தலையங்கம்
மண்டிக்
கிடக்கும் மக்கள்
பிரச்சனைகளுக்கு
அந்நிய
முதலீடு தீர்வாகாது
இந்திய தொழில் கூட்டமைப்பின் உதவியுடன் தொலை நோக்குத் திட்டம் 2023 அறிவித்த பிறகு அதை அமலாக்கும் போக்கைத் துவக்கியுள்ளார் ஜெயலலிதா. ஒரே நாளில் ரூ.20,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அந்நிய முதலீட்டை கொண்டாடிய கூட்டத்தில், அந்நிய முதலீட்டை ஆபத்தானது, ஆபத்தில்லாதது என்று இரண்டாக தரம் பிரித்து ஜெயலலிதா விளக்கினார்.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறைக்குப் பிறகு, 2014 தேர்தல்களுக்குள் மீண்டும் தன்னை மத்திய அரசு எதிர்ப்புப் போராளியாக முன்னிறுத்த அந்நிய நேரடி முதலீட்டு பிரச்சனையை கையில் ஜெயலலிதா எடுக்கிறார். அந்நிய நேரடி முதலீடு இருபுறமும் கூரான கத்தி என்றும் அதை லாவகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அய்முகூ அரசாங்கம் சொல்லும் அந்நிய நேரடி முதலீடு ஆபத்தானது என்றும் அதனால் அதை தமிழ்நாட்டில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜெயலலிதா சொல்கிறார். தமிழ்நாட்டில் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் சில அரங்கங்களில் அது தனியார் நலன் அடிப்படையிலானது, சமூகம் இழக்கும், தனியார் ஆதாயமடைவர் என்றும் பொதுவுடைமை பேணும் சமூக அக்கறை வந்து விட்டதுபோல் பேசுகிறார். மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள அந்நிய நேரடி முதலீடு, லட்சக் கணக்கானவர்களுக்கு வேலை தரும் சிறுவர்த்தகத்தை அழித்துவிடும் என்கிறார். கருணாநிதி சொல்வது போல், நானும் கம்யூனிஸ்ட் என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை.
அந்நிய நேரடி முதலீடு ஆபத்தான கத்தி என்று ஜெயலலிதாவும் ஒப்புக்கொள்கிறார். அது இந்திய மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. அந்தக் கத்தியை தான் லாவகமாக வீசுவதாக ஜெயலலிதா சொல்கிறார். எப்படி வீசினாலும் கத்தி காயம் ஏற்படுத்தும். உயிர்பலி கொள்ளும். வால் மார்ட்டோ, ஹ÷ண்டாயோ, தனியார் நலன்தான் பாதுகாக்கப்படுமே தவிர, சமூக நலன் பேணுவதற்காக அந்நிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்வதில்லை.
தொலைநோக்குத் திட்டம் 2023 தவிர, தமிழ்நாடு தொழிற்கொள்கை 2012, தமிழ்நாடு உயிரி தொழில்நுட்ப கொள்கை 2012, தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை 2012, தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் தொழிற்கொள்கை 2012 மற்றும் தமிழ்நாடு தொழிலுக்காக நிலம் கையகப்படுத்தும் கொள்கை 2012 என அய்ந்து கொள்கைகள் தமிழக தொழில் வளர்ச்சிக்கு உருவாக்கப்படும் என ஜெயலலிதா சொல்கிறார்.
ஜெயலலிதாவின் முதலிட தமிழகத் திட்டத்தில் அவர் சொல்கிற முதல் நான்கு கொள்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக அய்ந்தாவது சொல்லப்படும் நிலம் கையகப்படுத்தும் கொள்கை இருக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடப்பதை பற்றி ஜெயலலிதா எங்கும் பேசுவது இல்லை. பெருநிறுவனங்கள் தொழில் செய்ய தேவைப்படும் நிலத்தை உறுதி செய்யும் அல்லது கையகப்படுத்தும் வேலையை சிப்காட் நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.
சிப்காட், தூத்துக்குடியில் 2,533 ஏக்கர், திருவண்ணாமலையில் 2,300 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 2,396 ஏக்கர், மதுரையில் 1,478 ஏக்கர், விழுப்புரத்தில் 720 ஏக்கர் என நிலம் கையகப்படுத்தும் பணியில் இருக்கிறது எனவும் 6 மாவட்டங்களில் 13 இடங்களில் 16,400 ஏக்கர் நிலத்துடன் நில வங்கி உருவாக்கும் பணியும் துரிதமாக நடைபெறுகிறது எனவும் கொள்கை குறிப்புக்கள் சொல்கின்றன. இந்த நிலம் எப்படிப்பட்டது, யாருடையது, குறிப்பாக எங்குள்ளது என்ற விவரங்கள் தரப்படவில்லை.
