அமைப்பு
மாதம் இருமுறை
கூடும் சேலம் மணியனூர்
கட்சி கிளை
கட்சி வலுப்படுத்தும் இயக்கத்தை ஒட்டி கட்சி கிளைகளை செயலூக்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக சேலத்தில் மணியனூர் கிளை முறையாக கூடுவது, வேலைகளை திட்டமிடுவது என சுதந்திரமான செயல்பாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகரம் 50வது டிவிசனில் மணியனூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமானத் தொழிற் சங்க வேலைகள் துவங்கப்பட்ட பின்னணியில் மணியனூர் மாலெ கட்சிக் கிளை உருவானது. 100க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களைக் கொண்ட இப்பகுதியில் தொழிற்சங்க முன்னணிகள் மத்தியில் இருந்து கட்சியில் சேர்ந்த 15 உறுப்பினர்களைக் கொண்டு இக்கிளை செயல்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலிலும் இங்கே கட்சி போட்டியிட்டது. சிறப்பான பிரச்சாரம் மூலம் அரசியல் அடையாளத்தையும் உருவாக்கினோம். கடந்த ஆண்டு இறுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற ஏழைகள் குவிந்த இந்தப் பகுதியில் கட்சிக்கு வெகுமக்கள் அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சி நடவடிக்கைகள், போராட்டங்களுக்கு இக் கிளையிலிருந்து குறைந்த பட்சம் 20பேரும், அதிக பட்சம் 100 பேரும் அணி திரண்டுள்ளனர். கட்சியின் மாவட்ட வேலை விரிவாக்கத்திற்கும் இக்கிளையின் செயல்பாடு உத்வேகத்தை தந்துள்ளது.
மாதம் இரு முறை கூடும் இக்கிளையின் அக்டோபர் 15 கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கற்றுத் தரப் பார்க்கும் மன்மோகனுக்கு கற்றுத் தருவோம் என்ற தீப்பொறி கட்டுரை படித்து விவாதிக்கப்பட்டது. கட்டுரையின் உள்ளடக்கத்தையும் கட்சி முன் உள்ள அரசியல் கடமைகளையும் மாநில குழு உறுப்பினர் சந்திரமோகன் விளக்கினார். பிப்ரவரி 2013 பிரச்சார பயணம், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், கட்டுமான சங்கத்தின் தேசிய மாநாடு ஆகியவை பற்றி பேசி குறிப்பான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தீப்பொறிக்கு 4 சந்தாக்கள் வழங்கப்பட்டது. கட்டுமான சங்க மாநாடு, கட்சி காங்கிரஸ், மாநில, மாவட்ட தேவைகளுக்காக ரூ.1,00,000 வரை நிதி வசூலிப்பது, என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
மணியனூர்
கிளை
செயல்பாடு
பற்றி
முன்னணி
தோழர்கள்
கருத்துக்கள்
கிளை செயலாளர் தோழர்.எஸ்.குமரேசன்: மாதம் இருமுறை கிளை கூடுவதை கடந்த 4 மாதங்களாக உறுதி செய்திருக்கிறோம். வழக்கமாக 1ந்தேதியும், 15ந்தேதியும் மாலை 6.30 மணி அளவில் கூடுகிறோம். அந்த நேரத்தில் உறுப்பினர்கள் அவர்களாகவே கூட்டத்திற்கு வரும் பழக்கமும் உருவாகியுள்ளது. மாதம் இரண்டு முறை கூட்டங்களை நடத்துவதால் தீப்பொறி கட்டுரைகளை படித்து புரிந்து கொள்கிறோம். கட்சியின் மத்திய மாநில முடிவுகளையும் உடனடியாகத் தெரிந்து கொள்கிறோம். இதனால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போராட்டங்களுக்கு தோழர்களை அணி திரட்டுவது இயல்பாக நடைபெறுகிறது. கட்சி கிளை அலுவலகம் விரைவில் திறக்க உள்ளோம்.
குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் தோழர் மாரிமுத்து: மாதம் இருமுறை நாங்கள் கூடுவதால் எங்களுடைய சங்க வேலைகளை செய்வது எளிதாக இருக்கிறது. அந்த குறிப்பிட்ட தேதி கூட்டத்திற்கு வருகை குறைந்தால் அதற்கு அடுத்த நாளே முழுமையான கூட்டத்தை கூட்டுவதை உத்தரவாதம் செய்துவிடுகிறோம்.
மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஜோதிபாசு: கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்குவது என சேலம் மாவட்ட குழு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் கிளையின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையின் 23 புதிய உறுப்பினர் சேர்ப்பதன் மூலமாக 50க்கும் அதிகமாக்குவது, கூடிய விரைவில் 3 கிளைகளை உருவாக்குவது, ஆண்டு இறுதியில் உள்ளூர் கமிட்டியை உருவாக்குவது, ஆகியவை பற்றியும் கடந்த கிளை கூட்டத்தில் பேசி முடிவு செய்துள்ளோம்.