கேள்வி
மனிதக்
கழிவகற்றும் பணியில்
அந்நிய நேரடி முதலீடு
வேண்டும்!
ஒரு கோரிக்கையை வலியுறுத்த, தங்கள் துன்பங்களை சமூகத்தின், அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர, மக்களின் ஆதரவை திரட்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஜனநாயக நடைமுறை. அய்முகூ அரசாங்கம், அதற்கு தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி, அந்த ஜனநாயக நடைமுறைக்கு புதிய பரிமாணம் சேர்க்கப் பார்க்கிறது. நாட்டு மக்களை மொத்தமாக அந்நிய நிறுவனங்களிடம் அடகு வைக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை செயல்படுத்த மக்களிடம் ஆதரவு கேட்டு பேரணி நடத்துகிறது. உங்கள் வீட்டுக்கு கொள்ளி வைக்கப் போகிறேன், கொஞ்சம் தீ கொடுங்கள் என்று மக்களிடம் கேட்கிறார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள்.
மேற்கு அய்ரோப்பாவின் உணவுப் பொருள் சில்லறை வர்த்தகக் கட்டமைப்பில் வெறும் 110 நிறுவனங்கள், 32 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 16 கோடி நுகர்வோரை சென்றடையும் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்காவில் வெறும் 5 நிறுவனங்கள் 60% உணவு விற்பனை மீது கட்டுப்பாடு கொண்டுள்ளன. இந்தியாவுக்கு வரும் அந்நிய நிறுவனங்கள் இதே முறையைத்தான் இந்தியாவில் பின் பற்றும். இந்தியாவின் விவசாயிகளை தங்கள் பிடிக்குள் கொண்டு வரும்.
அமெரிக்காவில், 1970ல் தாங்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு, பன்றி இறைச்சி விற்பனையில் 48% பெற்ற உற்பத்தியாளர்கள், 2000 ஆண்டில் வெறும் 12%தான் பெற்றனர். இங்கிலாந்தில் பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தரப்படும் விலை கட்டுப்படியாகவில்லை என்று குரல் எழுப்ப துவங்கியிருக்கிறார்கள். உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டம் நுகர்வோருக்கு ஆதாயமாகச் சென்று சேரவில்லை. பகாசுர சில்லறை வர்த்தக நிறுவனங்கள்தான் வேட்டையை முழுவதுமாக எடுத்துக் கொண்டன. அய்ரோப்பிய யூனியனில் விவசாயிகளுக்கு 2010ல் மட்டும் ரூ.61,200 கோடி மான்யம் வழங்கப்பட்டது. சில்லறை வர்த்தக நிறுவனம் நல்ல விலை தந்தால் அரசாங்கம் ஏன் மான்யம் தர வேண்டும் என்ற கேள்வி அங்கே எழுப்பப்படுகிறது. 1994ல் மெக்சிகோவில் நுழைந்த வால்மார்ட் இப்போது அங்குள்ள சில்லறை வர்த்தகச் சந்தையில் 50%அய்க் கட்டுப்படுத்துகிறது. 25% விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டனர். தாய்லாந்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதால் 67% சிறுவர்த்தகக் கடைகள் மூடப்பட்டு விட்டன.
பிற நாடுகள் எங்கும் சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் நுழைவால் விவசாயிகள், மக்கள், பாதிப்புக்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் மட்டும் அது எப்படி வேறு விதமாக செயல்படும்? அப்படித்தான் செயல்படும் என்று மான்டெக் ஒப்புக்கொள்கிறார். டாக்சிகள் வந்த பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை குறைந்துதான் போகும் என்கிறார்.
பேரணியில் இந்தியாவின் இளைய, புதிய முகமாகக் காட்டப்படும் ராகுல் காந்தி காங்கிரஸ் இந்தியாவின் அரசியல் முறையை மாற்றியமைக்கப் போகிறது என்று சொன்னார். இனியும் மாற்ற என்ன விட்டு வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்? ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர் நிதியமைச்சர் ஆகிறார். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர் குடியரசுத் தலைவர் ஆகிறார். திகார் சிறை சென்று வந்தால் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஊழல் செய்வது எங்கள் பிறப்புரிமை என்ற எழுதப்படாத முழக்கத்துடன் முன்னேறிச் செல்கிறார்கள். இப்போது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்து, மக்களிடம் ஆதரவு கேட்கிறார்கள். இந்தத் துணிச்சல் இந்த கால கட்டத்தில்தான் அய்முகூ ஆட்சியாளர்களுக்கு வந்துள்ளது.
மனிதக் கழிவு அகற்றுபவர்களை பணிக்கமர்த்துவது மற்றும் உலர் கழிப்பறை கட்டுவது (தடுப்பு) சட்டம் 1993 அமலில் வந்து 19 ஆண்டுகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இந்தக் கொடுமையை தடுக்க வேண்டுமானால் அந்த வேலைக்கான புதிய தொழில்நுட்பம், நிதி வேண்டும். அந்நிய நேரடி முதலீடு அத்தனை அவசியமானது என்றால் அதை ஏன் மனிதக் கழிவகற்றும் பணியில் கொண்டு வரக்கூடாது?