COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 29, 2012

7

கட்டுரை

பெருநிறுவனங்கள் இன்புற்றிருக்க இருப்பதுவேயல்லாமல்...

மஞ்சுளா

அரசாங்கம் எடுக்கும் ஒரு நடவடிக்கை தவறாகிப் போனால், அந்த நடவடிக்கையின் இலக்கை எட்ட முடியாமல் போனால், அதற்கு அந்த அரசாங்கம் வருத்தப்பட வேண்டும். மக்களிடம் தோல்விக்கான காரணத்தை விளக்க வேண்டும். சரி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்முகூ அரசாங்கம் தலைகீழாக செயல்படுகிறது. 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எதிர்ப்பார்த்த ரூ.40,000 கோடி வருவாய்க்குப் பதில் வெறும் ரூ.9,407 கோடி வந்ததை அய்முகூ ஆட்சியாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

எங்கே அந்த ரூ.1.76 லட்சம் கோடி என்று மனீஷ் திவாரி மத்திய தணிக்கையாளரைக் கேட்கிறார். 2008ல் .ராசா அலைக்கற்றை ஒதுக்கியதில் அரசாங்கத்துக்கு இழப்பு ஏதும் இல்லை என்று சொல்லி வந்த கபில் சிபல் தனது மேதமையை மெச்சிக் கொள்கிறார். மத்திய தணிக்கையாளர் தனது கணக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார். சிதம்பரம் ஒரு படி மேலே போய் நிலக்கரிச் சுரங்க ஊழல் விசயத்திலும் இப்படித்தான் ஆகப்போகிறது என்று ஆருடம் சொல்கிறார்.

கேமராவும் மைக்கும் ஊடகத்தில் ஒளிபரப்ப வசதியும் இருந்துவிட்டால் எதுவும் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று அய்முகூ ஆட்சியாளர்கள் கருதுவார்கள் என்றால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசிக்கிறார்கள். உண்மையில், 2012 அலைக்கற்றை ஏலம் சந்தி சிரிப்பதால் 2008 அலைக்கற்றை ஊழல் இன்னும் வலுவாக ஊர்ஜிதமாகி இருப்பதுதான் யதார்த்தம். ராசாவும் கனிமொழியும் சிதம்பரமும் மன்மோகனும் குற்றம் புரிந்தவர்கள், நாட்டின் இயற்கை வளத்தை தனியார் கொள்ளை கொண்டு போக துணை நின்றவர்கள் என்று நீதிமன்றம் சொல்ல, அது கூடுதல் சாட்சியம்.

நவம்பர் 12, 2012 அன்று நடந்த 2 ஜி அலைக்கற்றை ஏலம் 2008ல் .ராசா வழங்கி, பின் உச்சநீதிமன்றம் ரத்து செய்த 122 உரிமங்களுக்கானது. இந்த உரிமங்களுக்கான ஏலத்தை 2013 ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் நவம்பர் மாத ஏலத்தில் வெறும் 22 உரிமங்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 800, 900 மற்றும் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் விட வேண்டும் என்பதும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு. ஆனால், 800 மற்றும் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே ஏலத்தில் விடப்பட்டன. உச்சநீதிமன்றம் தனது உத்தரவுக்கு மத்திய அரசாங்கம் தரும் மதிப்பு இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மட்டுமின்றி 2 ஜி உரிமங்கள் முழுமையாக ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று மீண்டும் பணித்துள்ளது.

ஏலம் முழுமையடையாதபோது, கையில் இன்னும் அலைக்கற்றை இருக்கும்போது, குறை வருவாய் என்று சொல்லி மத்திய தணிக்கையாளரை குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள் கபில் சிபலும் சிதம்பரமும். மத்திய தணிக்கையாளர் அன்றைய நிலைமைகளில் சொன்ன மூன்று விதமான கணக்குகளும் அந்த கணக்குகளில் அம்பலமான இழப்புகளும் இன்றைய விற்பனை குறைவென்பதால் பொய்யாகிவிடாது.

