மண்ணில்
பாதி
சவிதாவின்
மரணம் எழுப்பிடும்
கேள்விகள்
ராகவன்
அயர்லாந்து நாட்டிற்கு குடி சென்ற இந்திய இளம்பெண் சவிதாவின் மரணம் உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் முன்னேறிய அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று சட்டம் இருப்பதால், சவிதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அவர் அயர்லாந்தின் கால்வே நகரின் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு தம் உறவினர்களுடன் சென்று, கருக்கலைப்பு செய்யும்படி மன்றாடி கேட்டுக் கொண்ட பின்னரும், சட்டத்திற்கு பயந்து மருத்துவர்கள் அதனைச் செய்ய மறுத்தனர். இதனால் அவர் கருவில் இருந்த 17 வாரகால சிசு இறந்து அவரது இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவி அவர் அக்டோபர் 28 அன்று உயிரிழந்தார்.
அயர்லாந்து நாட்டில் பொறியாளராக பணி செய்து வரும் இந்தியாவைச் சார்ந்த ஹாலப்பனவர் என்பவரை மிகச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சவிதா ஒரு பல்மருத்துவர். தமது முதல் குழந்தையைக் காண ஆவலோடு காத்திருந்த இந்தத் தம்பதியர்க்கு அயர்லாந்து நாட்டில் இப்படி ஒரு கொடூர அதிர்ச்சி காத்திருக்கும் என்று தெரியாமல் போனது.
அயர்லாந்து நாட்டு அரசு, கத்தோலிக்க மத நம்பிக்கைகளின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்து கொள்வோரும் அதைச் செய்யும் மருத்துவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆவர் என்று சட்டம் இயற்றியுள்ளது. பிறக்காத சிசுவின் உயிர் வாழும் உரிமை, அரசால் எல்லா வகையிலும், திட்டவட்டமாக உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்று 1983ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அயர்லாந்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கான எட்டாவது திருத்தம் கூறுகிறது. அதற்காக சட்டப்பிரிவு எண்.40.33 அறிமுகப்படுத்தப்பட்டது.
தாயின் உயிருக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது என்று உறுதியான ஒரு நிலைமை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும், வெறுமனே தாயின் உடல் நலம் பாதிக்கப்படும் என்னும் சூழ்நிலையில் எல்லாம் கருக்கலைப்பு செய்துவிட முடியாது என்றும் அச்சட்டம் ஆணி அடித்துக் கூறுகிறது. நமக்கு எதற்கு வம்பு என்று மருத்துவர்களும் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
ஓர் அயர்லாந்து சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அதனால் கருவுற்று, தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவள் உயிரைக் காப்பாற்ற, மனநல மருத்துவரின் அறிவுரையின் பேரில் அருகிலுள்ள இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று கருக்கலைப்பு செய்து கொண்டபோது, அவளைக் குற்றவாளியாக்கி தண்டிக்க முயன்றது அரசு. இறுதியில் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றாள் அச்சிறுமி.
மதநம்பிக்கை மக்களின் மீது சட்டமாக திணிக்கப்படுதல் என்ன வகையான ஜனநாயகம்? மலாலாக்களை கவுரவிக்கத் துடிக்கும் அய்ரோப்பாக் கண்டத்தின் அரசுகளில் ஒன்று சொந்த நாட்டில் மலர்களைக் கசக்கி எறிவது ஏனோ? தலிபான்களை கேலி பேசும் தலைகள் வெறும் காலிப்பானைகளாக இருந்திடலாமோ?
