உலகம்
சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் 18ஆவது
காங்கிரஸ்
பாதையை மாற்றிக்
கொள்ளும் அறிகுறிகளை
காண முடியவில்லை
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளுகிற உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் (8 கோடி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற 2300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்) 18ஆவது காங்கிரஸ் வியப்படையத்தக்க ஏதும் முன்வைக்கவில்லை. அதிகரித்து வருகிற வேலை வாய்ப்பின்மை, ஆபத்தான வேலைநிலைமை கள், கட்டுக்கடங்காத ஊழல், கிராமப்புற வறுமை, நிலப்பறி, சமூக ஏற்றத்தாழ்வு, பெண்கள் ஓரங்கட்டப்படுதல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது ஆகியவை பற்றிய கவலை தரும் செய்திகள் வருகிற பின்னணியில் காங்கிரஸ் நடந்தது.
புதிய தலைமையை தேர்ந்தெடுத்த 18ஆவது காங்கிரசின் விவாதங்கள், அதிகரித்து வருகிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை முயற்சிகள் எடுப்பதாகக் காட்டவில்லை. சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி என்ற பிரச்சனையே காங்கிரஸ் தீர்மானங்களில், உரைகளில் மேலோங்கி இருந்தது. துவக்க அமர்வில் உரையாற்றிய பதவிக்காலம் முடிகிற பொதுச் செயலாளர் ஹு ஜின்டாவோ, 2010ல் நாட்டில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் தனிநபர் வருமானத்தையும் 2020ல் இரட்டிப்பாக்க இலக்கு முன்வைத்தார்.
இதற்கு முன்பு, வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு நிர்ணயிப்பது மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக தனிநபர் வருமானத்துக்கு இலக்கு நிர்ணயிப்பதும் சேர்க்கப்படுகிறது. வளர்ச்சியின் பண்புக்கும் கவனம் செலுத்தப்படுவதை இது காட்டுகிறது. ‘சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உயர்முன்னுரிமை தரவும்’ காங்கிரஸ் முதல் முறையாக முடிவு செய்தது.
அதேபோல், பதவிக் காலம் முடிகிற மத்திய கமிட்டி முன்வைத்த வேலை அறிக்கையை ஏற்கும் தீர்மானம், தற்போதைய ஏற்றுமதி ஊக்குவிப்பு மாதிரியில் இருந்து சற்று விலகியதாக, மேலும் கூடுதல் சமமான, உள்நாட்டு வளர்ச்சியை உந்துகிற, புதிய கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படுகிற வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. உண்மையில் சீன அரசாங்கம், சர்வதேச பொருளாதார நெருக்கடி துவங்கியதில் இருந்து, கொள்கை திசைவழியில் அதுபோன்றதொரு மாற்றத்தை புகுத்தத் துவங்கியது. இதனால் பிற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் சீனா மேலான நிலையில் இருந்தது. இப்போது காங்கிரஸ், ‘வளர்ச்சி மாதிரியின் மாற்றத்தை துரிதப்படுத்துவதன் அவசியம் பற்றி அழுத்தம்’ தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தந்திருக்கிற புதுப்பிக்கப்பட்ட அழுத்தம் பொருளாதாரம் மேலும் மந்தமடைவதைத் தடுத்து, சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் வெற்றி பெறுமானால், அது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து வளர்கிற நாடுகளுக்கும் உற்சாகம் தரும் மாற்றமாக இருக்கும். ஆயினும், ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி போர்த்தந்திரம் மீதான கட்டமைப்பு ரீதியான சார்பு நிலை, மலிவான உழைப்பு மற்றும் கூடுதல் ஏற்றுமதி மாதிரியின் மூலம் பெருமளவில் லாபம் ஈட்டியிருக்கிற, அரசாங்கத்தில் உள்ள சுயநலம் பேணும் பிரிவினரின் கடுமையான எதிர்ப்பு போன்ற மிகவும் காத்திரமான பொருளாதார மற்றும் அரசியல் தடைகளால், இது மிகவும் கடுமையான கடமையாக இருக்கும்.
இந்தக் கடமையோடு தொடர்புடைய இன்னும் அவசரத் தன்மை வாய்ந்த கடமை ஊழலைக் கட்டுப்படுத்துவது. ‘ஊழலைக் கட்டுப்படுத்துவதில் நேர்மையை மேம்படுத்து வதில் நாம் ஒரு தெளிவான சீன அணுகுமுறையை கைக்கொள்ள வேண்டும்’. தண்டனையை விட தடுப்பதில் கூடுதல் அழுத்தம் வைக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அறிக்கை தீர்மானம் சொல்கிறது. வேண்டியவர்களுக்கு ஆதாயம் தேடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிற பின்னணியில் இந்த அவசரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில்தான் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் சோங்கிங் தலைவருமான போ சிலாயும் முன்னாள் ரயில்வே அமைச்சரும் முறைகேடு மற்றும் அதிகாரத்ததை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் பேரில் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டார்கள். இருவரும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். போ விவகாரம் கட்சிக்கு மிகுந்த சங்கடம் தருவது. ஏனென்றால் அவர் ‘பட்டத்து வாரிசுகளில்’ (முன்னாள் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள் இப்படித்தான் கேலியாக அழைக்கப்படுகிறார்கள்) ஒருவர்.
