சிறப்புக்
கட்டுரை
ஒபாமா மீண்டும்
வெற்றி
ஜனநாயகம்
வென்றதா, பணநாயகம்
வென்றதா?
எஸ்.குமாரசாமி
அமெரிக்காவில் இன்னமும் இப்போதும் இடதுசாரி அறிஞர்கள் மார்க்சிய சிந்தனையாளர்கள் இருக்கின்றனர். அவர்களது வாதப்படி, “அமெரிக்காவில் ஜனநாயகம் (டெமாக்ரசி) இல்லை; பணநாயகம் (டாலரோக்ரசி)தான் இருக்கிறது. அவர்கள், திட்டவட்டமாக, நிதி மூலதனம் எதை விரும்புகிறதோ, அதைத்தான், அதை மட்டும்தான், ஒபாமாவோ ராம்னியோ செய்ய முடியும்” என்கிறார்கள்.
இந்த
தேர்தலில்
கவனிக்கத்தக்க
எந்த
விசயமும் இல்லையா?
1848ல் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை “நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின், பொதுவிவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல” எனப் பிரகடனம் செய்தது. அமெரிக்காவானாலும் இந்தியாவானாலும் வேறு எந்த நாடானாலும், இதுதான், முதலாளித்துவ அரசுகளின் அடிப்படை இலக்கணம்,
ஆனால் எந்த முதலாளித்துவ அரசும், தன்னை முதலாளிகளின் அரசு என்று அப்பட்டமாக முழுமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. தன்னை ஒரு மக்கள் அரசு எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில்தான், ஒபாமா ராம்னி பிரச்சாரங்கள் அமைந்தன. ஒபாமா சற்றுக் கூடுதல் திறமையுடன், வெற்றி பெறும் ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கி தனக்கு வாக்களிக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் வாக்குகளில் குறைவாகப் பெறும் ஒருவர் கூட, தேர்வாளர் வாக்குகளைக் கூடுதலாகப் பெறுவதன் மூலம், அமெரிக்க அதிபராக, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம் இடம் தருகிறது. ஒவ்வொரு மாநிலமும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் எம்பிக்களின் எண்ணிக்கைக்கு ஈடான எண்ணிக்கைக்கு, வாக்காளர் அவை (எலக்டோரல் காலேஜ்) கொண்டிருக்கும். எந்தவொரு மாநிலத்திலும் எந்த வேட்பாளர் மக்களின் கூடுதல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் மொத்த வாக்காளர் அவையின் (winner take all) வாக்குகளையும் எடுத்துக் கொள்வார். 538 பேர் கொண்ட வாக்காளர் அவையின் 270 வாக்குகளைப் பெறுபவர், அந்த வகையில் அதிபராக முடியும். ஒபாமா கடைசியாக வென்ற புளோரிடாவின் 29 வாக்காளர் அவை வாக்குகளும் உட்பட 332 வாக்குகள் பெற்றுள்ளார். ராம்னி 206 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 2008ல் குடியரசு கட்சியின் ஜான் மெக்கெயின் 173 வாக்காளர் அவை வாக்குகள் பெற்ற போது ஒபாமா 365 வாக்குகள் பெற்றார். கருத்துக் கணிப்புகள், நூலிழை வெற்றி பற்றிப் பேசியபோது, ஒபாமா வாக்காளர் அவை வாக்குகளில் வெற்றிக்குத் தேவையான 270அய்க் காட்டிலும் கூடுதலாக 62 வாக்குகள் பெற்றுள்ளார். கடைசியாக எடுக்கப்பட்ட அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, புதிய பிறப்புக்களில், ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளையினத்தவர் 49.6%; கருப்பினத்தவர், ஹிஸ்பானிக், ஆசியர்கள், கலப்பினத்தவர் 