COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 22, 2012

8

அறிக்கை

தருமபுரியில் சாதி வெறியின் கோர தாண்டவம்

சந்திரமோகன்

நத்தம் காலனியில் காவல் துறை கூட நுழைவதற்கு அஞ்சிய ஒரு காலமும் இருந்தது. 30 ஆண்டுகால நக்சலைட் இயக்கம் வலுவாக இருந்தபோது, தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் உள்ள நாயக்கன் கொட்டாய் எனப்படுகிற வட்டாரத்தில் தலித் மற்றும் வன்னியர் உழைக்கும் மக்கள் மத்தியில் கம்யூனிச இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது. சாதிவெறி தலை தூக்கியதில்லை. தருமபுரி நக்சலைட் இயக்கம் தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு இன்றும் சாட்சியாக அப்பு, பாலன் சிலைகள் காட்சியளிக்கின்றன.

மீண்டும் ஒரு முறை தருமபுரிநாயக்கன் கொட்டாய் - நத்தம் காலனி தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நவம்பர் 7 அன்று மாலை 4.30 மணியளவில் நத்தம் காலனியில் நுழைந்த 500க்கும் மேற்பட்ட சாதி வெறியர்கள் 350 க்கும் அதிகமான வீடுகளைத் தகர்த்தனர். வீடுவீடாக நுழைந்து பெண்களை குழந்தைகளை ஆயுதங்களால் மிரட்டினர். சிலரைத் துன்புறுத்தினர். அனைத்து வீடுகளிலும் பீரோக்களை உடைத்தனர். பணம், நகைகளை கொள்ளையடித்தனர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். சைக்கிள், மோட்டார் சைக்கிள், டிவி, கட்டில், நாற்காலி, படுக்கை, பாத்திரம், துணிமணி அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்; அழித்தனர். தலித் மக்கள் இழந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடிக்கும் மேல். வன்முறைக்கு அஞ்சிய பெண்கள் குழந்தைகள் அருகிலிருந்த முட்காடுகளுக்கும் தோப்புகளுக்கும் ஒடிச் சென்று ஒளிந்தனர்.

கடந்த மாதத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த செல்லங்கொட்டாயைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களைப் பிரிப்பதற்கான கட்டப்பஞ்சாயத்தில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி, புளியம்பட்டி, ஆண்டிஹள்ளி ஊராட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், பாமக திமுக அதிமுக என்ற வேறு பாடில்லாமல் சாதியரீதியாக ஒன்றுபட்டனர். கட்டப்பஞ்சாயத்து கூட்டங்களை நடத்தினர். காதலர்களை, குடும்பத்தினரை மிரட்டினர். இவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மிரட்டல் தாங்க முடியாத பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அவரின் சவ ஊர்வலம் என்ற பெயரில் 2000 பேர் அணி திரண்டனர். ஒரு பிரிவினர் கோர தாண்டவம் ஆடினர்.

காதல் திருமணம் சாதிய மறுப்பு திருமணம் பற்றி தீவிரமாகப் பேசிய பெரியாரை தூக்கிப் பிடிக்கின்ற கட்சிகள் அரசியல் நடத்தும் தமிழ்நாட்டில்தான் சாதிவெறி தலை தூக்குகிறது. சாதிய மீட்பு உருவாக்கம் எழுச்சி பெறுகிறது. சமூக இயக்கத்தில் பிற்போக்கு தலைதூக்குகிறது. தலித் இளைஞர்களுக்கு பிற சாதிப் பெண்களை காதலிக்க, திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை எனச் சாதி வெறியர்கள் புதிய இலக்கணங்களை எழுதுகின்றனர். சாதிய சங்கங்கள், கட்சிகள் தங்கள் சாதிப் பெண்களையும் தலித்துகளையும் எச்சரிக்கை செய்து தீர்மானம் போட்டார்கள். பொதுக் கூட்டங்களில், மாநாடுகளில் சாதி வெறியை உசுப்பேற்றினார்கள். நாடு முழுவதும் காதல் திருமணத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து - கங்காரு கோர்ட்டுகள் தலை தூக்குகின்றன. கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் மானிட சமுதாயத்தின் காதல் வரலாறு சாதி வெறி இலக்கணங்களை மீறியது.

நாய்க்கன்கொட்டாய் பகுதி தலித் காலனிகளின் மீதான தாக்குதல்களுக்கு காதல் திருமணம் என்பது மட்டுமே காரணமல்ல. காதலைச் சகித்துக் கொள்ளாதவர்கள் தலித் குடியிருப்புகளையே தீக்கிரையாக்கினர். தலித்துகள் வெளியூருக்கு சென்று கடினப்பட்டு உழைத்து சம்பாதித்த சொத்துக்களை சேமிப்புகளை சூறையாடியதைப் பார்த்தால் முன்னேற முயற்சிக்கின்ற தலித்துகளின் பொருளாதார முதுகெலும்பை உடைத்து நொறுக்குவது சாதி வெறியர்களின் நோக்கமாக தெரிகிறது. 1996ல் ஜெயா ஆட்சிக் காலத்தில் கொடியங்குளத்திலும் இதே மாதிரிதான் நடந்தது. தேவேந்திர குல வேளாளர்களின் பொருளாதார முன்னேற்றம் சாதி வெறியர்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. அவர்களின் சொத்துக்களைச் சூறையாடினர். நத்தம் காலனியிலும் வீடு தவறாமல் இதே வன்முறைதான் நடைபெற்றுள்ளது. ஜெயா ஆட்சியில் 1996ல் தெற்கில் ஒரு கொடியங்குளம், 2012ல் வடக்கில் ஒரு நத்தம் காலனி.