2007ல் டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எச்எஃப்சிஎல் இன்ஃபோ டெல், ஷ்யாம் டெலிலிங்க் ஆகிய நிறுவனங்களுக்கு 35 இரட்டை தொழில்நுட்ப உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மட்டுமே ரூ.37,154 கோடி இழப்பு என்று மத்திய தணிக்கையாளர் சொன்னார். 122 உரிமங்கள் விற்றதில் ஏற்பட்ட இழப்பு, இரட்டை தொழில்நுட்ப உரிமத்துக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் ஏற்பட்ட இழப்பு, 6.2 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் ஒதுக்கி யதால் ஏற்பட்ட இழப்பு. இது அத்தனையும் சேர்ந்ததுதான் ரூ.1.76 லட்சம் கோடி. இதில் முறைகேடாக வழங்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்ட, 122 உரிமங்களால் ஏற்பட்ட இழப்பு மட்டும் மத்திய தணிக்கையாளர் கணக்குப்படி ரூ.1,02,498 கோடி. முன்னாள் நிதிச் செயலர், இந்நாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், சுப்பாராவ் மொழியில் இந்த இழப்புக்கு பெயர் வருவாயை தியாகம் செய்வது. அது இழப்பாகாது என்று அவர் சொல்கிறார்.

2007ல் எஸ்டெல் நிறுவனம் 6.2 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு ரூ.13,752 கோடி தர தயாராக இருந்தது. யூனிடெக் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அலைக்கற்றை வாங்கியதால் அவற்றின் பங்கு மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. 3 ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வருவாய் வந்தது. இந்த கணக்கீடுகள் அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி மத்திய தணிக்கையாளர் முன்வைத்த மதிப்பீடுதான் ரூ.1.76 லட்சம் கோடி. இவற்றில் எது உண்மையில்லை என்று கபில் சிபலும் சிதம்பரமும் சொல்வார்கள்? அனைத்தையும் சந்தை தீர்மானிக்கும் என்றால் அலைக்கற்றை விலையை மட்டும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக ராசா ஏன் நிர்ணயித்தார்? 2001 விலையில் 2008ல் ஏன் அலைக்கற்றையை விற்றார்? 122 உரிமங்களில் 85 உரிமங்கள் அனுபவமோ அடித்தளமோ இல்லாத புதிதாக முளைத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எப்படி தரப்பட்டன? இந்தக் கேள்விகளை இப்போது ஏற்பட்டுள்ள வருவாய் குறைவு எப்படி விளக்க முடியும்?

சர்வதேச சந்தை, சந்தை நிலவரம், பொருளாதாரச் சூழல் என்று மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் சந்தையை உற்றுப்பார்க்கும் சிதம்பரமும் கபில் சிபலும், 2 ஜி அலைக்கற்றை ஏலம் விசயத்தில் அன்றைய மற்றும் இன்றைய சந்தை நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். 2007ல் இந்தியாவில் 300 மில்லியன் வாடிக்கை யாளர்கள். 2012ல் 900 மில்லியன் வாடிக்கையாளர்கள். 2007 ஏலத்துக்கு 575 விண்ணப்பங்கள் வந்தன. 2012 ஏலத்துக்கு இரண்டிலக்க எண்ணிக்கையில்தான் விண்ணப்பங்கள் வந்தன. 2007 - 2012 காலகட்டத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. 2007க்குப் பிறகு தரப்பட்ட இணைப்புக்களில் 90% இணைப்புக்கள் ராசா 122 உரிமம் தருவதற்கு முன் இருந்த நிறுவனங்கள் தந்தவையே. அதாவது புதிதாக உரிமம் பெற்ற நிறுவனங்கள் இந்த கால கட்டத்தில் வெறும் 10% இணைப்புக்கள்தான் தந்துள்ளன.