அவர் விவகாரம் தனித்ததோ, விபத்தாக நேர்ந்ததோ அல்ல என்பது கட்சி அரசியல மைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கியமான திருத்தத்தில் இருந்து தெரிகிறது. ‘கட்சி, அதன் ஊழியர்களை தார்மீக நேர்மை மற்றும் தொழில்முறை ஆற்றல் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னதுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும். ஊழியர்களை அவர்களின் பிறப்பு அடிப்படையில் அல்லாமல், (அழுத்தம் நாம் தந்தது. அவர்கள் குடும்பப் பின்னணிகள் என்பதை குறிக்க சிறப்பு அழுத்தத்துடன் சொல்லப் படுகிறது) திறமைகளின் அடிப்படையில் நியமிக்க வேண்டும்’ என்று அது சொல்கிறது. கட்சி, ‘ஊழியர்களைக் கண்காணிக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் அந்தத் திருத்தம் பொதுவாகச் சொன்னது.
கட்சி எதிர்கொள்ளும் பல சவால்களில் ஒன்றே ஒன்றுதான் ஊழல். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளரே காங்கிரஸ் நிறைவுற்றவுடன் முதன் முதலில் மக்கள் மத்தியில் பேசியபோது சொன்னதுபோல, ‘கட்சிக்குள் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சனைகள், குறிப்பாக ஊழல், மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டு இருப்பது, கட்சியில் இருப்பவர்கள் சிலரால் உருவாக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், அதிகாரத்துவம் ஆகியவற்றின் ஊடே செல்ல வேண்டியிருப்பது என பல உள்ளன’.
மிகவும் ஆபத்தான சில பிரச்சனைகளை நேர்மையாக அங்கீகரித்திருப்பது, அவற்றைக்களையும் முயற்சி ஆகியவை உண்மையில் பாராட்டத் தக்கவை. ஆனால், பிரச்சனைகளின் வேர்களை வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த சுயபரிசோதனை போதுமானதாக இல்லை. இவை நடைமுறையில் மட்டுமின்றி, ‘சீன இயல்புகளுடனான சோசலிசம்’ என்ற பூச்சுடன் சொல்லப்படும், முன்னுக்குப்பின் முரணான, சந்தையால் உந்தப்படும் சோசலிசக் கட்டுமானம் என்ற கருத்திலேயே உள்ளன.
1980களில் இருந்து கடைபிடிக்கப்படும் இந்தப் பாதை, கட்டுக்கடங்காத ஊழல், அதிகரித்து வருகிற சமூக, பிராந்திய மற்றும் பால்ரீதியான வேறுபாடுகள், கலாச்சார சீரழிவு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் பிற தீங்குகளுடன் விடாப்பிடியாக சேர்ந்து கொண்டுள்ள, ஒருவிதமான குறுக்கப்பட்ட நவதாராளவாதப் பாதையிலான, வண்ணமயமான முதலாளித்துவ வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது காங்கிரசைத் தொடர்ந்த நடந்த நமது எட்டாவது கட்சி காங்கிரஸ் ஆவணத்தில் நாம் குறிப்பிட்டுள்ள படி,
‘அடிக்கட்டுமானத்தில் வேகமாக வளர்கிற முதலாளித்துவ உறவுகள், இயல்பாக மேல்கட்டு மானத்தின் மீது - அரசியல், ஆளும் கட்சியின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள், அதன் உறுப்பினர்களின் நடத்தை - அதன் தாக்கத்தை கொண்டுள்ளன.... எனவே, மேலும் ஆழமாகக் கருத்தியல் அரசியல்ரீதியாக சீர்செய்வது, பாதையை திருத்தியமைத்துக் கொள்வது ஆகியவற்றுக்கான தேவையை, உலகம் முழுவதும் சீனப் பரிசோதனையின் நலன் விரும்புவோர் உணர்கின்றனர்’.
இதுவரை வெளியாகியுள்ள 18ஆவது காங்கிரஸ் ஆவணங்களில், அதுபோன்ற ஓர் அடிப்படை பாதை மாற்றத்துக்கான அறிகுறி ஏதும் இல்லை. ஊழல் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற்றை அறிகுறிகளாக கொண்ட அரசியல் - கருத்தியல் சீரழிவுப் புற்றுநோய் கட்டுக்கடங்காமல் பரவுவதில் வியப்படைய ஏதுமில்லை.
- லிபரேசன்,
டிசம்பர் 2012