சிறப்புக்
கட்டுரை
பால் தாக்கரே,
அஜ்மல் கசாப்பிடம்
இருந்து வேறுபட்டவரா?
எஸ்.குமாரசாமி
அஜ்மல் கசாப் 21.11.2012 அன்று மகாராஷ்டிராவின் எர்வாடா சிறையில் தூக்கில் இடப்பட்டார். (நாடாளுமன்றத்தில் வீசப்போகும் புயலைச் சந்திக்க, காங்கிரசின் தேசபக்தியை பறைசாற்ற அவசரஅவசரமாக, ரகசியமாக தூக்கில் இடப்பட்டார்). பால் தாக்கரே 17.11.2012 அன்று நோய்வாய்ப்பட்டதால் இறந்தார். அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டதற்குக் கொண்டாட்டங்களும் இருந்தன. ஆனால், பால் தாக்கரே மரணத்தை, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஈடுகட்ட முடியாத மரணம் என்று சொல்லி அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கர் தாம் அனாதையாகிவிட்டதாக வருந்தினார். ராம்கோபால் வர்மா, பால் தாக்கரேயின் தொலை நோக்குப் பார்வையை சிலாகித்தார்.
வர்த்தகத் தலைநகரில் பெருநிறுவன சீமான்களும் சீமாட்டிகளும், ‘நாட்டு நலனில் இருந்து, மக்கள் நலனில் இருந்து, அவரது சிறப்பு கவனம் பெற்ற பிரச்சனைகளாக, இடம் பெயர்தலும் மதவாதமும் இருந்தன’ என்று கோடிட்டுக் காட்டினர்.
மின்னணு ஊடகங்கள் அவரது இறுதிச் சடங்குகளையொட்டி பால்கரில் இரண்டு இளம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசியதற்கு அப்பால், அவரது, சமூகஅரசியல் வழிமரபைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்த முன்வரவில்லை.
பால் தாக்கரே
வருகையும்
தொலைநோக்குப்
பார்வையும்
பால் தாக்கரேயின் தொலைநோக்குப் பார்வை 1967லேயே வெளிச்சத்துக்கு வந்தது. அவர் நவ்கல் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். ‘இன்றைய இந்தியாவுக்கு ஒரு ஹிட்லர் தேவை’. அவரது லட்சியத்துக்கு சோதனைக் கூடமாக மும்பையை தேர்வு செய்தார். ஹிட்லர், பெருமுதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவின் பிரதிநிதி. உலக வரலாறு முதலாளித்துவமா, சோசலிசமா என்ற குறுக்குச் சாலையில் நின்றபோது, ஏகாதிபத்தியத்தின் ஓர் ஆகக்கூடுதல் பிற்போக்கு பிரிவு, பாசிசத்தையும் ஹிட்லரையும் முன்நகர்த்தியது. ஹிட்லரின் செல்வாக்கும், நடுத்தர வர்க்க, சிறுவர்த்தகப் பிரிவு இளைஞர்கள் மத்தியில் தான் வேர்விடத் துவங்கியது. முதல் உலகப் போர் தோல்விக்குப் பிறகு ஜெர்மனியின் மீது திணிக்கப்பட்ட அவமானகரமான உடன் படிக்கை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி என்ற பின்புலத்தில், ஆரிய உயர் இனத்தவரான ஜெர்மானியர்கள், உலகாளப் பிறந்தவர்கள், மீண்டு எழும் ஜெர்மனியின் காலடியில் உலகமே இருக்கும் என்றெல்லாம் ஹிட்லர் சொன்னது, ஜெர்மனியை மதிமயங்கச் செய்தது. அதற்குப் பிறகுதான் உலக வரலாற்றில் ரத்தம் தோய்ந்த இருண்ட அத்தியாயங்கள் எழுதப்பட்டன. பால் தாக்கரே, சங்பரிவார், ஜார்ஜ் புஷ் போன்றோர் ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சட்டகத்தைக் கட்டமைப்பதில் ஹிட்லர்தான் அவர்களின் வழிகாட்டி.
ரத்த
சகதியில்
தங்கம்
எடுத்த
தாக்கரே
பால் தாக்கரேயின் சிவசேனாவின் துவக்கப் புள்ளி மும்பை. மும்பையின் மகத்தான வரலாற்றுப் பக்கங்கள் மீது சேறும் சகதியும் பூசி ரத்தம் தெளித்தவர் பால் தாக்கரே. 1908லேயே மும்பை பாட்டாளி வர்க்கம் இந்தியாவையே தட்டி எழுப்பியது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகருக்கு, வெள்ளையர் ஆட்சி சிறைத் தண்டனை வழங்கி, அவரை நாடு கடத்த முடிவெடுத்தது. கண்டனம் தெரிவித்த தொழிலாளர்கள், மும்பை வீதிகளைப் போர்க்களமாக்கினர். நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில், அந்நியத் துணிகள் புறக்கணிப்பு போராட்டம் எழுந்தபோது, முதல் களப்பலியானவர் ஒரு மும்பை தொழிலாளிதான். கப்பல் படை எழுச்சியின்போது, மும்பை தொழிலாளர்கள்தான் சாமான்ய மக்களோடு கைகோர்த்து, தடுப்பரண்கள் அமைத்து கையில் கிடைத்த ஆயுதங்கள் கொண்டு போராடி, பெரும் எண்ணிக்கையில் உயிர்த் தியாகம் செய்தனர். அதற்குப் பிறகும் எத்தனையோ போராட்டங்கள்.