ஒரு வகையில் 2012 ஏலம் ஆளில்லாத கடையில் தேநீர் ஆற்றுவது போன்றது. இந்த ஏலத்தில் மும்பை, டில்லி, கர்நாடகா, ராஜஸ்தான் வட்டாரங்களுக்கு, இந்தியா முழுவதற்குமான அலைக்கற்றைக்கு யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. மும்பை, டில்லி, கர்நாடகா போன்ற வட்டாரங்களில் சந்தை ஏற்கனவே நிறைந்துவிட்டது. இந்தியா முழுவதற்குமான அலைக்கற்றைக்கு காப்பு தொகையாக ரூ.14,000 கோடி அரசு நிர்ணயித்ததால் அதற்கான ஏலத்துக்கு யாரும் வரவில்லை. (2007ல் நிர்ணயிக்கப் பட்டதைவிட இது நான்கு மடங்கு கூடுதல். இப்படி நிர்ணயிப்பதே அன்று நடந்தது மோசடி என்பதன் அடையாளம்தானே). மட்டுமின்றி, ஏலத்தில் வரும் தொகைக்கேற்ப, 2014ல் உரிமம் புதுப்பிக்க வேண்டிய நிறுவனங்களுக்கு உரிமம் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இத்தனை முட்டுக்கட்டைகள் இருந்தும் 22 உரிமங்களுக்கு ரூ.9,500 கோடி வரை வந்துவிட்டது. இன்னும் 100 உரிமங்கள் விற்கப்படாமல் உள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் ஏலத்தில் பங்கெடுக்கவில்லை. ஏர்டெல்லும் வோடாஃபோனும் புதிய வட்டாரங்களுக்கு ஏலம் எடுக்கவில்லை. கூடுதல் அலைக்கற்றைக்கு மட்டுமே ஏலம் எடுத்தன.

யூனிடெக்கும் ஸ்வான் டெலிகாமும் அன்றைய தொலைதொடர்பு சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பின்கதவு வழியாக ராசா உதவியுடன் அலைக்கற்றை உரிமங்கள் பெற்றன. அவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட ராசா அன்று சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்ளவில்லை. இன்றைய தொலைதொடர்பு சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஏலம் எடுக்க தொலைதொடர்பு நிறுவனங்கள் முன்வரவில்லை. அய்முகூ அரசாங்கம் இன்றும் சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்ளாமல் 4.4 மெகா ஹெர்ட்ஸ்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறை கட்டணம், 6.2 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் கட்ட ணம், காப்பு கட்டணம் என்று அச்சுறுத்தி ஏலத்தை தோல்வியுற தேவையான அனைத்தையும் செய்துள்ளது.

தொலைதொடர்பு அலைபேசி சந்தை நிரம்பிவிட்டது. பண்டம் இருந்தாலும் வாங்கும் சக்தியுள்ள சந்தை இல்லை என்பதுதான் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை. பசித்தவர் இருக்கிற நாட்டில் அரிசிக்கு பதிலாக அலைபேசி வாங்குவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டது, அதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப் பார்த்தது முட்டாள்தனம். இந்த அடிப்படை பொருளாதார விதியை கூட காண மறுப்பவர்கள் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்களாக, பிரதமராக இருப்பதுதான் நாட்டு மக்களின் துயரம்.

இன்றைய இழப்புக்கான சந்தைக் காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. பிரச்சனை இன்றைய குறைவான வருவாய்க்கு அன்றைய ஊழலும் அதனால் ஏற்பட்ட இழப்பும்தான் அடிப்படை காரணம் என்பதே. அன்று முறைகேடாக உரிமங்கள் வழங்கப்பட்டதால் இன்று முறைப்படி உரிமங்கள் வழங்க முடியவில்லை. முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டாலும் அப்படி வழங்கப்பட்டதால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இனி என்றும் திரும்பப்போவதில்லை. தொலைதொடர்பு துறையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேல் 2 ஜி ஊழலின் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

1996 - 2000 காலகட்டத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 4.4 மெகா ஹெர்ட்ஸ் முதல் 6.2 மெகாஹெர்ட்ஸ் வரை அலைக்கற்றை இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் ரூ.36,993 கோடி இழப்பு ஏற்பட்டது என்று யாகேஷ் ஆனந்த் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப கட்டணம் ஏதுமின்றி கூடுதல் அலைக்கற்றை வழங்கும் நடைமுறை இருந்ததால் தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்திக் காட்டின. பார்தி ஏர்டெல்லும் அன்றைய ஹட்ச்சும்தான் முதன்முதலில் இந்த முறையில் கூடுதல் அலைக்கற்றை பெற்றன. 2 ஜி ஊழல் சந்திக்கிற எதிர்ப்பின் பின்னணியில் இந்த நடைமுறைக்கு முடிவு வந்ததால் வாடிக்கையாளர் எண்ணிக்கையை ஊதிப்பெரிதாக்கும் அவசியம் இல்லாமல் போனது.