இந்த வன்முறையில் தலித் மாணவ மாணவிகளின் அனைத்து சைக்கிள்களையும் உடைத்து நொறுக்கியிருப்பதைப் பார்த்தால் அவர்களின் புத்தக பைகளை எரித்திருப்பதைப் பார்த்தால் தலித்துகளின் கல்வி வளர்ச்சியின் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டுள்ளது தெரிய வருகிறது. வன்முறைத் தாக்குதல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞனின் நத்தம் காலனியை மட்டும் குறி வைக்கவில்லை. அருகில் உள்ள அண்ணாநகர் காலனி, தூரத்தில் உள்ள மேல், கீழ் கொண்டம்பட்டி காலனிகள் மீதும் தொடுக்கப்பட்ட வன்முறைதான் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. வட மாவட்டங்களில் இழந்த செல்வாக்கைப் பெற பாமக எடுக்கிற முயற்சியா இது? வெளியூர் படையொன்று திட்டமிட்ட முறையில் பீரோக்களை உடைத்து சொத்துக்களை பெட்ரோல் குண்டுகளை வீசி எரிப்பது, உள்ளூர் கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் தாக்குதலுக்கு திரட்டிக் கொண்டது.... காடுவெட்டி குருவின் வன்முறை செயல்பாட்டிற்கான சோதனைத் களமா? பாதிக்கப்பட்ட மக்களை கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலித் அமைப்புகளும் கவலையுடன் கரிசனத்துடன் சென்று பார்த்தன. அதிமுக திமுக பாமக தேமுதிக காங்கிரஸ் யாரும் சந்திக்கத் தயாராக இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா வருத்தத்தை மட்டுமே தெரிவித்தார். வன்முறை நடைபெற்ற நாளன்று நான்கு மணி நேரம் காவல் துறையினர் கைகட்டி வாய் பொத்தி நின்றனர். தாமதமாகவே கைதுகள் துவங்கின.

சிபிஅய்எம்எல் கட்சி மாநில செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் நவம்பர் 11 அன்று உண்மையறியும் குழு நாயக்கன்கொட்டாய் பகுதிக்கு சென்றது. ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் சந்திரமோகன், முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநில செயலாளர் ரமேஷ்வர்பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில செயலாளர் வெங்கடாசலம், கட்சி மாவட்ட பொறுப்பாளர் கே.கோவிந்தராஜ், தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர் & பொறியாளர் சங்க மாவட்ட செயலர் தோழர் முருகன், போக்குவரத்து கழக எஸ்சி, எஸ்டி சங்க தலைவர்கள் எஸ்.கவுதமன், டி.பழனி, மற்றும் கட்சி சேலம் மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வை மேற்கொண்டது. மக்களைச் சந்தித்தது. சேதாரங்களை மதிப்பிட்டது. அறிக்கையையும் வெளியிட்டது. அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு:

1. தாக்குதலுக்குப் பின்னுள்ள அரசியல் காரணங்களைப் பாரபட்சமின்றி விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கடுமையாகத் தண்டிக்க ஏதுவாகப் பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

2. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தாக்குதலின் பின்னணியில் இருப்பது மக்களின் ஏகோபித்த கருத்துக்களிலிருந்து தெரியவருவதால் காடுவெட்டிக்குருவை கைது செய்து விசாரிக்க வேண்டும்.

3. தாக்குதலில் தொடர்புடைய அனைவர் மீதும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய காவல் துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. காவல்துறை டிஅய்ஜி, மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரை வன்கொடுமை சம்பவத்துக்கு பொறுப்பாக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த மூன்று கிராமங்களின் மக்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றையும் மீட்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்திட வேண்டும்.

6. பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆதிதிராவிட நலத்துறை உயர்அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.

7. கடந்த அய்ந்து நாட்களாக குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் வெட்டவெளியில் படுத்துறங்கும் அபாய நிலைமைக்கு உடனடித் தீர்வாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டித் தர வேண்டும். அனைவரது வீடுகளையும் வாழ்வதற்கு உகந்த வகையில் கட்டித் தரவேண்டும். குடும்ப அட்டை, படிப்பு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், தேசிய ஊரக வேலை அட்டை உள்ளிட்ட மக்களின் அனைத்து குடியுரிமை ஆவணங்களையும் உடனடியாகப் புதிதாக வழங்க வேண்டும்.

8. இப்பகுதிகளில் உள்ள க்யூ பிரிவு உளவுப் போலீசாரை நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும்.

தமிழகத்தில் இடதுசாரி கருத்துக்களின் எழுச்சியா? சாதிய வெறி அரசியலின் எழுச்சியா? இந்த கேள்விக்கு கம்யூனிச, முற்போக்கு அமைப்புகள், தலித் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுபட்டு விடை காண வேண்டும். தருமபுரி சாதி வெறி வன்முறை பிரச்சனையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தலித்துகளின் வாழ்வுரிமையை கவுரவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். முதலாளித்துவக் கட்சிகளின் சாதிய விளையாட்டுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

Search