இந்த மும்பை நகரம், காந்தம் போல், நாட்டின் பிற பகுதி மக்களைத் தன்னை நோக்கி ஈர்த்தது. தமிழர்கள், கன்னடத்தவர், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலத்தவர், குஜராத்திகள் மும்பையில் குடியேறினர். இந்தியாவின் கனவுத் தொழிற்சாலையான பாலிவுட்டைக் கொண்டிருக்கிற மும்பையில்தான் தம் கனவுகள் கைவசப்படும் எனப் பலரும் வந்தனர். திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன், வரதராஜ முதலியார் அனைவருமே மும்பைக்கு வந்து குடியேறியவர்களே. இந்த சங்கமம், மும்பையை செழிப்பாக்கியது. மும்பையை வண்ணமயமாக்கியது.
மும்பைக்கு வேறோர் அடிப்படை குண இயல்பும் இருந்தது. அது ஒரு தொழில் நகரம். கிரண்காவ் என்றழைக்கப்பட்ட பகுதியில் மட்டும் 2,40,000 ஜவுளித் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். பங்குச் சந்தை பொருளாதாரத்துக்கு முன்பு, பொருளுற்பத்தியும் சேவைகளும் மும்பையின் அடையாளமாக இருந்தன. ஆன போதும் மும்பை ஒரு நரகமாகவும் இருந்தது. ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவி அங்குதான் இருந்தது. 1960 - 1970 காலங்களில் 50% மும்பை மக்கள் 6% நிலப்பரப்பில் சுருங்கி வாழ்ந்தனர். 6 பேர் கொண்ட குடும்பம் 15 சதுர மீட்டரில் ஒடுங்கி இருப்பதும், 6 குடும்பங்களுக்கு ஒரு கழிப்பிடம் என்பதும் 75% மக்களின் அன்றாட வாழ்வானது. 75% பெண் குழந்தைகளும், 66% ஆண் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் தேய்ந்தனர். வேலையின்மை. உபரி மக்கள் தொகை. வசதிகள் ஏதுமற்ற வாழ்க்கை. இவையே, பால் தாக்கரே, மராத்தி மனூஸ் என்ற மகாராஷ்ட்ரிய அடையாள சமூக அரசியல் கருத்தியலை, நடைமுறையைக் கட்டமைப்பதற்கான விளை நிலமாகத் திகழ்ந்தன. ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற நச்சுமரம், பால் தாக்கரேக்கு அரசியல் தங்கத்தை கொட்டித் தந்தது.
‘நாம் எதிர்
அவர்கள்’
வளர்ந்த
கதை
இந்த மும்பையில்தான் பால் தாக்கரேயும் சிவசேனாவும் தொழிலாளர்களை அடித்து நொறுக்குகின்றவர்களாக சங்கங்களை ஒடுக்குபவர்களாக துவங்குகினர். மகாராஷ்டிராவின் தொழிலையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் புனிதப் பணியில் இறங்கினர்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாயைக் கொன்றபோது, பால் தாக்கரே சொன்னார்: ‘இது மற்ற லால்பாய்களுக்கு (கம்யூனிஸ்ட்டுகளுக்கு) எச்சரிக்கையாக அமையட்டும்’. படிப்படியாக குஜராத்திகள் மிரட்டப்பட்டனர். கன்னடத்தவரின் உடுப்பி ஓட்டல்கள் தாக்கப்பட்டன. தாராவி தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். மத்தியதர வர்க்கத் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சட்டம் ஒழுங்கு வேடிக்கை பார்த்தது. ஒத்துழைத்தது. சிவசேனா வளர்ந்தது. பால் தாக்கரே மாவீரர் ஆனார்.
ஆனால், இந்த மாவீரர், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது மண்டியிட்டு ஆதரித்தார். 1980களின் துவக்கத்தில் இரண்டு லட்சம் ஜவுளித் தொழிலாளர்கள், டாக்டர் தத்தா சமந்த் தலைமையில் போராடியபோது, வாலைச் சுருட்டிக் கொண்டார். ஒரு கட்டத்தில் போராட்டம் ஓய்ந்தது. நிலஊக வணிகம் செழித்து வளர்ந்தது. சிவசேனா காட்டில் மழை. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, குடியிருப்போர் வெளியேற்றம் என்பவற்றில் சிவசேனா முத்திரை ஆழப்பதிந்தது. மும்பையின் ஆலைச் சங்கோசை நின்ற சில காலத்துக்குப் பிறகு, சிவசேனா இந்துத்துவா துருப்புச் சீட்டைக் கையில் எடுத்தது.