50.4%. கருப்பின மக்கள், தென் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய ஹிஸ்பானிக் மக்கள், திருமணமாகாத திருமண உறவில் இல்லாத பெண்கள், 18 முதல் 29 வயதிற்குள் உள்ளவர்கள், பெருநகரங்களில் வசிக்கும் படித்தவர்கள் தொழில்முறை வேலைவாய்ப்புள்ளோர் ஆகியோரைக் குறி வைத்த, இவர்களின் வாக்குகளால் வெற்றி பெற வாய்ப்புள்ள மாநிலங்களை, போக்கைத் திருப்பும் மாநிலங்களை (ள்ஜ்ண்ய்ஞ் ள்ற்ஹற்ங்ள்) குறி வைத்த, ஒபாமாவின் தந்திரம் வென்றது. ஒபாமாவின் ராணுவ/பொருளாதார/அயல்விவகார கொள்கைகளுக்கு ஆதரவு என்பதை விட, ராம்னி மற்றும் அவரது வகையறாக்களின் சமூக பழமைவாதம், இந்த குறி வைக்கப்பட்ட பிரிவினரை ஒபாமாவை நோக்கித் தள்ளியது. வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம், 99% எதிர் 1% என எழுந்த கேள்விகளும், ராம்னியை பலப்படுத்தவில்லை. 47% மக்கள் அரசாங்கத்தைச் சார்ந்து வாழ்கிறார்கள், தம்மை பலியானவர்கள் என நினைக்கிறார்கள் என்று ராம்னி சொன்னதும் அவருக்கு எதிராகச் சென்றது.
ஒபாமா செலவழித்த பணம், செய்த பிரச்சாரம் என்ற எந்த விசயத்திலும் ராம்னியைக் காட்டிலும் பின் தங்கவில்லை. புஷ் எதிர்ப்பு உணர்வுகள், இந்தத் தேர்தலிலும், ஒபாமாவிற்கு உதவவே செய்துள்ளன. 10 ஆண்டுகளில் மிகவும் குறைவான வாக்குப்பதிவு எனச் சொல்லப்படும் இந்த தேர்தலில், ஒபாமா 6.06 கோடி வாக்குகள் பெற்றபோது ராம்னி 5.78 கோடி வாக்குகள் பெற்றுள்ளார். சென்ற முறை 2008ல் மெக்கையின் பெற்ற 5.99 கோடி வாக்குகள், 2004ல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக ஜான் கெர்ரி பெற்ற 5.90 கோடி வாக்குகள் என்பதைக் காட்டிலும், இம்முறை ராம்னி குறை வாகவே (5.78கோடி) வாக்குகள் பெற்றுள்ளார்.
‘அமெரிக்க
ஜனநாயகம்’
தேசபக்தியில்
சாகிறது
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒபாமா, ராம்னி இருவருமே கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும் எனத் தம் உரையை முடிக்கின்றனர். ஒபாமா, வாய் வீச்சுக்களுக்குப் பிரபலமானவர். அவர் தமக்கும் ராம்னிக்கும் வாக்களித்த நீல - சிவப்பு மாநிலங்கள் என்பவை விசயமே அல்ல, ஒரே விசயம், அமெரிக்க அய்க்கிய நாடுகள்தான் என்றார். இருவருமே உலகில் அமெரிக்க ராணுவ வல்லமை மிக முக்கியமானது எனச் சூளுரைக்கிறார்கள். ராணுவக் கட்டமைப்பு, இருவரும் தொட முடியாத புனிதப் பசுவாகும். ராணுவச் செலவு குறைப்பு பற்றிப் பேசுவது இருவருக்கும் கசப்பான கடினமான விசயம். அமெரிக்கா உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் வைத்துள்ளது. உலகின் 5% மக்கள் தொகை மட்டுமே கொண்டுள்ள அமெரிக்கா, உலகின் ராணுவ செலவுகளில் 50%, தான் மட்டுமே செலவழிக்கிறது. கெட்ட போரிடும் உலகம் இல்லாமல், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைத்திருக்காது. போர்கள் அமெரிக்கப் பெரும் தொழில் நிறுவனச் சூறையாடல்களுக்குப் பாதை அமைத்துத் தரும். அர்ஜென்டைனாவின் முன்னாள் அதிபர் க்ரிஸ்ட்னர் ஜார்ஜ் புஷ்ஷிடம் உள்கட்டுமானம் மற்றும் சமூகச் செலவினங்களுக்கு அமெரிக்கா கூடுதலாகச் செலவழிக்கலாமே எனக் கேட்டபோது புஷ் சொன்னாராம் ’ ‘பொருளாதாரத்திற்குப் புத்தெழுச்சி தர, போரே சிறந்த வழி. அமெரிக்கா போரால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லா பொருளாதார வளர்ச்சியும், வெவ்வேறு போர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவையே.’ அமெரிக்காவுக்கு, ‘நாம் எதிர். அவர்கள்’ என்ற வகைப்பட்ட தேச பக்தி உணர்ச்சிப் பெருவெள்ளம் எப்போதும் அவசியம். அதற்கு போரின் உண்மையான இயல்பு பற்றி மூடி மறைக்கும் திரைகள் அவசியம். உடன்படுக்கை ஊடகங்கள் அவசியம். உண்மைச் செய்திகளும் கருத்துக்களும் மக்களைச் சென்றடைய விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் போக்குள்ள ஜனநாயகம் மிகமிக அவசியம். ஒபாமா ஆட்சிக் காலத்தில்தான், ஆளில்லா டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அந்தத் தாக்குதல்களால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. அரபு வசந்தம், ஏகாதிபத்திய ஆட்சி மாற்றக் கொள்கையால் அபகரிக்கப்பட்டு கடாபி கொல்லப்பட்டு லிபியா சிதைக்கப்பட்டது. சிரியா போரால் சூழப்பட்டுள்ளது. ஈரான் முற்றுகையிடப்பட்டுள்ளது. போர் தொடர்பான ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் பிராட்மானிங் 900 நாட்களைச் சிறையில் கழிக்கிறார். ஜூலியன் அசெஞ்சே ஈக்வடார் நாட்டின் லண்டன் தூதரகத்தை விட்டு வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளார். கருப்பின அதிபர் ஒபாமா காலத்தில் தான், கருப்பு ஆப்பிரிக்காவின் மேகங்கள் மீது, அமெரிக்க ராணுவ நிழல் விரிந்து பரந்துள்ளது. அமெரிக்க தேச பக்தி அமெரிக்கச் சிறைகளைத் தனியார்மயப்படுத்திப் பலப்படுத்தியுள்ளது. கருப்பின மக்களில் கணிசமானவர்கள் சிறைகளில் உள்ளனர். குடியுரிமைகள் வாக்களிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலம் 1980 பட்ஜெட்டில் 3% சிறைகளுக்கும் 10% உயர் கல்விக்கும் ஒதுக்கியது. 2010 பட்ஜெட்டில் 11% சிறைகளுக்கும் 7.5% உயர் கல்விக்கும் ஒதுக்குகிறது.
பணநாயகம்
அல்லது
டாலரோக்ரசி
2500 வருடங்கள் முன்பு அரசியல் என்ற நூலில் அரிஸ்டாட்டில் எழுதினார். “சொத்துடையவர்கள் ஆட்சியில் இல்லாமல் ஏதிலிகள் (ஏதுமில்லாதவர்கள்) ஆட்சியலிருக்கும் போது, ஜனநாயகம் நிலவுகிறது. ஜனநாயகத்தில் சுதந்திரமும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால் மக்கள் திரளின் பெரும்பான்மையானோர் ஆகக் கூடுதலளவில் அரசாங்கத்தில் பங்கு பெறும் போதுதான் அது சாத்தியம்”. (அரிஸ்டாட்டில் அடிமைகளையும் பெண்களையும் விலக்கி வைத்து பேசியது வேறு விசயம்) அரிஸ்டாட்டில் சொல்வதைக் காட்டிலும், அன தோல் பிரான்ஸ் நையாண்டியாகச் சொல்வது தான் முதலாளித்துவ ஜனநாயகமாக உள்ளது. “சட்டம், அதன் மேலான கம்பீர சமத்துவத்துடன், ஏழைகளும் பணக்காரர்களும் பாலங்களின் கீழ் தூங்கக் கூடாது, வீதிகளில் பிச்சை எடுக்கக் கூடாது, ரொட்டி திருடக் கூடாது எனத் தடுக்கிறது.” முதலாளித்துவ சமத்துவத்தின் மாண்பு எவ்வளவு சிறப்பானது!
