மண்ணில்
பாதி
கலகம் நல்லது
இரண்டு பெண்களின் குரல்கள், பெண் விடுதலை குரல்களாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. ஒன்று மலாலா என்கிற 14 வயது பாகிஸ்தான் சிறுமியுடைய குரல். மற்றொன்று ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் ஜூலியா கில்லர்டின் குரல்.
மலாலா ஸ்வாட் பகுதியில் உள்ள மத அடிப்படைவாத தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி இப்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் எழுந்து நிற்க முடிகிறது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அவர் உயிர் பிழைத்து வந்தாலும் மீண்டும் அவரை கொலை செய்வோம் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளார்கள்.
மலாலா தானும் தன்னைப் போன்ற சிறுமிகளும் படிக்க வேண்டும் என்று விரும்பியது தான் ஸ்வாட் தலிபான்களுக்கு மரண தண்டனைக்குரியக் குற்றமாகப்பட்டுள்ளது. மலாலா இசுலாத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பள்ளிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை கழுத்திலும் தலையிலும் சுட்டனர். துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் மலாலா யார் என்று கேட்டபோது மலாலாவுடன் இருந்த மாணவிகள் யாரும் பதில் சொல்லவில்லை.
பிபிசி தொலைக்காட்சி கேட்டுக் கொண்டதால் 2009 முதல் மலாலா, பெயர் வெளியிடாமல் ஸ்வாட்டில் தலிபான்களின் நடவடிக்கைகளால் பெண்கள் கல்வி பாதிக்கப்படுவது பற்றி, மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவது பற்றி இணையதள நாட்குறிப்பு எழுதி வந்தாள். இந்த எழுத்துக்கள் மூலம் உலகத்தின் கவனம் பெற்ற மலாலா தேசிய இளைஞர் அமைதிப் பரிசு பெற்றாள். சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசுக்கு அவள் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அவள் தனக்கு வந்த ஒரு கனவு பற்றி எழுதுகிறாள்.
‘எனக்கு ஒரு புதுக் கனவு வந்துள்ளது. நான் அரசியல்வாதியாக வேண்டும். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும். நம் நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. நான் அந்த நெருக்கடிகளை போக்க விரும்புகிறேன்’.
மலாலா பாகிஸ்தானுக்கு உயிருடனோ உயிரில்லாமலோ திரும்பலாம். அவள் கனவுக்கு என்றும் உயிரிருக்கும். இன்று பாகிஸ்தான் பள்ளிச் சிறுமிகள், நான்தான் அன்னா என்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தொப்பி அணிந்தது போல், நான்தான் மலாலா என்ற பதாகைகளை உயர்த்தி தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.
மேற்கத்திய, முதலாளித்துவ ஊடகங்கள் மலாலாவை உயர்த்திப் பிடிப்பதற்கு தலிபான் எதிர்ப்புதான் முக்கிய காரணம் என்றாலும் தலிபான்களின் பெண்ணடிமைக் கருத்துக்களை எதிர்த்து ஒரு சிறுபெண், இன்னும் பர்தா அணிகிற ஒரு பெண் பேசத் துணிந்தது அசாதாரணம்தான். மலாலாவை லண்டனுக்கு சிகிச்சை தர அழைத்துச் செல்ல இங்கிலாந்து முன்வந்த போது, பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலில் காயமுற்றவர்களை இங்கிலாந்து அழைத்துச் சென்று சிகிச்சை தர முன்வருமா என்ற நியாயமான சீற்றத்துடன் கேள்விகளும் எழுப்பப்பட்டன.
அமெரிக்காவின் இசுலாமிய வேட்டையை மறைக்க, இசுலாம் பெண்ணடிமைத்தனத்தை பேணிக் காக்கிறது என்ற வாதம் மூடுதிரையாகப் பயன்படுத்தப்படுவதை நாமும் அனுமதிக்க முடியாது. மலாலா மீதான இங்கிலாந்தின் அக்கறை பின்னால் இருப்பது இசுலாத்தை சாத்தானாகக் காட்டும் முயற்சிகளில் ஒன்றே தவிர மலாலா மீதோ, பெண் விடுதலை மீதோ உள்ள அக்கறையால் அல்ல என்பதை காணத் தவறக் கூடாது. சதாம், பின்லேடன், தலிபான் அனைவருமே அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்களே.
மலாலா விசயத்தை, அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு அராஜக நடவடிக்கைகளுக்கு எதிரான உலகம் தழுவிய ஜனநாயக போராட்டங்களுக்கு எந்த ஊறும் இல்லாமல், இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பெண்களை விடாமல் துரத்துகிற ஆணாதிக்க அரக்கனுக்கு எதிரான கலகம் என்று பார்ப்பது பொருத்தமானது. கலகம் என்ற அளவில் நல்லது.
