சம் கோடி. அசோசேம் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின்படி மார்ச் 2013ல் வாராக் கடன்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டலாம்.
கார்ப்பரேட் கடன் மறுகட்டமைப்பின்படி கடனுக்கான நிபந்தனைகளை தளர்த்துவது. வட்டியை குறைப்பது அல்லது கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிப்பது அல்லது இரண்டையும் செய்வது ஆகியவற்றைச் செய்து கடனைத் திருப்பித் தர முடியாத நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவுகின்றன. 2012ல் முடிகிற நிதியாண்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட கடன் ரூ.1.2 டிரில்லியன். 2013ல் முடிகிற நிதியாண்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட கடன் ரூ.2.05 டிரில்லியன் என உயரக்கூடும். இதுவரை செய்யப்பட்ட மறுகட்டமைப்புக்கான மொத்த நிதியுதவியில் 10% பெருநிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட கடன்களில் 8.24% பெருஉற்பத்தி துறை வாங்கியது. சாமான்ய மக்கள் வாங்கும் கடனுக்கு இதுபோன்ற சலுகைகள் ஒருபோதும் தரப்படுவதில்லை. அவர்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ தற்கொலை செய்துகொள் கிறார்கள். கடன் திருப்பித் தர முடியாத பெரு நிறுவனங்கள் தற்கொலை செய்துகொள்வது இல்லை. அடுத்த கடன் எங்கு, எப்படி வாங்கு வது என்று திட்டமிடத் துவங்கிவிடுகின்றன.
பெருநிறுவனங்களுக்கு சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் நிதியை அள்ளித் தந்துவிட்டு சாமான்ய மக்களுக்குத் தரப்படும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை நான்கா, ஆறா, எட்டா என்று வியாபாரி கணக்கு போடுகிறார்கள். 12 தந்துவிட்டால் அய்முகூ அரசின் கருணை என்கிறார்கள்.
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இலங்கை வேந்தன் கலக்கத்தையும் கடன்பட்டார் கலக்கத்தையும் ஒருசேர தமிழில் மிக அழகாகச் சொல்ல முடிகிறது. இந்த அழகுக்குப் பொருளில்லாமல் செய்துவிடுகிறார்கள் விஜய் மல்லையாவும் சிதம்பரமும். முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்குகிறோம், தொழில் வளர்க்கிறோம், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கிறோம் என்றெல்லாம் பெயர் சொல்லி விஜய் மல்லையா போன்ற பெருமுதலாளிகளுக்கு ஆட்சியாளர்கள் வாரிவாரிக் கொடுக்கிறார்கள். கடன்பட்டவர்கள், கடன் அடைக்க முடியாமல் போனதற்கு காரணம் நீங்கள்தான், மேலும் கடன் கொடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் கலங்குவதில்லை. அவர்களுக்கு கடன் கொடுத்துக்கொண்டே இருக்க வசதியாக வங்கிகளில் சிறுகசிறுக பணம் சேர்க்கும் மக்கள் வாழ்நிலைமைகளில் மேம்பட்ட மாற்றம் ஏற்படுவதே இல்லை. மேல்மட்டத்தில் வரும் வளர்ச்சி கொஞ்சம்கொஞ்சமாக கசிந்து கீழே இருப்பவர்களுக்கு வந்து சேரும் என்ற உலகமய சூத்திரத்துக்கு நேரெதிராக, கீழே இருக்கும் மக்கள் சேமித்த பணம், அவர்கள் வரியாக கட்டி அழுத பணம் எல்லாம் மொத்தமாக மேலே இருப்பவர்களுக்கு சென்று சேர்ந்து மாயமாகி விடுகிறது. உலகமயம், உண்மையில், அனைத்து அம்சங்களிலும் தான் சொல்வதற்கு மாறாகத்தான் இயங்குகிறது.
¾ ஈஸ்வரி