பணக்காரர்களும் ஏழைகளும் அமெரிக்காவில் என்ன செய்கிறார்கள்? தங்களது லாபவெறி நிதிச் சூதாட்டத்தால் அமெரிக்க பொருளாதாரத்தை, ஆட்டம் காண வைத்த பெரும் நிதி நிறுவனங்கள், பெற்றோரைக் கொன்றவன்தான் அனாதை என்பதால் தண்டனையைக் குறைக்குமாறு கேட்டதுபோல், தமது நிறுவனங்களுக்கு நஷ்டம் என்று சொல்லி மீட்புத் திட்டம் கேட்டார்கள். அந்த ‘அநாதைக்கு’தூக்கு தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு கோடி கோடி பில்லியன் டாலர்கள் மீட்புத் திட்டமாய்க் கிடைத்தது. அவர்களில் எவரும் சிறை செல்லவில்லை. அவர்கள் கொழுத்த போனஸ் கூடுதல் லாபங்கள் பெற்றார்கள். 1995ல் ஜேபி மோர்கன்சேஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப், வெல்ஸ் பார்கோ, கோல்ட்மேன் சாக்ஸ், மற்றும் மோர்கன் ஸ்டான்லி என்ற பெரிய 6 நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 17% இருந்தது. இது 2006ல் 55% ஆனது. 2010ல் 64% என உயர்ந்தது. இவர்கள் too big to fall அல்லவா? பெரியவர்கள் தோற்றால் பெருமாளே தோற்றதாகிவிடாதா? வசதியானவர்கள் மீதான வரிகளின் கதையும் இப்படித்தான் ஆனது. பெருந்தொழில் நிறுவனங்கள் 1961ல் தமது லாபங்களில் 47.4% வரியாகக் கட்டினார்கள். 2011ல் இது 11.1% எனக் குறைந்தது. உலகின் பெரும் பணக்காரர்களின் முன்னணி வரிசையில் இருக்கும் வாரன் பஃபெட், என்னிடம் குறைவான வரியும், என்னிடம் சம்பளம் வாங்குபவரிடம் கூடுதல் வரியும் வாங்குவது சரியா? அரசு தன்னைப் போன்றவர்களை, புள்ளியுள்ள ஆந்தைகளைப் போன்ற அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் போல், பாதுகாக்க கட்டாயப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிகிறது என்கிறார். இது எங்கே கொண்டு சென்றுள்ளது? செல்வங்களும் வருமானங்களும் முதல் 1% பணக்காரர்களிடம் திருப்பப்பட்டுள்ளது. 99% மக்கள் பூமியில் உள்ளனர். 1% பேர் எட்டவே முடியாதபடி நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் அரியணையில் அமர்ந்துள்ள பொருளாதாரக் கோட்பாடுகளும் அவற்றிற்குப் பின் உள்ள அரசியல் கருத்தியல்களும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
v பொருளாதாரத்தின் பிரதான பிரச்சனை பட்ஜெட் பற்றாக்குறை. அதனை நீக்குவது வளர்ச்சிக்கான முன் நிபந்தனை. இந்தப் பிரச்சினை பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான சமூகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியால் ஏற்படும்போது, அதனை ஏற்க முடியாது.
v பெருந்தொழில் குழும வரி வெட்டு, ராணுவ செலவு அதிகரிப்பு மற்றும் வங்கிகள் பெரும் நிறுவனங்கள் மீட்புத் திட்டத்தால், பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்போது, அது ஒரு விசயமே அல்ல.
v 1950 முதல் 1970 வரை வசதியானவர்கள் மீது வரிகள், தொழிலின் மீது கட்டுப்பாடு போட்டது போன்றவற்றால்தான் முதலீட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடை ஏற்பட்டது. தொழில் துறை, வேலை வாய்ப்பை உருவாக்குவதால், அதில் அரசு தலையிடக் கூடாது.