கூடுதல் அலைக்கற்றை பெற வாடிக்கை யாளர் எண்ணிக்கையை பெரிதாகக் காட்டிய தனியார் நிறுவனங்கள், உரிமக் கட்டணத்தைக் குறைக்க தங்கள் வருவாயை குறைத்துக் காட்டின. 2006 - 2008 காலத்துக்கான வருவாயை குறைத்துக் காட்டியுள்ளதாகவும், அது தொடர்பான தணிக்கை அடிப்படையில் பார்தி ஏர்டெல் ரூ.160 கோடி, வோடஃபோன் ரூ.121 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.298 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ.142 கோடி, அய்டியா செல்லுலர் ரூ.78 கோடி, டிசிஎல் ரூ.65 கோடி அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது எனவும் தொலை தொடர்பு துறை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

இப்படியாக, தொலைதொடர்பு துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து போட்டியின் மூலம் சிறந்த சேவை தருவது என்று சொல்லி புகுத்தப்பட்ட தனியார் மயம் துவங்கிய காலத்தில் இருந்து, நாட்டின் அரிய இயற்கை வளமான அலைக்கற்றை விதவிதமான வழிகளில் கொள்ளை போகிறது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் அதன் உருட்டித் திரட்டப்பட்ட வடிவமாக இருக்கிறது. அதை மாயமானாக்க முயற்சிப்பது மாயமானை தேடுவதற்கு ஒப்பானது.

இவ்வளவு பிரச்சனைகள் அம்பலத்தில் இருக்கும்போது, அடுத்த கட்ட ஏலத்துக்கு அலைக்கற்றை விலையை குறைத்து நிர்ணயிக்கும் முயற்சிகளில் கபில் சிபலும் சிதம்பரமும் இறங்கியுள்ளனர். அலைக்கற்றை விற்பனை நிதிப்பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு தரும் என்று அய்முகூ அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்தது. இப்போது விலைக்குறைப்பு பற்றி பேசுவது அதன் வெளிப்படுத்தப்பட்ட நோக்கத்துக்கு பொருத்தமானதாக இல்லை. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் அலைக்கற்றை விலையைக் குறைக்கத் துணியும்போது மொத்த விசயத்திலும் அரசின் உண்மை நோக்கம் என்ன வென்று தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மீண்டும் ஆதாயம் தரும் இந்த நடவடிக்கைக்கு பதிலாக கூடுதல் அலைக்கற்றையை அரசே வைத்துக்கொண்டு, செயற்கையாக நஷ்டத் துக்குத் தள்ளப்பட்ட அரசு தொலைதொடர்பு நிறுவனங்களின் நிலைமையை மேம்படுத்த பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கிற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே கூடுதல் கட்டணம் பற்றி முணுமுணுக்க துவங்கிவிட்டன. இந்த முணுமுணுப்புக்கு சிதம்பரம் பதறியடித்துக் கொண்டு பதில் சொல்வார் என்று அவற்றுக்கு தெரியும். பெருநிறுவனங்கள் நலனே அய்முகூவின் நலன் என்றிருக்கும்வரை, அய்முகூ இருக்கும் வரை, பெருநிறுவனங்கள் இன்புற்றிருக்கும். இருப்பினும் 2 ஜி ஊழலுக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிற வெப்பத்தில் இருந்து தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பான புகலிடங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால் நவதாராளவாதக் கொள்கைகளை பின்னோக்கித் திருப்புவோம் என்பதுதான் இன்று மக்கள் இயக்கங்களில் முன்னிற்கும் முழக்கம்.

Search