சிறப்புக்
கட்டுரை
நவம்பர் 7 ரஷ்யப்
புரட்சி நாளின்
நினைவாக
காம்ரேட்
ரஷ்யப் புரட்சி, 1917 மார்ச் 17 அன்று கொடுங்கோல் ஜார் ஆட்சிக்கும் நில உடைமை ஆதிக்கத்திற்கும் முடிவு கட்டியது. நவம்பர் 7ல் சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் ஊசலாட்டத்துக்கு பலத்த அடி கொடுத்து, முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்த்தது. ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக்கி வென்று, பாட்டாளிகள் அரசியல் அதிகாரம் வெல்ல வழிவகை செய்தது.
மார்க்சும் லெனினும் அவரவர் காலத்தில், பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதப் போக்கை எதிர்த்து விடாப்பிடியான போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். தெலுங்கானாவும் நக்சல்பாரியும் இந்தியப் புரட்சிக்கு ஒத்திகைகளே. ரஷ்யப் புரட்சிக்கு, 1905 ஒத்திகையில் இருந்து, அதன் ஜனநாயக சோசலிசப் புரட்சி கட்டங்களை நிறைவு செய்ய 12 வருடங்களே தேவைப்பட்டது. இந்தியப் புரட்சி தாமதப் படுவதற்கு, இடதுசாரி இயக்கத்தின் ஓட்டுநர் இருக்கையில் சந்தர்ப்பவாதிகள் இருப்பதும் ஒரு காரணம்தான். வரலாற்றுத் தவறுகளும் தவறுகளின் வரலாறும் அவர்களுக்கு வாடிக்கையானது.
உழுபவனுக்கு நிலம் எனப் போராட வேண்டியவர்கள், சிங்கூரில், நந்திகிராமில், முதலாளிகளுக்காக விவசாய நிலங்களை பறித்தனர்; பறிக்க முன்வந்தனர். இப்போது படுமோசமான தோல்விக்குப் பிறகும் பாடம் கற்க மறுக்கிறார்கள். மமதாவிடம் ஆட்சியை இழந்ததோடு நில்லாமல், எதிர்க்கட்சி வெளியையும், எதிர்ப்புப் போராட்டங்களின் வாய்ப்பையும் பறிகொடுத்து, சிறுபிள்ளைத் தனமாய், மமதா இடதுசாரி நிகழ்ச்சிநிரலைக் கடத்தி விட்டதாகப் புலம்புகிறார்கள். இடதுசாரிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் மமதா பிடுங்கிக் கொள்ளக்கூடிய பொம்மையா?
கேரளத்தில் ஆட்சி பறிபோன பிறகும், ஊழல் படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்தும், உட்கட்சி ஜனநாயக மறுப்பில் இருந்தும் மீள முடியாமல் தடுமாறுகிறார்கள். தோழர் அச்சுதானந்தன், படுகொலை செய்யப்பட்ட தோழர் டி.பி.சந்திரசேகரை போராளி என்று சொன்னதும், பினரயி விஜயனை டாங்கேயுடன் ஒப்பிட்டதையும், கூடன்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தை ஆதரித்ததையும், மார்க்சிஸ்ட் கட்சி அதிகார பலம் கொண்டு, திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அச்சுதானந்தன் எழுப்பிய கேள்விகள், கட்சிக்குள்ளும் இடதுசாரி ஜனநாயக வட்டங்களிலும் திரும்பத் திரும்ப உலவிக் கொண்டுதான் இருக்கும். தப்பிக்க முடியாமல் விரட்டும்.
தோழர்கள் அச்சுதானந்தன், பிரபாத் பட்நாயக், பிரசன்ஜித் போஸ் எழுப்பிய விமர்சனங்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் கழுத்தைச் சுற்றிய பாம்புகளாக தொடர்வதில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
செப்டம்பர் 30 அன்று அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குத் துணிச்சல் வரவில்லை. ஆனால், இகக, ஃபார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி என முப்பதாண்டுகால இடது முன்னணி கூட்டாளிகள் கலந்து கொண்டது, மார்க்சிஸ்ட் கட்சியை சங்கடமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, அதன் கோழிக்கோடு மாநாட்டின் இடதுசாரி ஜனநாயக மாற்று, இடதுசாரி ஒற்றுமை முழக்கங்களுக்கு விசுவாசமாக உள்ளதா என மேற்குவங்கத்திலும் டில்லியிலும் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. ஃபார்வர்டு பிளாக்கும், ஆர்எஸ்பியும் முப்பதாண்டுகளில் இடதுசாரிகளின் தேசிய ஒருங்கிணைப்பு என நாங்கள் எதையும் கண்டதில்லை. ஆனால், நீங்கள் சாதித்துள்ளீர்களே என, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக்குப் பாராட்டு தெரிவித்தனர். எங்கள் இடது முன்னணி அரசாங்க முன்னணி, உங்கள் ஒருங்கிணைப்பு போராட்ட அமைப்பு எனச் சொல்லி, பற்ற வைத்துப் போட்டுள்ளனர்.
தேசிய சூழலில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பாஜக மீட்சி நடைபெறவில்லை. பிராந்திய கட்சிகளில் நிதிஷ÷க்கும் முலாயமுக்கும் பிரதமர் கனவுகள் உள்ளன. பிராந்திய கட்சி களில், ஈர்ப்பு மய்யம், தலைமை நிலை என்பது எவருக்கும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான், யாருடைய ஆட்சி என்ற கேள்விக்கு விடை தெரியும் போல் இருப்பதாக, இப்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.