v லாபம் ஈட்டும் தொழில்கள், சூதாட்ட விடுதிகளாக இருந்தாலும் ஆபாச களியாட்ட பார்வை நிலையங்களாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த வேலை வாய்ப்புகள் நல்ல வேலை வாய்ப்புகள்.
v சமூக மதிப்புடைய பொதுப் போக்குவரத்து கல்வி சுகாதாரம் போன்றவற்றில் அரசு செலவிடுவதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்புகள் நல்ல வேலைகள் அல்ல.
v சங்கங்கள், உற்பத்திச் செலவை அதிகமாக்கி முதலீட்டை முடக்குகின்றன.
v வேலையின்மை மோசமானதல்ல. ஏனெனில் அது கூலியைக் குறைத்து தொழிலாளர்களைப் பசித்திருக்க வைப்பதன் மூலம், அமெரிக்காவின் போட்டியிடும் திறனை உயர்த்துகிறது.
இந்தப் பண நாயகத்தில் முதலாளித்துவம் தான் இருக்கிறதே தவிர, ஜனநாயகத்திற்கு இடமே இல்லை.
மக்களை
விலக்கி
வைக்கும்
மக்களிடமிருந்து
அரசியலை
அகற்றும்
அமெரிக்க ஜனநாயகம்
1917ல் முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி லெனின் எழுதியுள்ளதையும் இரண்டு பிரபல அமெரிக்கர்கள் ஜனநாயகம் பற்றிச் சொல்வதையும் பொருத்திப் பார்ப்போம்.
‘நவீன கால அடிமைகள், முதலாளித்துவச் சுரண்டலால், தேவை மற்றும் வறுமையால் பெருமளவிற்கு நசுக்கப்பட்டுள்ளனர். அவர்களை, ‘ஜனநாயகம் பற்றிப் பேசி நாம் தொந்தரவு செய்ய முடியாது’ அவர்களிடம் ‘அரசியலுக்காக நேரமே இல்லை’ சகஜமான அமைதி வழியில் நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்கும் போது, மக்கள் தொகையின் பெரும்பான்மையினர் பொது அரசியல் வாழ்க்கையிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.’ - லெனின்.
ஜார்ஜ் கார்லின் என்ற அமெரிக்கர், அமெரிக்கர்கள் தேர்வை விரும்புகிறார்கள், அதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் மிகவும் முக்கிய விசயமான தொலை பேசிகள் அரசியல் கட்சிகள் என்று வரும் போது, தேர்வு விதிவிலக்காகி விடுகிறது என்கிறார். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி சிறந்தது என்ற அமெரிக்க அரசியல் தேர்வு வாய்ப்பை கார்லின் அம்பலப்படுத்தும்போது ஹெரிட்டேஜ் பவுண்டேசனின் பால் வேரிச், மக்கள் அரசியல் அகற்றுதலுக்கு ஆளாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ‘நான் எல்லோரும் வாக்களிப்பதை விரும்பவில்லை. பெரும்பான்மை மக்கள் வாக்களிக் காவிட்டால்தான், தேர்தல்களில் மிகவும் வெளிப்படையாக, நமது நெம்புகோல் பாத்திரம் இருக்கும்.’
அமெரிக்க முதலாளிகளின் ஜனநாயகம் பற்றி ஈ.ஜி.டயோன், ‘அமெரிக்க ஆளும் வர்க்கம் தானும் தோற்றுக்கொண்டு நம்மையும் தோல்வியடைய வைக்கிறது, அவர்களுக்கு ஒரு புதிய ஆளும் வர்க்கம் தேவை’ என 17.04.2011 அன்று எழுதினார்.
மாவோ, ஏகாதிபத்தியம் இறுதி ஆராய்ச்சியில் காகிதப் புலியே என்றார். சுதந்திரச் சந்தை என்றப் பெயரால் நடக்கும் நிதி மூலதன ஆட்சி ஒரு தோல்வியே என டயோன் எழுதுகிறார். ஏகாதிபத்திய புலி அமெரிக்காவிற்குள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, உலக மக்கள் அதன் கூரிய பற்களையும் கொடூரமான நகங்களையும் பிய்த்து எறிய வேண்டியது அவசியமாகும்.