220 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த பிரெஞ்சுப் புரட்சியில் மலர்ந்த மதச்சார்பற்ற அரசு என்னும் கோட்பாட்டை அன்று விரும்பி ஏற்றுக் கொண்ட முதலாளித்துவ வர்க்கம், அடுத்தடுத்து நடைபெற்ற பாட்டாளிவர்க்க எழுச்சிகளைக் கண்டு அஞ்சி நடுங்கி, மக்களின் அறிவியல்பூர்வ சிந்தனைப்போக்கு வளர்வதை எல்லா வகையிலும் தடுக்க முயன்றது; யமனுக்கு பயந்து சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்ட மார்க்கண்டேயனைப் போல, அது மதத்தை இறுகத் தழுவிக் கொண்டது. மதச்சார்பற்ற அரசுகளுக்கு பதிலாக மதத்தாஜா அரசுகளே அடுத்தடுத்து உருவாயின. இவற்றின் வெளிப்பாடுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாய் இருக்கும். அதில் ஒன்றுதான் அயர்லாந்தின் அரைவேக்காட்டுச் சட்டம்.
சவிதாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக் கோரியும், அயர்லாந்தின் கால்வே நகரிலும், அதன் தலைநகரான டப்ளினிலும், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது இருகரம் நீட்டி வற்வேற்கத் தக்கதாகும்.
கத்தோலிக்க மதகுருமார்கள் மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மதங்களின் குருமார்களும், உடைமை வர்க்கத்தவர்களும், பிற பிற்போக்காளர்களும் காலங்காலமாய் கருக்கலைப்பை எதிர்த்தே வந்துள்ளனர். மக்கள் எழுப்பிய ஜனநாயகக் குரல்களால்தான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கருக்கலைப்பு சமீப காலங்களில்தான் சட்டபூர்வமாக்கப்பட்டது.
கடவுள் கொடுத்த சிசுவைக் கலைப்பது எவ்வகையிலும் பாவம்தான் என்று சொல்லும் மதகுருமார்கள், கோடானுகோடி கடவுளின் குழந்தைகள் பேரிலும், வறுமையிலும் இன்ன பிற வன்கொடுமைகளிலும் தம் வாழ்வை இழப்பதைத் தடுக்க என்ன செய்து விட்டார்கள்? கடவுளின் ராஜ்ஜியம் பரலோகத்தில் பிரகாசித்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த உலகத்தில் மனிதர்களை அவர்கள் பகுத்தறி வின்படி வாழ விடுங்கள்.
பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவே பார்க்கின்ற தனியுடைமைச் சமூக அமைப்பு, அவள் வயிற்றில் வளரும் சிசுவின் மீதான அவளது உரிமையையும் மறுத்தே வந்துள்ளது. அச்சிசு எப்போதும் ஆணின், வாரிசு அல்லவா? அதை ஒழுங்காக பெற்றுக் கொடுக்க வேண்டியது அவள் கடமையல்லவா? ஒரு பெண் தன் உடல் நலம் மற்றும் மனநலம் பேணிட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேவையை ஒட்டி கருக்கலைப்பு செய்து கொள்வது, அனுமதிக்க முடியாத அபச்சாரமாகவே சில விந்தை மனிதர்களுக்குத் தோன்றுகிறது. தன் உடல்மீதும், உயிர்மீதும் வேறு எதன் மீதும் பெண்ணுக்கு உரிமையிருப்பதில்லை.
கருக்கலைப்பு, பெண்ணின் விருப்பப்படி யானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் ஆக்கப்பட்டுவிட்டால் பெண்ணின் கற்பு நிலையில் பிறழ்வுகள் ஏற்பட அது வழிவகை செய்துவிடாதா என்ற ஆணாதிக்கச் சிந்தனை களின் கவலைக் கொந்தளிப்புகளும் கருக் கலைப்புக்கு எதிரான அணுகுமுறைக்கு வரலாற்றுரீதியான காரணங்களில் ஒன்று.
வரலாறு நிச்சயமாய் முன்னோக்கிச் செல்லும். பெண்கள் இன்றைய சமூகத்தில் சந்திக்கிற அனைத்துத் ஆணாதிக்கத் தடை களையும் உடைத்தெறிகிற பொதுவுடைமைச் சமூகத்தை நோக்கி படிப்படியாய் நடை போட்டுச் செல்லும்.