சிப்காட் மூலம் ஏற்கனவே 20,000 ஏக்கர் நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. இதில் ரூ.85,867 கோடி முதலீட்டில் 4,72,141 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 2,230 ஏக்கர் நிலம் தரப்பட்டு வெறும் 70,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 2011 மார்ச் வரையிலான விவரம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இங்கு எந்த புதிய செயல்பாடும் இருப்பதாக சொல்லப்படவில்லை. (கொடுத்த நிலம் மட்டும் கொடுத்தபடி இருக்கிறது. நிலங்களை பறி கொடுத்தவர்கள் அங்கு உருவான பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களில் செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்).
இவை தவிர, சென்னை – திருபெரும்புதூர் - ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை - ஓசூர், மதுரை - தூத்துக்குடி, கோவை - சேலம் என தொழில் தாழ்வாரங்கள், உற்பத்தி வர்த்தக முதலீட்டு மண்டலம், விவசாய வர்த்தக முதலீட்டு மண்டலம் ஆகியவற்றுக்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வகைகளில் அனல்மின் நிலையங்கள் ஆக்கிரமித்துள்ள நிலமோ, பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்தி மண்டலம் எடுத்துக்கொண்டுள்ள நிலமோ வரவில்லை.
நிலம் கையகப்படுத்துவது போல் முக்கியமான பணி இன்னும் ஒன்று சிப்காட்டுக்கு உண்டு. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கட்டமைக்கப்பட்ட உதவித் தொகுப்பை வழங்கும் அமைப்பு அது. அரசுக்கு செலுத்தும் மதிப்பு கூட்டும் வரியில் குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லாமல் கடன், முதலீட்டு மேம்பாட்டு மானியம் (அரசுக்கு கட்டப்படும் மதிப்பு கூட்டும் வரியை திருப்பித் தந்து விடுவது), முதலீட்டில் மானியம், கழிவுப் பொருள் அகற்றுவது மற்றும் அவசியமான உள்கட்டுமான மானியம், மின்வரி திருப்பித் தந்துவிடுவது மற்றும் பயிற்சி மானியம் போன்றவை முதலீடு செய்கிற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த வகைகளில்தான் நோக்கியா நிறுவனம் தான் முதலீடு செய்த தொகையை வரிமான்யமாக, சலுகையாக முழுமை யாக திரும்பப் பெற்றுவிட்டது. இந்த வகையில் இதுவரை ரூ.1,134.50 கோடி தரப்பட்டுள்ளது. முதலீடு செய்த பெருநிறுவனங்களுக்கு அவை முதலீடு செய்ததாக சொல்லப்படும் தொகயில் பெரும்பகுதி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கணக்கில் வந்தது வராதது, பொதுவில் அறிவித்தது, அறிவிக்காதது என இன்னும் வேறு வகைகளும் இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
இவற்றுடன் ஆண்டொன்றில் 2,26,000 பேர் பொறியியல் இளங்கலை, 1,71,600 பேர் பாலிடெக்னிக் பட்டயம் என படித்துவிட்டு வெளியே வரும் அளப்பரிய மனித சக்தி. இத்தனையும் தந்து முதலீட்டை வரவழைப்பது தமிழ்நாட்டில் தொழிலை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை உருவாக்கி, தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்று ஜெயலலிதா சொல்லப் பார்க்கிறார்.
ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலையை விட்டு விரட்டியவர், அதனால் பெற்ற தண்டனையை மறந்து மீண்டும் 12000க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை தெருவில் நிறுத்தி அவர் கள் படும் துன்பத்தை வேடிக்கை பார்ப்பவர், 1 லட்சத்து 36,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறார்.
ஹூண்டாய் உட்பட்ட பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் விழா இந்தப் பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, அந்தப் பக்கம் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், சங்க அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆலைக்கு வெளியில் கூடியிருக்க இடம் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் போராட்டம் என்றால் அனுமதி, தொடர் போராட்டம் என்றால் அனுமதி இல்லை என்று ஹூண்டாய் காவல்துறையாக மாறிவிட்ட திருபெரும்புதூர் காவல்துறை சொல்லிவிட்டது.
பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சலுகை விலையில் தர நிலம் இருக்கிற தமிழ்நாட்டில் போராடும் தமிழக தொழிலாளர்களுக்கு அந்த சாலையோரம் இடமில்லாமல் போனது. பொது இடம் கேட்டு கிடைக்காமல் இறுதியில் தெரிந்தவர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் பந்தல் போட்டு போராட்டம் நடத்தினர். சொந்த இடம் இருந்தால்தான் தொழிலாளி போராட்டம் நடத்த முடியுமா என்று போராடும் ஹூண்டாய் தொழிலாளர்களில் ஒருவர் கேட்டார். வரவிருக்கும் காலம் தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு என்ன வைத்திருக்கும் என்பதற்கு இந்த நிலைமை ஓர் அறிகுறி.
போராடும் தொழிலாளர்களுக்கு இடம் தர மறுக்கும் அரசாங்கம், திருபெரும்புதூர் மற்றும் திருப்பூரில் 1000 பேருக்கான தங்கும் வசதிகளுடன் இரண்டு ஆண் மற்றும் பெண் தொழிலாளர் விடுதிகள் கட்ட சிப்காட் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்தத் தொழில் பகுதிகளில் மலிவு விலையில் தங்கும் இடங்கள் வேண்டும் என்பது ஏஅய்சிசிடியு நீண்ட நாட்களாக முன்வைக்கிற கோரிக்கை. இது தொழிலாளர் நலனில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால், இடம், காலம் என்ற கட்டுப்பாடு ஏதும் இன்றி தொழிலாளர்களை வேலை வாங்கும் பல்வேறு உத்திகளில் ஒன்றாக முதலாளிகள் இதை பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலீடு செய்யும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படும் நிலம் மற்றும் பிற சலுகைகள் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த நிறுவனங்களுக்கு தரப்படுவது ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தில் இருந்து அல்ல. மக்கள் வரிப்பணத்தில் இருந்து. அது எவ்வளவு தரப்படுகிறது, எப்படி தரப்படுகிறது என்ற விவரங்கள் பொத்தாம் பொதுவாக அல்லாமல் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் கொள்ளை கொண்டு போகும் செல்வாதாரங்கள் பற்றிய விவரங்கள் தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
கல்வி, மருத்துவம், மின்சாரம், அடிப்படை வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் படு மோசமாக தோல்வியுற்றிருக்கிற ஜெயலலிதா அரசாங்கம் பகட்டு நிகழ்ச்சிகள் மூலம் அந்தத் தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது. மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, முதலாளிகள் நலன் காக்கும் முயற்சிகளை ஒளிவுமறைவின்றி அரங்கேற்றுகிறது. ஒடுக்குமுறை மக்களுக்கானது பாதுகாப்பு பலம் படைத்தவர்களுக்கானது என்று தயக்கமின்றி செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் நியாயம் கேட்டு, வாழ்வாதாரம் கேட்டு போராட்டத்தில் இறங்கும் மக்கள் பிரிவினரின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போது அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் வீதியில் நிற்கிறார்கள். ஊழியர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும் அல்லது ஊதியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்று ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள். பொருளாதார மரண தண்டனை அல்லது கொஞ்சம் கொஞ்சமாக விஷம், இரண்டில் எது வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
நாயக்கன் கொட்டாய் மற்றுமொரு கொடியன்குளமாகி இருக்கிறது. பரமக்குடி காயம் மாறாமல் இருக்கும்போது தமிழக தலித் மக்கள் மீது மற்றும் ஒரு தாக்குதல். வாழ்நாள் சேமிப்பை, கடுமையாக உழைத்து சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தை இழந்து கண்ணீரும் குமுறலுமாக எந்த நிமிடமும் வெடிக்கக் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்துக்கு தொழில் வளர்ச்சி தேவையே. ஆனால் அது யாரை அடகு வைத்து, என்ன விலை தந்து, எப்போது என்பவை உடனடி பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள். மண்டிக் கிடக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு 2023 என்ற கானல் நீரை நம்பி இன்று தீர்வில்லாமல் காத்திருக்க முடியாது. ஜெயலலிதா அரசாங்கம் தீர்வு தரும் என்று தமிழக மக்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கப் போவதில்லை.