மலாலா அரசியல்வாதியாக வேண்டும் என்று கனவு கண்டாள். அரசியல்வாதியான ஜூலியா கில்லர்ட் தன்னை பெண் என்ற காரணம் காட்டி வீழ்த்திவிடப் பார்க்கும் ஆணாதிக்க அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்கிறார். பாகிஸ்தானில் உள்ள இசுலாமியச் சிறுமி கல்வி வேண்டும் என்பதற்காக குரல் எழுப்ப வேண்டியுள்ளது என்றால், ஆஸ்திரேலியாவில் உள்ள 51 வயது அரசியல்வாதி அதிகாரத்தில் நிற்க, தொடர குரல் எழுப்ப வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டோனி அப்பாட், பெண்களை இழிவுபடுத்தும் செய்திகளை அனுப்பியதற்காக சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் பிரதமர் ஜூலியாவும் குற்றம் புரிந்தவராவார் என்று நாடாளுமன்ற விவாதத்தில் பிரச்சனை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் ஜூலியாவின் உரை உலகம் முழுவதும் உள்ள பெண்ணியவாதிகளால் இன்று கொண்டாடப்படுகிறது.
பால்பாகுபாடு பற்றி இந்த மனிதர் எனக்கு, இந்த நாடாளுமன்றத்துக்குக் கற்றுத்தர நான் அனுமதிக்கப் போவதில்லை என்று துவங்கிய அவரது பதிலில் டோனி அப்பாட் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக ஜூலியாவுக்கு எதிராக பேசியவற்றைப் பட்டியலிட்டு பெண்களை வெறுப்பவர்கள் பதவி விலக வேண்டும் என்றால், டோனி அப்பாட் அதை முதலில் செய்யட்டும் என்றார்.
ஜூலியா தான் விரும்பும் ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இன்னும் இதுபோன்ற வாழ்க்கை முறை முழுமையான சமூக அங்கீகாரம் பெறவில்லை எனும்போது வெற்றிகரமான ஓர் பெண் அரசியல்வாதியை வீழ்த்த ஆணாதிக்கத்துக்கு இது போதாதா? ஜூலியா வேண்டுமென்றே மலடியாக இருக்கிறார் என்பது முதல் அவர் கட்டுப்பாட்டுப் பிரியர் என்பது வரை அவர் மீது அவதூறுகள் சொல்லப்படுகின்றன. எதிர்க் கட்சித் தலைவர் டோனி அப்பாட், கார்பன் எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றில் சூனியக்காரியை கைவிடுங்கள் என்ற வாசகம் தாங்கிய போஸ்டர் அருகில் நின்று போஸ் கொடுத்தார்.
அவருடைய லிபரல் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆஸ்திரேலிய பெண்களை துணி தேய்க்கும் வீட்டுமனைவிகள் என்றார். பெண்களை விட ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் இருப்பது தவறான விசயமா, உடல்ரீதியாகவும்மனரீதியாகவும், அதிகாரத்தில் இருக்கவும் ஆணையிடவும், ஆண்களே கூடுதல் திறன் படைத்தவர்கள் என ஆணாதிக்க ஆணவம் கொப்புளிக்க வேறுவேறு சமயங்களில் டோனி அப்பாட் பேசியவற்றை ஜூலியா சுட்டிக் காட்டி பெண்களை வெறுப்பது என்ன என்று தெரிந்து கொள்ள அவர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டியதில்லை, கண்ணாடியை பார்த்தால் போதும் என்றார்.
ஜூலியாவின் பதில் சபாநாயகரை பாதுகாப்பதாக இருக்கிறது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் ஆஸ்திரேலியாவுக்குள் கருத்துக்கள் எழுகின்றன. ஜூலியாவின் அரசியல் கொள்கைகளில் மாறுபாடு இருப்பது வேறு விசயம். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக் சொல்லும் அமெரிக்காவின் முயற்சிகளில் ஜூலியா கில்லர்ட் பிரதமராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் படைகளுக்கும் பங்குண்டு.
ஒரு பெண் அரசியல்வாதி என்ற விதத்தில் ஜூலியாவைப் போல் இதுவரை யாரும் வெளிப் படையாக ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்பதுதான் ஜூலியா பக்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
ஜூலியாவைப் பற்றிப் பேச எத்தனையோ விசயங்கள் அரசியல் அரங்கில் இருக்கும்போது, அவர் இந்தியா வந்திருந்தபோது, நமது பத்திரிகைகள் சில, அவர் கால் தவறி கீழே விழுந்ததை படிப்படியாக படம் போட்டுக் காட்டின. ஜூலியா சூப்பர் வுமன் என்று தன்னை சொல்லிக்கொள்ள வாய்ப்புக்கள் குறைவு. அதே நேரம் தாக்குதல்களை மவுனமாக சகித்துக் கொண்டு இருப்பார் என்பதற்கும் வாய்ப்புக்கள் குறைவு.