பாப்ரி மசூதி இடிப்பு, மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, 1992 - 1993ல் இசுலாமியர்களை வேட்டையாடியது. காவல் துறையும் அரசும் செயலூக்கத்துடன் ஒத்துழைத்தன. நரேந்திர மோடிக்கு முன்னோடி பால் தாக்கரேதான். நீதிபதி சிறீகிருஷ்ணா ஆணையம், பால் தாக்கரே மற்றும் சிவசேனா மீது குற்றம் சுமத்திய பிறகும், எவரும் அவர்களுக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்க வில்லை. 1992 - 1993ல்தான் பால் தாக்கரே, ‘ஒரே ஒரு லாண்டேயைக் கூட (இசுலாமியர் பற்றிய இழிசொல்) விட்டு வைக்கக் கூடாது’ என்றும், ‘மும்பை மாநகர கூடுதல் காவல் ஆணையர் எ.எ.கானை அல்லாவின் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்றும் கர்ஜித்தார். இவர்களது அணுகுமுறை தலித்துகள் விசயத்தில் மட்டும் சாதகமாக இருந்துவிடுமா? மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது தாக்கரே கேட்டார்: ‘கரத் நஹி பீத் அனி கஷாலா ஹவே வித்யாபீத்?’ சோற்றுக்கே ஏதும் இல்லாதபோது, உங்களுக்கு பல்கலைக் கழகம் வேறு வேண்டுமா? காலிஸ்தான் தீவிரவாதம் இருந்தபோது, பால் தாக்கரே, மும்பை சீக்கியர்களையும் மிரட்டினார்.
இந்த பராக்கிரம வரலாற்றுக்கு அக்கம் பக்கமாக அரசியல் சந்தர்ப்பவாதமும் அரங்கேறியது. பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே, காங்கிரஸ் வேட்பாளர்களான பிரதீபா பாட்டீலையும் பிரணாப் முகர்ஜியையும் ஆதரிப்பதில் சிவசேனாவுக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை என்பது சமீபத்திய கதை.
இறுதிச்
சடங்கை
அடுத்து
பால் தாக்கரே மரணத்துக்குப் பிறகு, சாஹின் தாதா என்ற இளம்பெண் தம் முகநூலில் பதிவு செய்தார்: ‘மிகுந்த மரியாதையோடு ஒன்று சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தாலும் உலகம் நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஓர் அரசியல்வாதி இயற்கை மரணம் அடைந்த பிறகு, ஏன் எல்லோருக்கும் பித்துப் பிடிக்க வேண்டும்? நாம் இன்று சுதந்திர இந்தியர்களாக இருக்கக் காரணமான தியாகிகள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கு நாம் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியாவது செலுத்துகிறோமா? மரியாதை சம்பாதிக்கப்பட வேண்டும். மிரட்டல்களால் பெறப்படக் கூடாது. மும்பை, மரியாதையால் அல்ல, மிரட்டலால் முடங்கிப் போனது’. இந்தப் பதிவு தனக்குப் பிடித்துள்ளது என்று மட்டுமே இன்னோர் இளம்பெண் பதிவு செய்தார். இரு பிரிவினருக்கிடையில் வெறுப்பு உருவாக்கியதாக இருவரும் இபிகோ பிரிவு 505 (2)ன் கீழ் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் கண்டனம் எழுந்தது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இந்த கைது நடவடிக்கையைச் சாடினார். அதற்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசு, அந்தப் பெண்களின் பாது காப்புக்காகவே அவர்களை கைது செய்ததாகச் சொன்னது! காங்கிரசின் பிரச்சார பீரங்கியான திக்விஜய் சிங், பால் தாக்கரே, வாழ்நாளெல்லாம் போராளியாகத் திகழ்ந்தவர் என்று புகழ் ஆரம் சூட்டினார். வன்மையான இந்துத்துவாவுடன் (சிவசேனா) மென்மையான இந்துத்துவா (காங்கிரஸ்) எப்படி கைகோர்க்கின்றது! பிரிவு 505(2)ன் கீழ் காலமெல்லாம் சிறையில் இருந்திருக்க வேண்டியவர் பால் தாக்கரேதான்.
தொகுப்பாக
அஜ்மல் கசாப்பின் குற்றத்துக்கு, ஒரு சர்வதேச அரசியல் சமூக பின்புலம் உண்டு. அவரது குற்றம் ஒரே நாளில் நடந்து முடிந்து விட்டது. பால் தாக்கரே, தம் அரசியல் வாழ்க்கை நெடுக, பாசிச நஞ்சைக் கக்கியவர். ஆகவே, அந்த வகையில், அஜ்மல் கசாப்பையும் பால் தாக்கரேயையும் ஒப்பிடுவது நியாயம் ஆகாது.
மும்பை தனது முற்போக்கு ஜனநாயக சீர்திருத்த பாரம்பரியத்தை, புதிய சூழலுக்கேற்ப மீட்பது, பால் தாக்கரே வழிமரபுக்கு விரைந்து விடை கொடுக்க உதவும்.