இங்கேயும் இகக, இககமா சறுக்குகிறார்கள். அவர்களது மரபணுவில் குடிகொண்டுள்ள சந்தர்ப்பவாதம், து.ராஜாவை, பிராந்திய கட்சிகளிடம் நம்பிக்கை பெறுவதும், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் இடதுசாரிகளின் கடமை என்று பேச வைக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியோ, பிராந்திய கட்சிகளுக்கு, நவதாராளவாதக் கொள்கைகளில், கருத்தியலில் பிடிப்பு கிடையாது என்றும், அவர்கள் மக்களிடம் சென்று வாக்குகள் பெற வேண்டியுள்ளதால் அவ்வாறு செய்வது கடினம் என்றும் சாதிக்கிறது. சபாஷ், சரியான போட்டி! சந்தர்ப்பவாத நிலையில், அதனை நியாயப்படுத்துவதில், இருவரின் கரிசனமும் மெச்சத்தக்கது!
காங்கிரஸ், பாஜக கட்சிகள் மக்களிடம் வாக்குகள் பெற வேண்டாமா? நவதாராளவாதத்தை தலையில் தூக்கி வைத்துள்ள நிலையில் இருந்து, வாக்குகள் பெற வேண்டி, கீழே வீசி காலில் போட்டு மிதிப்பார்களா? வாக்குகள் மக்களுடையவை, ஆட்சிகள் முதலாளிகளுக்கானவை என்பதுதான், முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலின் அடிப்படை என்ற மார்க்சிய அரிச்சுவடியையும், உடனடி அரசியல் தேவைகள் நெருக்கடியில் மறந்து விட்டார்கள்.
முலாயம், நிதிஷ், ஜெயலலிதா, கருணாநிதி, சந்திரபாபு, நவீன் பட்நாயக், மாயாவதி இவர்களில் எவர் நவதாராளவாதக் கொள்கைகளை மூர்க்கமாக அமல்படுத்தாதவர்கள் என்று சொல்ல முடியுமா? மார்க்சிஸ்ட் கட்சியினரே அமல்படுத்தியவர்கள் என்பதால், அதற்கு காரணங்கள், சாக்குகள் சொன்னதால், ஈயம் பித்தளையைப் பார்த்து இளிக்கக் கூடாது என முடிவு செய்து விட்டனரா? அல்லது அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் சொல்வது போல், மாநில அரசாங்கங்கள் மூலம், சில்லறை சீர்திருத்தங்கள் செய்வதில் இடது முன்னணி அரசாங்கத்தை விட, மற்ற பிராந்திய கட்சி மாநில அரசாங்கங்களை விட, கூடுதலான கட்டணம்/விலைஇல்லாச் சலுகைகள், நலப்பயன்களைத் தந்து விட்டதாகக் கருதி, அசந்து போய் விட்டார்களா?
தமிழகத்தில் இகக, இககமா கட்சிகளின் நிலை என்ன? வீரமிக்க, நியாயமான, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில், காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுகவோடு, சேர்ந்து நிற்கிறோமே என்ற அரசியல் கூச்சம் அவர்களுக்கு வரவில்லை. அணு வல்லரசு, அணுகுண்டுகள் தொடர்பான அவர்கள் ரகசிய விருப்பங்களை வெளிப்படுத்த முடியாமல் சங்கடப்படுகிறார்கள். முதல் இரண்டு பிளான்டுகளை ஏற்கிறோம், 3, 4 பிளான்டுகளை ஏற்க மாட்டோம், அணுஆற்றல் ஒப்பந்தங்களுக்கு முந்தையவற்றை ஆதரிப்போம், மற்றவற்றை எதிர்ப்போம் எனப் பேசி, நகைப்புக்கு ஆளாகிறார்கள். பாதுகாப்பு பற்றிய கவலைகள் போக்கப்பட வேண்டும், சுயேச்சையான குழு ஆய்வு செய்ய வேண்டும் எனப் பேசும்போது, தர்க்கரீதியாக, அது வரை அணுமின் நிலையம் கூடாது என்று சொல்லியாக வேண்டுமல்லவா? அணு மின்சாரம், அணுக்கழிவு ஆபத்துக்கள் பற்றி சுயேச்சையான ஆய்வுகள் வைத்துள்ளனரா?
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும் கருணாநிதியையே குறிவைப்பது எந்த வகை அரசியல் தந்திரம்? ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பின் போலித் தன்மையை, பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை சமரசமின்றி எதிர்க்க ஏன் தடுமாறுகிறார்கள்? தீண்டாமை எதிர்ப்பு முன்னணியும், தீண்டாமையை முன்நின்று அமல்படுத்தும் குலாக் கட்சிகளோடு உறவும் பொருந்திப் போகிறதா? தொழில்களைப் பாதுகாத்து விட்டுத்தான் தொழிலாளர்களைப் பாதுகாப்பார்களா?
ரஷ்யப் புரட்சியை நினைவு கொள்வதில், உள்நாட்டில் சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்வது, மிகமிக அடிப்படையானது. அவர்களுடனான நமது கருத்துப் போராட்டத்தில், விளைவுகள், அளவு மாற்றம் பண்பு மாற்றம் என்றுதான் வரும். ஆனால், புரட்சிகர இடதுசாரிகள், ஆகக் கூடுதலான மக்களை, தீவிரமான, பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை எதிர்ப்புப் போராட்டங்களில் திரட்டுவதும், ஜனநாயகப் போராட்டங்களை ஆதரிப்பதும், வேலைப் பகுதிகளில் அவற்றின் அரசியல் விளைவுகளைச் செலுத்தி அரசியல் அறுவடை செய்வதும்தான், சந்தர்ப்பவாத கூடாரங்களை கலகலக்க வைக்கும். ரஷ்யப் புரட்சியின் நினைவாக, மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்த உறுதியேற்கும் அதே நேரம், சந்தர்ப்பவாத எதிர்ப்புப் போராட்டத்தையும் கூர்மைப்படுத்துவோம்.