COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 22, 2012

11

களம்

ஒப்பந்தத் தொழிலாளர் உரிமை காப்போம்!

ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் நாடு முழுவதும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் படுமோசமான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராக, நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாளில் ஏஅய்சிசிடியு நாடு முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கட்டமைத்தது.

நவம்பர் 7 அன்று காலை 7.30 மணியளவிலேயே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.ஜி.தேசிகன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜம்போ பேக் லிமிடெட் நிறுவனத்தில் 700 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் உள்ளனர். நவம்பர் 7 அன்று நிரந்தர தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயாராயினர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க, வாகனங்களில் வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை இறங்க அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் சொன்னதற்கு எதிராக தோழர்கள் ஜானகிராமன் எ.எஸ்.குமார் தலைமையில் திரண்டிருந்த நிரந்தரத் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் சூழல் உருவானது. நிர்வாகம் காவல் துறை மூலம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பிரித்து நிறுத்தி மிரட்ட செய்த சதியும் முறியடிக்கப்பட்டது. காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களுமாக 300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் மற்றும் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் .எஸ்.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச போனஸ் 20 சதம் என்பதை உச்சவரம்பு இல்லாமல், வாங்குகிற சம்பளம் அனைத்திற்கும் சேர்த்து தருவதாக நிர்வாகம் முன்வந்தது. இதை வரவேற்ற சங்கம், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் இதுபோன்ற போனசை வழங்கக் கோரியது. நிர்வாகம், தற்போது பின்வாங்கிவிட்டது. காண்ட்ராக்ட் தொழிலாளர்களை கைவிட்டால், இந்த ஆண்டு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்திருக்கும். ஆனால்,தொழிலாளர் அனைவருக்கும் ஒரே மாதிரி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால் நிர்வாகம் போனஸ் பிரச்சனையை முடிக்காமல் காலம் கடத்தி நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் மத்தியில் சங்கம் கட்டியுள்ள ஒற்றுமையை குலைக்க சதி செய்கிறது. போராட்டம் தொடர்கிறது.

காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் மருத்துவமனை நிரந்தரத் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு சங்கத்தில் உள்ளனர். செவிலியர், பரிசோதனைக் கூடங்களில் வேலை செய்பவர்கள் ஆம்புலன்சில் இருப்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என விதவிதமான வேலைகளை செய்கிற அனைவரும் பல ஆண்டுகளாக சங்கம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். சமீபகாலங்களில் நிர்வாகம் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி போடும் விதம் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் முறையில் மேற்கண்ட பணியிடங்களை பூர்த்தி செய்துள்ளது. ஆனால், சம்பளம் மிகவும் குறைவு. எனவே ஏஅய்சிசிடியுவைச் சேர்ந்த தோழர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையுடன் அவர்களை சங்கமாக்க முயற்சி செய்தனர்.

காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சங்கத்தில் சேராமல் இருக்க நிர்வாகம் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்தது. நிரந்தர தொழிலாளர் தோழர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை முன்னிறுத்த, கோரிக்கை நாளை முழுமையாக அமல்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதை தடுக்க நிர்வாகம் எடுத்த முயற்சிகளை முறியடித்து, 07.11.2012 அன்று மதியம் 2.00 மணியளவில் 50க்கும் மேற்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மருத்துவமனை வாயிலில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் குமரேஷ், முறபோக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி, தோழர் குப்பாபாய், முற்போக்கு பெண்கள் கழக தலைவர் தோழர் லில்லி, சங்கத்தின் நிர்வாகிகள் தோழர்கள் கிரிஜா, ஜேம்ஸ், குமரேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

திருபெரும்புதூரில் ஹூண்டாய் தொழிலாளர்கள், நிர்வாக ஆதரவு சங்கத்துடன் முடிக்கப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என போராடிக் கொண்டிருந்த நேரத்தில் நவம்பர் 7 அன்று போராடுகிற தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், திருப்பெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் துணை நிறுவனங்களில் வேலை செய்யும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியும் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பகுதி ஏஅய்சிசிடியு பொறுப்பாளரான தோழர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, செயலாளர் தோழர் பழனிவேல், மாலெ கட்சி சென்னை மாவட்ட செயலாளர் தோழர் சேகர், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் இரணியப்பன், ஒருமைப்பாடு மன்ற பொறுப்பாளர் தோழர் ராஜகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஹூண்டாய் துணை நிறுவனங்களில் உள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர்களும், புரோலக் ஜி.. தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

அம்பத்தூரில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்கிற ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதியில் நவம்பர் 7 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. பகுதியில் ஓர் ஆண்டாக பொதுக் கழிப்பிடத்தில் தண்ணீர் வருவதில்லை. ஏதேதோ காரணம் சொல்லி பல மாதங்களாக குடிநீர் நிறுத்தப்பட்டுவிட்டது. பகுதியில் உள்ள ரேஷன் கடை மிகவும் சிதிலமடைந்த கட்டிடத்தில் எலி, பாம்புகள் நடமாடும் இடமாக உள்ளது. இங்கு கிடைக்கிற ரேசன் பொருட்கள் நோய் பரப்பும் கிருமிகளுடன் வழங்கப்படுகின்றன. டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தக் கோரியும் பகுதியில் அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்தப் கோரியும் தேர்தல் வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் ஏகாத்தம்மாள் தலைமை தாங்கினார். தோழர்கள் மோகன், முனுசாமி, லில்லி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Search