COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, November 3, 2012

2

தலையங்கம்

இடது, ஜனநாயக நிகழ்ச்சிநிரலுக்காகப் பாடுபடுவோம்!

 

கச்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்திட உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்று முடிவு செய்த அதிமுக அரசாங்கம், சேதுசமுத்திர திட்டம் தேவையற்றதென உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பதென்றும் முடிவு செய்துள்ளது.

இரட்டை நிலைப்பாடு ஒன்றும் புதிதல்ல. இலங்கைப் பிரச்சனையில் போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று கூறியவர், பிறகு தேர்தல் சமயத்தில் தனது நிலையை மாற்றிக் கொண்டு ராஜபக்சே மீது போர் தொடுப்பேன் என்று கூட பேசினார். எம்ஜிஆர் ஆதரித்த சேது சமுத்திர திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார் என்று கருணாநிதி கூறிப் பார்க்கிறார். ஜெயலலிதாவும் முதலில் சேது திட்டத்தை ஆதரித்தவர்தான். இத் திட்டத்திற்கு மீனவர் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில் சேது திட்டத்தை எதிர்க்கத் தொடங்கினார். கருணாநிதி மீனவர்களுக்கும் ராமருக்கும் புராணங்களுக்கும் எதிரானவர், நான் மீனவர்களுக்கும் புராணங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் ஆதரவானவர் என்ற செய்தியையும் சொன்னார்.

கச்சத்தீவு கருணாநிதி காலத்தில் தாரை வார்க்கப்பட்டது. மீனவர்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதை எனது காலத்தில் மீட்டே தீருவேன் என்பது போல் பேசி வருகிறார் ஜெயலலிதா. கச்சத்தீவு, சேது சமுத்திரம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்று ஜெயலலிதா அறிவித்திருக்கும் பின்னணி முக்கியமானது. கூடங்குளம் அணு ûலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்ட அடுத்த இரண்டு நாட்களில் கச்சத்தீவு வழக்கை விரைவுபடுத்தப் போகும் முடிவை அறிவித்தார். அக்டோபர் 29 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்ட சமயத்தில் சேது சமுத்திர திட்டம் தேவையற்றது என்று மீண்டும் அறிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் 450 நாட்கள் நீடித்து நிற்பதற்கு மீனவர்களின் முனைப்பான பங்கு முக்கிய காரணம். காலாகாலமாக அதிமுகவின் வெற்றிக்குப் பின்னால் நின்ற மீனவர்கள், அணு உலைப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் வஞ்சகத்தைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர். அவர்களை மேலும் பகைத்துக் கொள்வதுநாற்பதும் நமதே கனவுக்கு நல்லதல்ல. எனவே மீனவர்களது கொந்தளிப்பை தணிக்கவும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய சக்தியாக இருக்கும் அவர்களை போராட்டத்திலிருந்து தள்ளி வைக்கவும் கச்சத் தீவும் சேது சமுத்திரமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார்! கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்க போலீசை அனுப்பி மக்களின் போராட்ட ஒற்றுமை முன்னால் தோற்றுப் போன முதலமைச்சர் பயந்துபோய் அரசியல் தந்திரங்கள் மூலம் போராட்டத்தை சிதைக்க நினைக்கிறார். அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு எதிரானவர், ஆனால் மீனவர்களுக்கு ஆதரவானவர் என்ற சித்திரத்தை வரைய முனைகிறார். செப்டம்பர் 10, 11 தேதிகளில் அதிமுக அரசின் வன்முறை வெறியாட்டத்தை நேருக்கு நேர் சந்தித்த மீனவர்கள் ஜெயலலிதாவின் தந்திரத்துக்கு ஏமாற மாட்டார்கள்.

நான்கே மாதத்தில் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். இருண்ட தமிழகத்தை ஒளிபெறச் செய்வேன் என்று சபதம் செய்த ஜெ ஆட்சியை எதிர்த்து மக்கள் தெருவுக்கு வந்துள்ளனர். மின்சாரம் வேண்டுமென்று போராடி வரும் மக்கள் கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று கேட்கவில்லை. மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். அதிமுக திமுகவையும் புரிந்து கொண்டுள்ளனர்.

மத்திய ஆட்சியில் பங்கு பெற்றே தீருவது என்று மூர்க்கத்தனமாக இறங்கியுள்ள ஜெயலலிதா புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஊழல் - மக்கள் விரோத மத்திய ஆட்சிக்கெதிரான மக்கள் எதிர்ப்பைக் கைப்பற்றுவது, திமுகவை எல்லா வகையிலும் பின்னுக்கு தள்ளுவது நவீன் பட்நாயக் போன்றோருடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது, தேர்தலுக்குப் பின் மத்திய ஆட்சியில் தனக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்வது என்ற பெருந்திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த புதிய அவதாரம் மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மக்கள் உரிமை மீது, தலித்துகள் அறுதியிடல் மீது, போலீஸ் பட்டாளத்தை ஏவும் ஜெயலலிதா பேசும் மாநில உரிமை அடிபட்டு போயிருக்கிறது. மத்திய அரசு எதிர்ப்பு அம்பலமாகியிருக்கிறது. கூடங்குளம் அணுஉலை எதிர்த்த வீரமிக்க போராட்டமும் மின்வெட்டை எதிர்த்த தெரு கிளர்ச்சிகளும் அதிமுகவின் மாயத் தோற்றத்தை அம்பலப்படுத்திவிட்டன.

அதிமுகவும் திமுகவும் அரசியல் களத்தை கைப்பற்றிக் கொள்ளும் முயற்சிகளை மீறி மக்கள் போராட்டங்களும் ஜனநாயக விழிப்புணர்வும் மேலோங்கி வருகிறது. இந்தியக் கம்யூனிஸ்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இதிலிருந்து விலகி நிற்கின்றன.

உண்மையான இடதுகளும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் மக்கள் போராட்டங்களில் ஊன்றி நிற்க வேண்டும். ஜனநாயக அரசியல் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியாக வேண்டும். நவம்பர் 7 கிராமப்புற கிளர்ச்சிகள், பிப்ரவரி தொழிலாளர் நெடும்பயணம், பிப்ரவரி 20, 21 வெகுமக்கள் அரசியல் வேலை நிறுத்தம், மத்திய, மாநில ஆட்சிகளுக்கு எதிரான அதிமுக - திமுகவுக்கு எதிரான, காங்கிரஸ் - பாஜகவுக்கு எதிரான உழைக்கும் மக்கள் இயக்கமாகிட வேண்டும். உண்மையான இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் நிகழ்ச்சிநிரலாகிட பாடுபடுவோம்.

Search