அரசியலில், பொதுவெளியில் உயர்பதவிகளில் இருக்கும் ஆணோ, பெண்ணோ, பெண்விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு போன்ற விசயங்களை பேசாமல் இருப்பது உயர்பதவிகளுக்கு உரிய தலைமைப் பண்பு என்று உலகம் முழுவதும் தவறாக கருதப்படுகிறது. உயர்பதவியில் இருக்கும் பெண்களிடம், நீங்கள் இருக்கும் இடத்துக்கு மீண்டும் மீண்டும் பெண்கள் பற்றி பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லும் ஆண் தலைவர்கள் உண்டு.
இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்று பேசப்பட்ட இந்திராகாந்தி கூட பெண்ணடிமைக் கருத்துக்களை எதிர்த்து ஆணித் தரமாக பேசியதாக வரலாற்றில் எங்கும் காண முடிவதில்லை. துணிச்சலானவர் என்ற துதி பாடலுக்கு நாளும் தன்னை ஆட்படுத்திக் கொள்கிற ஜெயலலிதா, தாய், அம்மா என்றால் உச்சிகுளிர்ந்து போகிறாரே தவிர, தன்னைப் பற்றிய கருணாநிதியின் ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு, வசவுகளுக்கு, ரசனைக் குறைவான கேலிப்பேச்சுக்களுக்கு ஆணித்தரமாக பதில் சொன்னார் என்று இன்று வரை பார்க்க முடியவில்லை. சோனியாவுக்கு அடையாளமே ராஜீவ் காந்தியின் விதவை என்பதுதான். மாயாவதியும் மமதாவும் இந்த விசயத்தில் மாறுபட்டவர்கள் இல்லை. சுஷ்மா ஸ்வராஜூம், பாஜகவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசும் நிர்மலா சீதாராமனும் மனுதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சியில்தான் தலைவர்கள்.
இந்தப் பெண் தலைவர்கள், பெண் அரசியல்வாதிகள் தங்கள் அளவில் சுதந்திரமானவர் களாகக் கூட இருக்கலாம். ஆனால் பொது வெளியில் இது வரை ஆணாதிக்கத்துக்கு நேரடியான, துணிச்சலான, பகிரங்கமான எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இவர்கள் அனைவருமாகச் சேர்ந்து தாங்கும் நாடாளுமன்றம்தான் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றாமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்துகிறது. ஆணாதிக்க எதிர்ப்பு முனை என்ற ஒன்றை இந்தப் பெண் தலைவர்கள் போதுமான அளவுக்கு முயற்சி செய்யவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
இந்தப் பின்னணியில்தான் ஜூலியாவின் உரை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாட்டின் பிரதமர், பெண் என்ற அடிப்படையில், தான் பல முறை ஆணாதிக்க கேலிகளுக்கு ஆளாக்கப் பட்டதை, நாடாளுமன்ற விவாதத்தில் பேசியது பெண் விடுதலைக் கருத்துக்களை, ஆணாதிக்க எதிர்ப்பை எந்தத் தளத்திலும் வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்த முடியும், வெளிப்படுத்த வேண்டும் என்பதை உலகுக்கு காட்டியுள்ளது. அதிகாரத்தில் இருப்பது பெண்ணடிமைக் கருத்துக்களை எதிர்ப்பதற்கு தடையல்ல, வாய்ப்பே என்பதை அவருடைய சீற்றமான உரை காட்டியுள்ளது. அன்றாட வாழ்வில் பெண்கள் ஆணாதிக்கக் கருத்துக்களை தங்களுக்கு முடிந்த வழிகளில் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சக்தி வாய்ந்த அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண் ஆணாதிக்கத்தை எதிர்ப்பது அந்த எதிர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கிறது. சக்திவாய்ந்த அதிகாரத்தில் இருப்பதால்தான் ஜூலியாவாலும் வலுவாகச் சொல்ல முடிந்தது.
மலாலாவின் அரசியல்வாதி கனவை, அடிமைத்தனத்தை வெல்ல நினைக்கும் பெண்கள் பலரும் காண வேண்டும். அது நனவாவதே, ஜூலியாவைப் போன்றவர்கள் எழுப்பியுள்ள விவாதத்தை வலுப்படுத்தி ஆணாதிக்கத்தை வீழ்த்துவதில் வெற்றி பெற வழி தரும்.
அதிகரித்து வரும் பாலியல் வன்முறை, படு மோசமான முதலாளித்துவ சுரண்டல், வீட்டுக்கு உள்ளும் வெளியும் துரத்தும் ஆணாதிக்கக் கொடுங்கரங்கள் ஆகியவற்றை நாளும் சந்தித்து வரும் இந்தியப் பெண்களுக்கு, அவற்றை நேருக்கு நேராக எதிர்க்கும் துணிச்சலை மலாலாவும் ஜூலியாவும் தருவார்கள்.